No menu items!

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்

டீப்சீக் ஏஐ செயலியை சீனா வெளியிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வரவால் அமெரிக்க நிறுவனங்கள் அலறிப்போய் உள்ளன. செயற்கை நுண்ணறிவுக்காக பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படும் நிலையில், மலிவான விலையில் அபாரமான திறனுடன் ஏஐ செயலியை சீன நிறுவனம் உருவாக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது.

அனைத்து சேவைகளிலும் சுயமாக சிந்தித்து செயல்படக் கூடியதும், சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியதுமான இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் மேம்படுத்துவதிலும் அமெரிக்க ஐடி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி போன்றவை முன்னணி ஏஐ தொழில்நுட்பங்களாக உள்ளன. இவற்றை இந்நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொட்டி தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், மலிவு விலைக்கு பேர் போன சீனா, தற்போது ஏஐ தொழில்நுட்பத்திலும் மலிவு விலை செயலியை வெளியிட்டு உலகையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்துள்ளது. சீனாவின் ஹேங்ஜூ நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி லியாங் வென்பெங் கடந்த 2023ல் தொடங்கிய டீப்சீக் நிறுவனம் கடந்த 20ம் தேதி அதன் டீப்சீக் வி3 மற்றும் டீப்சீக் ஆர்-1 எனும் 2 விதமான ஏஐ செயலிகளை வெளியிட்டது. இரு செயலிகளும் வெளியான சில நாட்களிலேயே வேகமாக பிரபலமடைந்துள்ளன. ஒட்டுமொத்த ஏஐ தொழில்நுட்பத்தில் டீப்சீக் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

அமெரிக்காவின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவச முன்னணி ஆப்களில் சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளி டீப்சீக் ஏஐ முதலிடத்தை பிடித்துள்ளது. ஏஐ பயனர்கள் மத்தியில் டீப்சீக் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு காரணம் சாட்ஜிபிடியை விட சிறந்த செயல்திறனுடன் முற்றிலும் இலவசமாக டீப்சீக் இருப்பதுதான்.

கணிதத்துறையில் டீப்சீக் அளிக்கும் பதில்கள் மிகத்துல்லியமாக உள்ளன. சிக்கலான கணக்குகளை தீர்ப்பதிலும், கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் டீப்சீக் 92 சதவீத மதிப்பெண் பெறுவதாகவும், இதுவே சாட்ஜிபிடி 78 சதவீத மதிப்பெண் பெறுவதாகவும் தேவ்.டு எனும் சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கான பிரபல ஆன்லைன் சமூக ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது பயனர்களை கவர்ந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்களை அலற வைத்த விஷயம் டீப்சீக்கை உருவாக்க வெறும் ரூ.500 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டது என்கிற தகவல்தான். ஏஐ மாடல்களை உருவாக்க என்விடியா எச்800 சிப்கள் அவசியம். அவைகள் தான் ஏஐ மாடல்களை பயிற்றுவிக்க தகவல்களை சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிப்கள் மிகவும் விலை உயர்ந்தவை. கடந்த 2023ல் இந்த வகை சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகம் தடை விதித்தது. அப்படியிருந்தும், டீப்சீக் சாதனை படைத்துள்ளது. குறைந்த செயல்திறன் சிப்கள் மூலமாகவும் திறன்வாய்ந்த ஏஐ செயலியை உருவாக்க முடியும் என்பதை சீனா செய்து காட்டி உள்ளது.

இதனால் என்விடியா நிறுவனம் ஒரே நாளில் ரூ.50 லட்சம் கோடி நஷ்டமடைந்து அதன் பங்குகள் 17 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதோடு அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் தங்கள் முதலீட்டு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை, ஓபன்ஏஐ நிறுவன தலைவர் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவன தலைவர்கள் டீப்சீக்கை வெகுவாக பாராட்டி உள்ளனர். எனவே டீப்சீக்கின் வரவு, ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஏகபோகத்திற்கு வேட்டு வைத்துள்ளது. குறைவான செலவில் செயல்திறன் மிகுந்த ஏஐயை உருவாக்க அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போது மண்டையை போட்டு குழப்பிக் கொண்டுள்ளனர். இது இத்துறையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

‘இது எச்சரிக்கை மணி’

டீப்சீக்கை பார்த்து மிரண்டு போன அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது பேட்டியில், ‘‘சீன நிறுவனத்தின் டீப்சீக் ஏஐ வெளியீடு, அமெரிக்க நிறுவனங்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற அதீத கவனம் செலுத்த வேண்டும். உலகின் சிறந்த விஞ்ஞானிகள் நம்மிடம் தான் உள்ளனர். அது சீனாவே ஒப்புக் கொண்ட விஷயம். ஆனால் அவர்கள் மிக மலிவான ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதை நம்மாலும் செய்ய முடியும் என்பதால் இந்த விஷயத்தை நேர்மறையாகப் பார்க்கிறேன்’’ என கூறி உள்ளார்.

அசாத்திய சாதனை

  • ஏஐ தொழில்துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
  • டீப்சிக் தொடங்கப்பட்டு வெறும் 2 ஆண்டுகளே ஆகின்றன.
  • ஓபன்ஏஐ 4,500 ஊழியர்களை கொண்டுள்ளது.
  • டீப்சீக்கில் பணியாற்றுவது 200 பேர் மட்டுமே.
  • ஓபன்ஏஐ ரூ.56,100 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
  • டீப்சீக் ரூ.85 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
  • சாட்ஜிபிடி ஏஐ மாடலை உருவாக்க ஓபன்ஏஐ செலவிட்ட தொகை சுமார் ரூ.8,500 கோடி
  • டீப்சீக் ஏஐ உருவாக்க செலவிடப்பட்டது ரூ.500 கோடி. இப்போது டீப்சீக், ஓபன்ஏஐயின் போட்டி நிறுவனமாக மாறி உள்ளது.
  • நிறுவனர் விளக்கம்
    2023ல் தடை விதிப்பதற்கு முன்பாக 50,000 என்விடியா சிப்களை பெற்றதாக டீப்சீக் நிறுவனர் வென்பெங் கூறி உள்ளார். டீப்சீக்கில் வெறும் 2000 சிப்கள் மட்டுமே பயன்படுத்தி இருப்பதாக அதன் பொறியாளர்கள் கூறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...