பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் முன்முடிவு மற்றும் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “சமூகத்தில் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும் உணர்ந்தும் வருகிறோம். இதன்மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது.
இத்தகைய சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாகவும் அதிகமான சமூகப் பங்களிப்பு செய்யும் மாநிலமாகவும் தமிழகம் வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதில் உறுதியோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 86 சதவிகித வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளோம்.
பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது யாராலும் மன்னிக்கமுடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.
இந்த வகையில் BNS சட்டத்தின் கீழும் நமது மாநில அரசின் சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும் இத் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிவிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவதற்காக BNS, BNSS சட்டங்களின் மாநில சட்டத் திருத்தத்துக்கும் தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும் சட்ட முன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி, மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அதேபோல் பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடியும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் மீது நாளை விவாதம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.