திருப்பதி கோயில், மலையடிவார பகுதிகளில் நள்ளிரவு சிறுத்தை நடமாடியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி மலையடிவாரத்தில் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கென விடுதிகள் உள்ளது. மலையடிவார வனப்பகுதியில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவ்வப்போது சிறுத்தைகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் வனத்துறையினர் தங்கி அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட முறை பல்லைக்கழகத்திற்குள் சிறுத்தை வந்து சென்றது. இதனை சிசிடிவி மூலம் வனத்துறையினர் பார்த்து கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் மாலையில் தனியாக நடந்து செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி ஆங்காங்கே பல்கலைக்கழக வளாகத்தில் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் மீண்டும் ஒரு சிறுத்தை புகுந்தது. அப்போது அங்கிருந்த ஒரு நாயை திடீரென கவ்விக்கொண்டு சென்றது. இதனை விடுதியில் இருந்த மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். அதற்குள் நாயை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சிறுத்தை ஓடிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் நேற்று மாலை திருமலை ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள சர்வ தரிசன வரிசையில் உள்ள பாறை மீது மற்றொரு சிறுத்தை அமர்ந்திருந்தது. இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோ எடுத்து வனத்துறைக்கு அனுப்பினர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து பார்ப்பதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.