No menu items!

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடை –கே.எஸ்.ஆர். பதிலடி, கஸ்தூரி பல்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடை –கே.எஸ்.ஆர். பதிலடி, கஸ்தூரி பல்டி

நடிகை கஸ்தூரி, “தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான்” என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு முத்த அரசியல்வாதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி என்ன சொன்னார்?

பிராமண சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பிராமணர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக கூறினார்.

“திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்புதான் முதல் கொள்கையாக உள்ளது. ஒவ்வொரு சமுதாயமாக பிளவுபடுத்த முயற்சி நடைபெறுகிறது. பிராமணர்களை பல்வேறு விதமாக விமர்சிக்கிறார்கள். மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள்தான், தெலுங்கு பேசியவர்கள். அவர்கள் எல்லாம், தற்போது தமிழ் எங்கள் இனம் என்று கூறுகிறார்கள். தெலுங்கர்கள் 5 பேர் தற்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் அதிக அளவில் பிராமணர்கள் பங்கேற்றனர். பிராமணர்களுக்கு எதிராக பேசுபவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடர உள்ளேன்” என்று பேசினார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சுக்கு கர்நாடகா பாஜக இணை பொறுப்பாளர் பொங்குலெடி சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். கஸ்தூரியின் கருத்த தமிழ்நாட்டு மக்களிடையேயான ஒற்றுமையான சூழலை பாதிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

கே.எஸ்.ஆர். காட்டமான அறிக்கை

இது தொடர்பாக மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள பதிவில், “தமிழ்நாட்டுச் சங்க இலக்கியத்தைக் காலகாலமாகப் பாதுகாத்து வந்தது தொடங்கி, தாங்கள் தமிழில் எழுதிய படைப்புகள் பலவற்றையும் தொகுத்துப் பகுத்து நூல் ஆக்கி அதற்காகத் தொண்டு செய்தது என தெலுங்கு பேசுபவர்கள் பலரும் இங்கே இருக்கிறார்கள். தொடக்க கால தமிழ்நாட்டின் அரசியலில் அவர்கள்தான் தாங்கள் வகித்த அத்தனைப் பதவிகளையும் பயன்படுத்தி எழுத்துச் சீர்திருத்தம் முதல் பல்வேறு மக்கள் சீர்திருத்த நடைமுறைகளை அமல்படுத்தினார்கள்.

இந்த எந்த ஒரு வரலாறும் தெரியாமல் வந்து நின்று கொண்டு, நடிகை கஸ்தூரி முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது! சினிமாவில் நடிகையாக இருந்து கொண்டு எதோ நெடுங்காலமாக மக்களுக்குப் பாடுபட்ட மாதிரியும் சமூக சேவைகள் செய்தது மாதிரியும் எதையாவது பேசி கவர்ச்சி அரசியல் பண்ணக்கூடாது!

காஸ்தூரியை நான் கேட்கிறேன் உனக்கு என்ன தெரியும்? நடிகை கஸ்தூரி என்பதை தவிர மக்களுக்கு உன் வரலாறு எதற்கு வேண்டும்! வரலாறு முதற்கொண்டு எல்லாவற்றையும் வாசித்து அதன் பொருளைப் புரிந்து பிறகு வந்து பேசினால் இப்படிப்பட்ட அபத்தமான பேச்சுக்களை பேசிக் கொண்டு திரியமாட்டாய்!

நாயக்கர் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு என்னென்ன நலன்களைக் கொண்டு வந்தார்கள்; பல நூறு ஆண்டுகளாக அவர்கள் செய்த மக்கள் அரசியல் பணி என்னவாக இருந்தது, இன்னும் இருக்கிறது என்பதை கஸ்தூரி வாசித்துக்கொண்டு வர வேண்டும்!

உங்கள் அம்மா ஹைகோர்ட்டில் வக்கீலாக இருந்தார்! அவர்பின்னால் வந்த ஒரு காலேஜ் ஸ்டூடண்டாக உன்னைப் பார்த்ததுண்டு… 1990இல் கலைஞர் தலைமையில் நடந்த, சுபாஷ் கான சாகாய் வந்து துவக்கி வைத்த திரைப்பட விழாவில் கம்பெயராக இருந்தாய்! பிறகு நாட்டுக்கு வேறு என்ன செய்தாய்?

தெலுங்கர்கள் என்று பிரிவினை பேசும் வாயை அடக்கிக்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டு அரசியலில் தெலுங்கர்களின் பங்களிப்புப் பற்றி உனக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தொழில் முனைவோராக அரசியலில் மக்கள் பணி செய்தவராக பலரும் இங்கு வாழ்ந்து தியாகம் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்!

உனக்கு என்னம்மா தெரியும்? நீலகண்ட சாஸ்திரியை படித்திருக்கிறாயா? சத்தியநாத அய்யர சாண்டில்யனுடைய நாவல்களைப் படித்திருக்கிறாயா?

பிராமணர்களிலும் தெலுங்கு பேசும் ஐயர், ஐயங்கார் சமூக மக்கள் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறாயா நீ? அவர்களும் தமிழ் அந்தபுர பெண்களுக்கு சேவகம் செய்ய வந்தவர்களா? தப்பு அபிராயம் பரப்பாதே. நீ போற்றும் காஞ்சி பெரியவர் தெலுங்கு தாய்மொழியாக கொண்டவர் என்பதை மறந்து விடாதே. உனக்கு மேடை அமைத்து கொடுத்த அர்ஜுன் சம்பத் ஒரு தெலுங்கர் என்பதை மறந்து விடாதே. தேசம் பாதி தெலுங்கன் பாதி என்பதை இந்த பதிவிரதை அம்மணிக்கு யார் தான் எடுத்து சொல்வது.

இந்த சென்சேஷன் மற்றும் தூண்டி விடுகிற வேலைகளை எல்லாம் முகம் தெரிந்த நடிகை என்கிற பெயரில் ஊடகங்களில் செய்யக்கூடாது! அளவறிந்து அனைத்தும் அறிந்து பேச வேண்டும். அவை அறிந்து வட்டாடுதல் வேண்டும்! அறிவளித்தனமாகப் பேசுவதாக நம்பிக்கொண்டு வாந்தி எடுக்கும் வேலை இது! உன் வாயை, வலை சுருட்டி வை.

சினிமாவில் நடித்த நடிகைகள் என்றால் அவர்கள் எது சொன்னாலும் எடுபடும் என்று வைரல் செய்யும் வெட்டி வேலை ஊடகங்களுக்கு வாய்க்கரிசி போடும் வேலை இது! விளையாட்டுத் தனங்களை விட்டுவிட்டு எச்சரிக்கையாகப் பேசவேண்டும் கஸ்தூரி!

யாரோ தெலுங்கு பேசும் நபர் கொடுத்த அடியை தாங்க முடியாமல் இப்படி பேசுகிறார் என்று எண்ணுகிறேன். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கழிசடைத்தனமாக பேசும் கஸ்தூரி… உங்களை நீங்கள் திருத்தி கொள்ளுங்கள். இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.

இந்த நாட்டின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் தெலுங்கு மன்னர்கள் என்பதை மறந்துவிடாதே. ஒரு தனி மனிதரை தாக்க வேண்டும் என்றால் பேர் சொல்லி தாக்கு. இல்லையென்றால் உன் வேலையில் தொடர்ந்திடு. பேசாமல் இருக்கும் தெலுங்கு மக்களை சீண்டாதே.
நாங்கள் சகாப்தம் படைத்தவர்கள். பேரரசன் சாலிவாகனன் கூட ஒரு தெலுங்கு அரசன்தான் . மறந்து விடாதே.பொது வெளியில் நீ பேசிய அறமற்ற பேச்சுக்கு உடனே மன்னிப்பு கேள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் கே.எஸ்.ஆர்.

கஸ்தூரி விளக்கம்

இந்நிலையில், தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழர்களிடையே பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை விளையாடும் மோசடி திராவிட புலம்பெயர்ந்தவர்களின் இரட்டை நிலைப்பாட்டை நேற்று அம்பலப்படுத்தியதாகக் கூறியுள்ளார். ஆனால், தனது தெலுங்கு விசுவாசத்தைப் பற்றி அவதூறு பரப்புரை செய்வதன் மூலம் திமுகவினர் தன்னை கொடுமைப்படுத்த முயற்சி செய்வதாகவும் சாடியுள்ளார்.

மேலும், தெலுங்கர்களுக்கு எதிராக தான் பேசியதாக போலியான செய்திகளை திமுகவினர் பரப்புவதாகவும், ஆந்திர மற்றும் தெலுங்கானா மக்கள் திமுகவினர் பொய்களை ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அங்கீகாரம் அளித்த தெலுங்கு நிலத்தின் மீதான எனது அன்பை யாரும் சீர்குலைக்க முடியாது என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...