No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்குக் கனமழை

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்குக் கனமழை

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து மழையால் கோடை வெப்பம் கொஞ்சம் தணிந்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மோசடி செய்து அரசு பணியில் சேர்ந்தது அம்பலம்

வடமாநிலத்தவர்கள் மோசடி செய்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழக மத்திய அரசு நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட வடமாநிலத்தவர்கள் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தமிழக தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து மத்திய அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் சேர்ந்து உள்ளனர். அஞ்சலக துறை, சிஆர்பிஎப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இவ்வாறு நடந்து உள்ளது. யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் இவை போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்து உள்ளது.

அஞ்சலக துறை 2016-ம் ஆண்டு நடத்திய தேர்வில் வட இந்தியர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள் தமிழ் பாடத்தில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களது தேர்ச்சி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட்இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை: நெல்சன் பேட்டி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் நெல்சன் அளித்துள்ள பேட்டியில், “குவைத் உள்ளிட்ட சில நாடுகளில் ‘பீஸ்ட்’ படத்தில் இஸ்லாமியர்களைத் தவறாக சித்தரிப்பதாக சொல்லி வெளியிட தடை செய்திருக்கிறார்கள். உண்மையில் படத்தில் அப்படி காட்சிப்படுத்தி இருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எடுத்த படம். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்தி திணிப்பு: அமித் ஷா பேச்சுக்கு வடகிழக்கு மாநில மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற அலுவல் மொழி குழுக் கூட்டத்தில் இந்தி மொழி குறித்து பேசியவை தமிழகம் உள்படப் பல மாநிலங்களில் சர்ச்சையாகி உள்ளது. அந்தக் கூட்டத்தில், அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அங்குள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை, இந்தி மொழியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு வடக்கு கிழக்கு மாணவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, 8 மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பான வடக்கு கிழக்கு மாணவர்கள் அமைப்பு (நேசோ) அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “இந்த சாதகமற்ற பொருந்தா கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த நடவடிக்கையானது பூர்வீக மொழிகளுக்கு கேடு விளைவிப்பதோடு, ஒற்றுமையை சீர்குலைக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை: ராஜபக்சே சகோதரர்களைப் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம்

இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் கடும் சிக்கலாக மாறி வருகிறது. பெட்ரோல், டீசல், காஸ், மின்சாரம், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் கடுமையாக ஏறி உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா கையெழுத்திட்டுள்ளார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...