விஜய் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ பீவர் உச்சம் தொட்டுள்ளது. படத்தின் இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானா ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ:
‘பீஸ்ட்’ படத்துக்கான இசை வெளியீட்டு விழா நடக்காததால் அதிருப்தியில் உள்ள ரசிகர்களை திருப்திப்படுத்த சில திட்டங்களை படக்குழுவினர் வைத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போவின் இறுதி நாளான மார்ச் 31-ம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
ஜாலி ஓ ஜிம்கானா பாடலை கவிஞர் கு.கார்த்திக் எழுதியிருக்கிறார். ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஆஹா கல்யாணம் பாடலை எழுதியவர். கோயம்புத்தூர்காரர். அனிருத் அணியில் இப்போது இணைந்துவிட்டார்.
‘பீஸ்ட்’ ஒரு பான் இந்தியா படம் என்பதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் பிரமோஷனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் விஜய் கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் டியூனைக் கேட்ட நெட்டிசன்கள் சிலர், இது காப்பி அடிக்கப்பட்ட டியூன் என்று சொல்லி ட்ரோல் செய்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் வரும் ‘பீலா பீலா’ பாடலின் டீயூனைக் காப்பி அடித்து ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு அனிருத் இசை அமைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்படி சொல்பவர்களை குறித்தெல்லாம் கவலைப்படாமல் பாடாலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ஆக்ஷன் நிறைந்த ப்ளாக் காமெடி படமாக பீஸ்ட் ரெடியாகி இருப்பதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டைக்காட்சிகள் நிறைய இருப்பதாக ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு கூறியுள்ளனர். பீஸ்ட் படத்துக்காக எடுத்த முதல் காட்சியே ஜார்ஜியாவில் நடந்த சண்டைக்காட்சிதான். இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதில் பல ஷாட்களை சிங்கிள் டேக்கில் ஓகே செய்திருக்கிறாராம் விஜய்.