துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை…
ஒருநாள்
கலைஞரும் நானும்
கோபாலபுரத்தில்
உரையாடிக்கொண்டிருந்தோம்
உதயநிதி தன் மனைவி
கிருத்திகாவோடு வந்தார்;
நின்றுகொண்டே பேசினார்
கலைஞர் மறுத்த ஒருகருத்தை
தன் வாதத்தை முன்னிறுத்திச்
சாதித்துச் சென்றார்
அப்போதே
தெரிந்துகொண்டேன்
வலிவும் தெளிவும் மிக்க
வல்லவர் இவரென்று
உதயநிதி
பேரீச்சம் பழம்போல்
மென்மையானவர்; ஆனால்
அதன் விதையைப்போல்
உறுதியானவர்
சின்னச் சின்ன எதிர்ப்புகள்
இவரைச் சிதைப்பதில்லை
குன்றிமணி முட்டிக்
குன்றுகள் சாய்வதில்லை
காலம் இவரை
மேலும் மேலும்
செதுக்கும்; புதுக்கும்
“தம்பீ வா
தலைமையேற்க வா”
அண்ணாவிடம் கடன்வாங்கி
அண்ணன் வாழ்த்துகிறேன்
கமல்ஹாசன் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழ்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மென்மேலும் சாதனைகளை படைத்து மக்கள் மனத்தில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.