இந்தியாவையே உலுக்கிய காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதலின்போது தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், அமரன். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்னேசனல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. கமலஹாசன் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் படத்தின் வெற்றி விழா பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார். அவர் பேசியதாவது,
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது குடும்பத்தாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமரன் உண்மை கதையை மையமாக கொண்ட திரைப்படம். சினிமாவில் இது ஒரு ஜானர். அந்த வகையில் இந்த திரைப்படம் மக்களை சென்றடைந்து இப்படி ஒரு வெற்றி நிகழ்வுக்கு வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை தாண்டி நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கு. இது மாதிரியான படங்களை அடுத்தடுத்து எடுப்பதற்கு நம்பிக்கை இருக்கு. கதாநாயகன் ஓகே சொல்லும் போது தான் இயக்குனர், தயாரிப்பாளர்களுடன் எண்ணத்திற்கு உயிர் கிடைக்கும். சிவகார்த்திகேயனின் நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை இந்த படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க மேஜர் முகுந்து வரதராஜனின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, முகுந்த் வரதராஜனின் மனைவி எனக்கு ஒரு கோரிக்கை வைத்தார். முகுந்த் தன்னை ஒரு தமிழன் என்று பெருமை கொள்வார். இந்தத் திரைப்படத்தில் முகுந்த் ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்
முகுந்து ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் ரூட்ஸ் இருக்கிற நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கணும்னு இந்து சொன்னாங்க. அதனால்தான் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வந்தார்.
மேலும், இப்படம் குறித்து பல விமர்சனங்கள் வந்தது. முகுந்த் எப்பவுமே தன்னை ஒரு இந்தியன் என்று சொல்லிக்க தான் ஆசைப்படுவான். அவன் தன்னுடைய சான்றிதழில் கூட, எந்த ஒரு குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பான். அதனால அவனுக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ஆர்மி மேனாக இந்த படத்தில் குடுங்க என்று அவரின் குடும்பத்தார் எங்களது முதல் சந்திப்பிலேயே கேட்டுக் கொண்டார்கள். அவர் வேற ஒரு சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும், இல்ல இந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அது ஒரு முக்கியமான விஷயமாக நம் பார்வையில் படவில்லை. ஏனென்றால், நாங்க அவங்க வீட்டுக்கு போகும்போது நானும் அவங்களை என்ன என்று கேட்கவில்லை. அவங்களும் என்னை என்ன என்று கேட்கவில்லை. இப்படிதான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். அதைத் தாண்டி மேஜர் முகுந்த் வரதராஜன் அசோகச் சக்கர விருதை பெற்றவர்.