சென்னை லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நூற்றுக்கும் மேலான மீடியாக்காரர்கள் குவிந்துவிட்டனர். இன்னொரு புறம் வரிசையாக கேமராக்கள் அணிவகுக்க, அது ஒரு களேபரமான காலையாக அமைந்தது.
மேடையில் நடுநாயகமாக தெலங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்! தெலங்கானாவின் ஆளுநராக பொறுப்பேற்று 2 ஆண்டுகளும், புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டும் நிறைவு பெற்றதை முன்னிட்டு தனது ‘பயணம்’ குறித்து 2 புத்தகங்களை வெளியிட்டார் தமிழிசை.
மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரையாக அழைத்து புத்தகங்களை தன் கையாலேயே தந்து சந்தோஷப்பட்டார் ஆளுநர். ஒவ்வொருவரும் மேடை ஏறும்போது, ‘நலம்’ விசாரித்துவிட்டு தந்தார். இதற்கு முன்னர் சாதனை விளக்க காணொலி காட்சியும் உண்டு.
புத்தகங்களை தந்தபின் மேடையை விட்டு இறங்கி பத்திரிகையாளர்களில் ஒருவராக நடுவே அமர்ந்துகொண்டார் தமிழிசை.
பின்னர் பாஜகவின் நாராயணன் மீடியாக்காரர்களை அழைக்க ஒவ்வொருவரும் ஆளுநரோடு தங்களுக்குள்ள ஆழமான நட்பை பகிர்ந்துகொண்டனர்.
நக்கீரன் கோபால், கார்த்திகைச்செல்வன், ரங்கராஜ் பாண்டே, ஈவேரா, எஸ்.பி.லட்சுமணன், மை.பா.நாராயணன், என்று வரிசையாக தமிழிசையின் உழைப்பு, வலிமை பொறுமையை ஜாலியாக விவரித்தனர். அவ்வப்போது கைகொட்டி சிரித்தனர் ஆளுநரும் அவருக்கு அருகில் இருந்த கணவர் டாக்டர்.சவுந்தரராஜனும்.
இறுதியாக ஏற்புரைக்கு எழுந்த தமிழிசை, எடுத்த எடுப்பிலேயே புதுவை மற்றும் தெலங்கானா முதல்வர்களை ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்!
தெலங்கானா முதல்வரை புலிக்கு ஒப்பிட்டு, “அந்த ஆபத்தையே சமாளித்துவிட்டேன். சமாளிக்கிறேன். இனி எதற்கும் அச்சமில்லை” என்று சிரித்தவர் தொடர்ந்தார்.
“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் பதவிக்கு வந்தபின் அந்த ஜனநாயகத்தை பின்பற்றுவதில்லை. எம்.எல்.சி பதவிக்கு ஒருவரை சிபாரிசு செய்து எனக்கு அனுப்பினார் முதல்வர். நான் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டுவிடுவேன் என்று நம்பினார். நான் போடவில்லை என்றதும் அவருக்கு கோபம். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு இருப்பது எனக்குத் தெரியும். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு தலைவலி தருகிறார்.
நானும் சாமர்த்தியமாக தப்பித்து வருகிறேன். புதுச்சேரியில் வேறுமாதிரியான கதை. இங்கு அவ்வளவாக சிக்கல்கள் இல்லை” என்று தமிழிசை சரவெடியை கொளுத்திப்போட மீடியாக்காரர்கள் முகத்தில் திகைப்பு.
பின்னர் ஆளுநர் தந்த மதிய விருந்தில் இதுபற்றியே பலரும் விவாதித்துக்கொண்டனர்.
“அவர் விளைவுகளை அறிந்துதான் பேசுகிறார்” என்றார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்! உண்மை!
என்னமோ நடக்கிறதா… என்னமோ நடக்கப் போகிறதா… பொறுத்திருப்போம்!