திரையுலகில் தனது கவர்ச்சியால் அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்த்த ரோஜாவால், அரசியலில் அந்தளவிற்கு உச்சத்தை எளிதில் தொட முடியவில்லை.
ஆனாலும் அவரது விடாமுயற்சிக்கு தற்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான அமைச்சரவை கடந்த திங்கள்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. அதில் 49 வயதான ரோஜா, சுற்றுலாத்துறை அமைச்சராக புதுகளம் காண்கிறார்.
1998-ல் தனது சினிமா கவர்ச்சியை முன்னிறுத்தி தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) சேர்ந்ததன் மூலம் அரசியல் பயணத்தை தொடங்கினார் ரோஜா.
படபடவென பேசுவது, மளமளவென பிரச்னையை கிளப்புவது என்ற பரபரப்பான ஆளாக இருந்ததனால் வெகு விரைவிலேயே தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவர் பதவி ரோஜாவைத் தேடி வந்தது.
கட்சியிலும் வெகு சீக்கிரமே முக்கியத்துவம் பெற்றார். ஆனால் அவருக்கு இருந்த நட்சத்திர அடையாளம் தேர்தலில் எந்தவிதமான பலனையும் கொடுக்கவில்லை.
2004-ல் நடைபெற்ற தேர்தலில் நகரி தொகுதியில் ரோஜாவைப் பார்த்து கையசைத்து கொண்டாடியவர்கள் யாரும், ஓட்டு போடவில்லை. தோல்வியினால் வாடிப்போன ரோஜாவானார். ஆனாலும் ரோஜாவுக்கு இருந்த கவர்ச்சி அடையாளத்தை நம்பி, 2009-ல் சந்திரகிரி தொகுதியில் அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நிறுத்தினார், ஒரு அரசியல்வாதியாக இந்த முறையும் அவரால் மக்களை நெருங்க முடியவில்லை. தேர்தலில் தோல்வியடைந்தார்.
தான் பிறந்த சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பாபு நாயுடு என்பதால் அவர் மீது ரோஜாவுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால் தனக்கு இரண்டு முறை சீட் ஒதுக்குவதில் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே உள்ளடி வேலைப் பார்த்து கவிழ்த்து விட்டதாக ரோஜாவுக்கு கோபம் எழுந்தது.
இதனால் 2009-ல் தெலுங்கு மகிளா தலைவர் பதவியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார்.
அத்துடன் விட்டுவிடவில்லை. சந்திர பாபு நாயுடுவை நம்பியவர்களுக்கு அவர் நீதி வழங்க மாட்டார் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்
அந்நேரம், காங்கிரஸ் கட்சி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையில் 2009-ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சியைப் பிடித்தது. உடனே ரோஜா காங்கிரஸில் இணைய விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ராஜசேகர ரெட்டியின் மரணம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்களால் அரசியல் ஆடுகளத்தில் தாக்குப்பிடிக்கமுடியாத ரோஜாவின் அரசியல் பயணம் தள்ளாட ஆரம்பித்தது.
இதனால் அரசியல் விமர்சகர்கள் ரோஜாவை ‘அயர்ன் லெக்’ லேடி என்று விமர்சித்தார்கள். பொதுவாய் திரைத்துறையில் ஒரு ஹீரோ அல்லது ஹீரோயின் படங்கள் தோல்வியுற்றால் அயர்ன் லெக் (Iron Leg) என்று கூறுவார்கள்.
அரசியலில் ரோஜாவுக்கு தொடர் தோல்விகள் ஏற்பட்டதால் அவர் கால் வைத்த இடம் உருப்படாது – Iron Leg – என்று கிண்டலடித்தனர். பதிலுக்கு ரோஜாவும் டிக்ஷ்னரியில் இடம்பெற முடியாத வார்த்தைகளால் எதிர் தரப்பினரை தாக்கினார்.
ரோஜாவின் அரசியல் இப்படி போய்க் கொண்டிருந்தபோது ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸில் இருந்து வெளியேறி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். உடனே அக்கட்சியில் இணைந்தார் ரோஜா. அங்கே தொடங்கியது ரோஜாவின் வளர்ச்சி. 2014-ல் நடைபெற்ற ஆந்திரா பொதுத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக, ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.
2016-ல் ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் உறுப்பினர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியதற்காக ஒரு வருடம் சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரது கடுமையான தாக்குதல்களுக்கு அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் தப்ப முடியவில்லை.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 2019 பொதுத் தேர்தலில் வென்று ஆந்திராவின் ஆட்சி பீடத்தில் அமர்ந்த போதே, அமைச்சரவை பட்டியலில் ரோஜாவின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு ஆந்திர பிரதேஷ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் கார்பொரேஷனின் சேர்மன் பதவியும் வழங்கப்பட்டது.
’கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது நிச்சயம் வாய்ப்பளிக்கிறேன்’ என்று ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த வாக்கை நம்பி பொறுமையாக இருந்ததற்காக ரோஜாவுக்கு கிடைத்திருக்கும் பரிசுதான் இந்த அமைச்சர் பதவி.
இப்போது சுற்றுலா துறை அமைச்சராக, அரசியலில் தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார்.
வழக்கம் போல, ரோஜா தனது கமெண்ட் கலாட்டாவை ஆரம்பித்துவிட்டார். ’நான் நீங்க நினைக்கிற மாதிரி அயர்ன் லெக் (Iron Leg Lady) லேடி இல்லடா. ..கோல்டன் லெக் லேடிடா (Golden Leg Lady)’ என்ற பஞ்ச் உடன் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.
ரோஜான்னா ஃப்ளவர் இல்லடா..ஃப்யர்!