இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இலங்கை அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதன்படி நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளியுறவுத் துறை அமைச்சராக ஜி.எல். பீரிஸ், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு – நாடாளுமன்றத்தில் அமளி
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் முதலில் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு குறித்து விவாதிக்கும்படி மீண்டும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
ரூ.4,805 கோடி நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரூ.5,200 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 % கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ஹெச்டிஎப்சி வங்கியுடன் ஹெச்டிஎப்சி வீட்டுக்கடன் நிறுவனம் இணைகிறது
நாட்டின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமாக ஹெச்டிஎப்சி செயல்பட்டு வருகிறது. இதுபோலவே நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக ஹெச்டிஎப்சி விளங்குகிறது. இந்த 2 நிறுவனங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹெச்டிஎப்சி நிறுவனத்திடம் 6.23 லட்சம் கோடி ரூபாய் மத்தியிலான சொத்துக்களும், ஹெச்டிஎப்சி வங்கியிடம் 19.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளன. இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.