தீவிர பெரியார் தொண்டரான சத்யராஜ் பெரியாரின் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் திரையில் கிடைத்த இடத்தில் சொல்வதோடு மட்டும் நிறுத்தி விடாமல், தனது வாழ்க்கையிலும் அதனை பின்பற்றி வருகிறார். விஜய், சூர்யா, அஜித் என இளம் நடிகர்கள் நடிக்க தொடங்கிய பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை கைவிட்டு குணச்சித்திர வேடங்களில் அசத்த தொடங்கினார். இன்று 2கே கிட்ஸின் பேவரைட் கட்டப்பாவாக வலம் வருகிறார் சத்யராஜ். இன்றும் பல படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் சத்யராஜ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
ஒருபுறம் சினிமாதுறையில் கொடிகட்டிப் பறந்தாலும், மற்றொருபுறம் சமூக செயற்பாட்டாளராகவும் சத்யராஜ் செயல்பட்டு வருகிறார். அரசியல் ரீதியான கருத்துக்களை பேசி விவாதத்தை ஏற்படுத்துவதோடு சமூகப் பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
திரையில் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் சத்யராஜின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த 4 ஆண்டுகளாக தனக்குள் இருக்கும் துயரத்தை துளியும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து தனது கடமையை செய்து வருகிறார். நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது மகள் திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, “என் அம்மா கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார், அவருக்கு PEG டியூப் மூலமாகத்தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் முழுவதுமாக உடைந்து விட்டோம், ஆனால் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். நிச்சயமாக அம்மா எங்களுக்கு மீண்டும் கிடைப்பார். கடந்த 4 ஆண்டுகளாக அப்பா எங்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து வருகிறார். சிறந்த சிங்கிள் பேரண்டாக எனது தந்தை இருந்து வருகிறார்.
சமீபத்தில் சீதா, ரேகா உள்ளிட்டவர்களுடன் இணைந்து சத்யராஜ் நடித்த மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் தொடர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் சத்யராஜ். சத்யராஜுக்கு சிபிராஜ் மற்றும் திவ்யா என மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சிபிராஜ் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார். தேர்ந்தெடுத்த படங்களில் அடுத்தடுத்து ஹிட்களை கொடுத்து வருகிறார். மகள் திவ்யா சினிமாவில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் ஊட்டச்சத்து நிபுணராக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.