No menu items!

நியூஸ் அப்டேட்: ஆளுநர் வாகனம் தாக்கப்படவில்லை – முதல்வர் விளக்கம்!

நியூஸ் அப்டேட்: ஆளுநர் வாகனம் தாக்கப்படவில்லை – முதல்வர் விளக்கம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றிருந்தார். அப்போது ஆளுநருக்கு  எதிர்ப்புத் தெரிவித்து சில அரசியல் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஆளுநரின் வாகனம் மீது கருப்புக் கொடியோ கற்களோ வீசப்படவில்லை என காவல்துறையில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு எந்த சமரசமும் செய்துக்கொள்ளாது. ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. டெல்லி சென்றார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 2 நாள் பயணமாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரிக்கை வலுத்துள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் காவல்துறை துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும், அதிபர் கோத்தபய உள்பட ராஜபக்சே சகோதரர்கள்  பதவிவிலக  வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரம்புக்கனா என்கிற இடத்தில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 15க்கும் மேற்பட்ட பொதுமக்களும்  8 காவலர்களும்   காயமடைந்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.  இலங்கை மனித உரிமைகள் ஆணையம்,  பொதுமக்கள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் கொரோனா: முககவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்படவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இது ஒவ்வொருவரும் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்கு செய்யவேண்டிய காரியமாகும்” என்று கூறினார்.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “முகக்கவசம், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.  அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி, 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் கமான்டராக பணியாற்றியவர். ஜார்ஜ் வாஷிங்க்டன்  பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் சாந்தி சேத்தி முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...