No menu items!

கவுன்சிலர்களுக்கு கிளாஸ் – மிஸ் ரகசியா

கவுன்சிலர்களுக்கு கிளாஸ் – மிஸ் ரகசியா

‘இந்தி தெரியாது போடா!’ என்ற வாசகங்களுடன் கூடிய கருப்பு டி ஷர்ட்டை அணிந்து ஆபீசுக்கு வந்திருந்த ரகசியாவை ஆச்சரியத்துடன் வரவேற்றோம்.

“ஒரு வாரம் முன்னதானே இந்தியில பேசிட்டே ஆபீசுக்கு வந்தே. இப்ப திடீர்னு ந்திக்கு எதிரா இப்படி கருப்பு டி ஷர்ட்டோட வர்றியே. உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல” என்றோம்.

“எந்த மொழியா இருந்தாலும் சரி. விரும்பி கத்துக்கறதா இருக்கணும். அதே நேரம் அந்த மொழியை நம்ம மேல திணிக்கறதா இருந்தா ஏத்துக்க முடியாது. இது என் பாலிசி மட்டுமில்ல, ஒட்டு மொத்த தமிழ் நாட்டோட பாலிசி” என்று சிரித்துக்கொண்டே விளக்கத்தைக் கொடுத்தார் ரகசியா.

“நல்ல பாலிசிதான். ஆனா எனக்கென்னவோ பெட்ரோல், டீசல், எண்ணெய், காஸ் விலையேற்றங்களை மறைக்கிறதுக்காக இந்த பிரச்சினையை எழுப்பறாங்களோன்னு தோணுது”

“இது வருஷம் வருஷம் நடக்கிறதுதான். நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில உள்துறை அமைச்சர்கள் இப்படி பேசுறது வழக்கம்தான் என்று சமாளிக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், இத்தனை எதிர்ப்பு வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லையாம். முக்கியமாய் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து மறைமுக எதிர்ப்பு வந்தது அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.”

“அதானே ஏ.ஆர். ரஹ்மானே எதிரா பேசிட்டாரே?”

“ஆனா ஏ.ஆர். ரஹ்மானை எதிர்க்க வேண்டாம்னு கட்சியினருக்கு உத்தரவு போயிருக்காம். தமிழ் நாட்டின் முக்கியமான நபரான ரஹ்மானை எதிர்த்து பேசினால் அது பாஜகவுக்கு பாதகமாக போகும்னு பாஜக தலைமை நினைக்கிறதாம். அது மட்டுமில்லை, தமிழை நாங்க எதிர்க்கல அந்நிய மொழியான ஆங்கிலத்தைதான் வேண்டாம்னு சொல்றோம்னு ஒரு ட்விஸ்ட் கொடுக்க சொல்லி உத்தரவாம்.”

“தமிழ் நாட்டுக்காரங்களுக்கு இதெல்லாம் புரியாதா? இங்கிலிஷை அனுப்பிட்டு அந்த இடத்துல இந்தி வந்து உக்காரும். அப்புறம் தமிழுக்கே ஆப்பு வைக்கும். கூட்டணி அமைச்சு ஆட்சியைப் பிடிக்கிறவங்கதானே அவங்க.”

“கரெக்டா சொன்னீங்க. ரஹ்மான் மட்டுமில்லாம அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இந்திக்கு எதிரா அறிக்கை வெளியிட்டிருப்பதும், சட்டசபைல செங்கோட்டையன் தமிழ்நாட்டுல திராவிட ஆட்சிதான்னு பேசினதையும் பாஜக ரசிக்கவில்லை. எடப்பாடி இந்த விஷயத்துல கருத்து எதுவும் சொல்லாம கமுக்கமாக இருந்ததையும் கவனிக்கணும்.”

“ராஜ்ய சபா பதவிகளுக்காக எல்லா கட்சிகள்லயும் போட்டி இருக்குதாமே.”

“ஆமா. தமிழகத்துல இருந்து தேர்வாகப் போற 6 ராஜ்யசபா உறுப்பினர்கள்ல அதிமுக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்கும். இதுல ஓபிஎஸ் ஆதரவாளருக்கு ஒரு பதவியையும், இபிஎஸ் ஆதரவாளருக்கு ஒரு பதவியையும் கொடுக்கறதா பேச்சு இருந்தது. ஆனா இப்ப இந்த 2 சீட்ல ஒரு சீட்டை தங்களுக்கு தரணும்னு பாஜக கேட்குதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அதிமுக மூத்த தலைவர்கள் குழம்பிட்டு இருக்காங்க.”

“பாஜகவை எப்படி அவங்களால எதிர்க்க முடியும்? கஷ்டம்தான்.”

“இன்னொரு கஷ்டமும் இருக்கு.

முன்னாள் நீதியரசரும் ராஜ்ய சபை சீட் கேக்குறாராம். அவர் எடப்பாடிக்கு க்ளோஸ். ஊர் நட்பு. ரிட்டயர்ட் ஆன பிறகு பெரிய பதவிலாம் வகிச்சவர். டெல்லில செல்வாக்கு மிக்கவர். அவருக்கு எப்படி சீட் கொடுக்கிறதுனு எடப்பாடி தரப்பு யோசிக்கிட்டு இருக்காங்க. அதிமுகவுக்கு திண்டாட்டமான சூழல்தான்.”

“ஓஹோ.”

“இதே குழப்பம் காங்கிரஸ் கட்சியிலயும் நீடிக்குது. சமீபத்துல டெல்லி போன முதல்வர் மு.க. ஸ்டாலின்கிட்ட தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கணும்னு சோனியா காந்தி கேட்டிருக்காங்க. ப. சிதம்பரத்தை மனசில வைச்சுட்டு இந்த சீட்டை அவர் கேட்டதா சொல்லப்படுது. ஆனா அதே நேரத்தில் இ.வி.கே.எஸ். இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இப்ப அந்த எம்.பி. பதவிக்காக லாபி பண்ணிட்டு இருக்காங்களாம். இதற்காக ஈவிகேஎஸ் இப்போ அடிக்கடி டெல்லி போய்ட்டு வந்துக்கிட்டு இருக்காராம்.”

“திமுகவாவது யாருக்கு சீட் கொடுக்கறதுங்கிறதுல தெளிவா இருக்காங்களா?”

“யாருக்கெல்லாம் எம்.பி. சீட் கொடுக்கலாம்னு கட்சி ஏற்கெனவே முடிவு செய்திருக்கிறதா சொல்றாங்க. தன்னுடைய ராஜ்யசபா சீட் பதவிக்காலம் முடிவுக்கு வர்றதால மீண்டும் வாய்ப்பு தரணும்னு ஆர்.எஸ். பாரதி கேட்டுட்டு இருக்காராம். இது சில திமுக தலைவர்களுக்கு பிடிக்கலை. எத்தனை தடவைதான் ஒரே ஆளுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பாங்கன்னு முணுமுணுத்துக்கிட்டு இருக்காங்க.”

“முதல்வருக்கு கவுன்சிலர்கள் மேல அதிருப்தியாமே.”

“ஆமாம். கவுன்சிலர்கள் மட்டுமில்லாம அவங்க குடும்பத்தினர் செய்கிற செயல்கள் முதல்வர் கவனத்துக்கு போயிருக்கு. எரிச்சலாகிட்டாராம். கவுன்சிலர்கள்தான் மக்களோட நெருங்கி பழகுறவங்க. அவங்க மேல அதிருப்தி வந்தா அது கட்சியை பாதிக்கும்னு சொன்னாராம். அது மட்டுமில்லாம கவுன்சிலர்களுக்கும் மேயர்களுக்கும் தங்களோட பதவி பத்தி சரியா தெரியல என்ற தகவல்களும் வந்துருக்கு. அதுனால மேயர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகளை வைத்து வகுப்பு நடத்த சொல்லியிருக்கிறாராம். ஸ்கூலுக்குப் போகாத கவுன்சிலர்கள் கூட இனி இந்த வகுப்புகளுக்கு போயாகணும்” சிரித்தார் ரகசியா.

“அமித் ஷா புதுச்சேரிக்கு வர்றாரே?”

“ஆமா இந்த பயணத்தின்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பா தமிழிசை கிட்ட அவர் பேசுவார்னு பாஜக பட்சிகள் சொல்லுது.”

“பாஜகவுல யோகி ஆதித்யநாத்துக்கு அதிகாரம் அதிகரிக்குதுனு சொல்றாங்களே?”

“பாஜகவைப் பொறுத்தவரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இப்ப ஏறுமுகம். கட்சியோட அதிகாரம் பொருந்திய அமைப்பா இருக்கிற ஆட்சி மன்றக் குழுவுல அவரை சேர்க்க போறதா தகவல்கள் வந்திருக்கு. இந்த ஆட்சி மன்ற குழுவுல 11 பேர் இருப்பாங்க. பாஜகவின் செயல் திட்டங்களை, வியூகங்களை அமைக்கிறது இந்தக் குழுதான். அந்தக் குழுவுல யோகி ஆதித்யநாத்தை சேர்க்கிறது முக்கியமான விஷயமா பார்க்கப்படுது. இதுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்போட ஆதரவும் இருக்கு. இப்படியே போனா கூடிய விரைவில பிரதமர் மோடிக்கு நிகரா அவர் வளர்றதுக்கும் வாய்ப்புகள் இருக்கிறதா பேசிக்கிறாங்க.”

“அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்னு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கே?”

“இந்த தீர்ப்பினால எடப்பாடியார் ரொம்ப சந்தோஷமா இருக்காராம்.

இந்த தீர்ப்பால சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்திருக்கிறது. அவருக்கு நிதி பிரச்சினை இருக்கு. அதிமுகவுல அவர் முக்கிய பொறுப்புக்கு வருவார்னு பலர் நிதி உதவி செய்து வருகிறார்கள். சமீபமா அந்த நிதி வரவு குறைந்துக்கிட்டே வருது.

இப்போ இந்தத் தீர்ப்பும் இப்படி வந்திருக்கிறது அவருக்கு நிதி உதவி செய்றவங்களை யோசிக்க வச்சிருக்காம். நிதிக்கு என்ன செய்யறதுனு சசிகலா தரப்பு யோசிக்கிட்டு இருக்கு. பாவம்.”

“வேறு ஏதும் செய்திகள் இருக்கிறதா?”

“தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ்.சவுமியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தங்கமான அமைச்சர் ஒருவரின் சிபாரிசால் அவருக்கு இப்பதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஒருவருக்கு இதில் மிகவும் வருத்தமாம்” என்று கூறி கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...