மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகை எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.
2009ம் ஆண்டு, தனது 17 வது வயது முதல் மாடலிங் துறையில் எமி பயணித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற “மிஸ் இங்கிலாந்து” போட்டியில் பங்கேற்று 2 ம் இடம் பிடித்தார் எமி ஜாக்சன் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்ற அந்த ஆண்டே அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடைய நடிப்பில் வெளியான முதல் திரைப்படம், கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான “மதராசபட்டினம்” என்கிற தமிழ் திரைப்படம் தான். “துரையம்மா” என்கின்ற அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்த எமி ஜாக்சன், கடந்த 2015ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிறகு அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு ஜார்ஜை பிரிந்த எமி ஜாக்சன், எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்.
தனது காதலர் வெஸ்ட்விக்குடன் பல ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நடிகை எமி ஜாக்சன், இந்த ஆண்டு துவக்கத்தில் அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, அவர்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்த விழாவும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்த ஜோடி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவிலிருந்து இவர் திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே விஐபி இயக்குனர் ஏ.எல்.விஜய்தான்.
இது தொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ என்று தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.