No menu items!

மகளே என்று சொல்லி ஷோபா வாழ்க்கையை சீரழித்தார் பாலுமகேந்திரா – வடிவுக்கரசி பேட்டி

மகளே என்று சொல்லி ஷோபா வாழ்க்கையை சீரழித்தார் பாலுமகேந்திரா – வடிவுக்கரசி பேட்டி

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா – நடிகை ஷோபா திருமணம் குறித்து நடிகை வடிவுக்கரசி அதிர்ச்சி தகவலை சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். என்ன அந்த தகவல்?

பாலுமகேந்திரா – ஷோபா திருமணம்

வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் பல அற்புத கதாபாத்திரங்களில் அருமையாக நடித்துள்ளவர் வடிவுக்கரசி. மிகவும் துணிச்சலான நடிகை என பெயர் வாங்கியவர். யாராக இருந்தாலும் நேரடியாக வெளிப்படையாக பேசக்கூடியவர்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா – நடிகை ஷோபா உறவு குறித்து பேசியுள்ளார். தனக்கு அந்த விஷயம் மிகவும் வேதனை அளித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த பேட்டியில் பாலுமகேந்திரா – ஷோபா கல்யாணத்தை பற்றி பேசிய வடிவுக்கரசி, “எனக்கு சினிமாவில் ஷோபாதான் முதல் தோழி. அவரை, கேகே நகரில் வசித்தபோது அடிக்கடி சந்திப்பேன். நாங்கள் இருவருமே நெருங்கிய தோழிகளாக பழகி வந்தோம். ‘ஏணிப்படிகள்’ படத்தில் நடிக்கும் போது தான் இருவருக்கும் மிகுந்த நெருக்கம் ஏற்பட்டது.

‘பசி’ படத்திற்காக தேசிய விருது ஷோபாவுக்கு அறிவிக்கப்பட்ட போது வாழ்த்து சொல்வதற்காக வீட்டிற்கு நேரில் சென்றேன். அப்போதுதான் ஷோபா – பாலு மகேந்திரா திருமண செய்தி தெரிய வந்தது. ஆனால், தனது திருமணத்தைப் பற்றி ஷோபா எதுவுமே என்னிடம் கூறவில்லை.

பாலுமகேந்திரா – ஷோபா திருமணம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், ஒருமுறை பாலு மகேந்திரா இலங்கைக்கு சென்று திரும்பும் போது கிப்ட் ஒன்றை ஷோபாவுக்கு கொடுத்தார். அதில் என் அன்பு மகளே என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு மகள் மாதிரி பழகிவிட்டு அவரையே திருமணம் செய்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது” என்று வடிவுக்கரசி கூறியுள்ளார்.

‘அச்சாணி’ என்ற படத்தில் அறிமுகமாகி, கே. பாலச்சந்தரின் ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் பிரபலமாகி, ‘பசி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபா. ஊர்வசி என்ற விருதினை மத்திய அரசு அவருக்கு அளித்தது. அப்போது அவருக்கு வயது 17. அடுத்த சில தினங்களில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதே போல், ஷோபாவின் வாழ்க்கையை பாலு மகேந்திரா அழித்துவிட்டார் என்று சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாந்தி வில்லியம்ஸ் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை ஷோபா தற்கொலை குறித்தும், பாலு மகேந்திரா குறித்தும் பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். அதில், “நானும் ஷோபாவும் தோழிகள். இருவரும் சிறு வயதில் நடிக்கும் போது ஷூட்டிங் முடிந்ததும் விளையாடுவோம். என் கணவர் வில்லியம்ஸுக்கு ஷோபாவின் குடும்பத்தினர் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் அவர்களுக்கு ஒரு மகளாகவே பார்க்கப்பட்டேன்.

இந்த நிலையில் ஒரு நாள் ‘மூடுபனி’ படத்தின் ஷூட்டிங்கிற்கு ஷோபா வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்தார். சோகமாகவும் இருந்தார். நான் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறிவிட்டார். பிறகு ‘மூடுபனி’ படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதை கேள்விப்பட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது.

என் கணவர்தான் கதவை உடைத்து ஆட்களை மேலே ஏற்றி தூக்கு போட்ட சேலையிலிருந்து அவரது சடலத்தை இறக்கினார். பாலு மகேந்திராதான் ஷோபாவின் வாழ்க்கையை அழித்துவிட்டார். அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது, நான் முகத்தை திருப்பிக் கொண்டுதான் செல்வேன்” என்று சாந்தி வில்லயம்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலுமகேந்திரா ஏன் இப்படி செய்தார்?

ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் பாலு மகேந்திரா. தமிழில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர். தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், ‘முள்ளும் மலரும்’. ரஜினிகாந்த் நடித்த இந்த படம் இன்றும் சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 1979ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் தமிழ் படம் “அழியாத கோலங்கள்’. தொடர்ந்து ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டை வால் குருவி’, ‘சதிலீலாவதி’ உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பாலுமகேந்திரா படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் பாலா, வெற்றி மாறன் உள்ளிட்ட பலர் இவரின் பட்டறையில் உருவானவர்கள் தான்.

பாலுமகேந்திரா சினிமாவில் பல உயரத்தை சந்தித்தாலும் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதிலும் அவரது திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வெடித்தது.

பாலு மகேந்திரா, அகிலா என்பவரை முதலில் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஷங்கி மகேந்திரா என்ற ஒரு மகன் உண்டு. பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். ஷோபா, பாலுமகேந்திராவைவிட 23 வயது சிறியவர். இந்நிலையில், ஷோபா 17 வயதில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன் இறுதி நாட்களில் நடிகை மௌனிகாவுடன் ‘லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்’பில் இருந்தார், பாலுமகேந்திரா. பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். மௌனிகா, பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ‘நான் பாலு மகேந்திராவின் மனைவிதான்… ஆனால் திருமதி பாலுமகேந்திரா அல்ல!! என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள்” என்று அறிவித்துவிட்டவர் மௌனிகா.

ஏன் அப்படி?

“பாலு மகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வந்ததும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது, இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்! பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை முதன்முதலாக அவர் பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம். எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசித்தேன். அவரும் அப்படித்தான். எனவேதான் அகிலாம்மாவின் முகவரியாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெயரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலு மகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும். என்னை பாலு மகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்” என்று பேட்டியில் கூறியிருந்தார்.

மூன்று மனைவிகள் குறித்து பாலுமகேந்திரா என்ன சொன்னார்?

தன் வாழ்க்கையில் இந்த மூன்று பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. மனைவி அகிலா குறித்து ஒரு பேட்டியில் பேசிய பாலு மகேந்திரா, “சினிமாவையும் இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும் இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான். கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான்.

உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள், பரிசுத்தவதிகள், புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனைவியைத் தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!

மௌனிகாவுடனான உறவை ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும் வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை.

அதேசமயம், என் அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!” என்று கூறியுள்ளார்.

இதே பேட்டியில் மெளனிகாவுடனான உறவு பற்றியும் மனம் திறந்து பேசியிருந்தார் பாலு மகேந்திரா. அதில், “மௌனிகாவுடையது பேரன்பு… மௌனிகாவும் என் மனைவி தான். மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும் இயக்குநருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக்குறைய இருபது வருஷங்களாக நீடித்த உறவு அது.

நான் ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை. அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வமாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு.

‘இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?’ என்று கேட்கிறார்கள். ‘காரணம் மௌனியின் பேரன்புதான். ‘நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்டவளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.

இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு 35 வயதில் நிற்கும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது?

ஏன் மகன் ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனிவுடனான என் உறவு காரணமாக அவள் மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.’

என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன். மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்…’ என்று கூறியிருந்தார் பாலுமகேந்திரா.

ஷோபாவுக்கும் தனக்குமான உறவைப் பற்றி பாலு மகேந்திரா என்ன சொன்னார்? இது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார் பாலுமகேந்திரா.

“தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்தத் தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகை என்பதையா… நடிப்பில் மிகுந்த தனித்தன்மையையும் தனக்கே தனக்கென்று நிறையப் பிரத்தியேகதைகளையும் வைத்திருந்தவர் என்பதையா… குமரிப் பெண் உடலுக்குள் கள்ளம் கபடமற்ற குழந்தை மனசோடு சதா வியப்பும் பிரமிப்புமாக பறந்து திரிந்த அவரது சந்தோஷத்தையா…? அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தையா..? எதை? எதை எழுதுவது?

மிக அடர்த்தியான உணர்வுகள் முட்டி மோதும் சமயங்களில் வார்த்தைகள் காணாமல் போய் விடுகின்றன. நாம் தலையில் வைத்து கொண்டாடும் நமது தமிழ் நம்மை “அம்போ” என்று விட்டு விலகிக்கொள்கிறது. அந்த மனநிலையில் எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும் காலணா சைஸ் பொட்டும் ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார். அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக் கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது. அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும்; நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…? ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”

எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதே போழ்தில், அவர் மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது. தேவலோகவாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா. ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம். அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும் அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே சொல்லியிருந்தேன். “மூன்றாம் பிறை” படம் மூலமாக.

மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்” என்று கூறியிருந்தார் பாலுமகேந்திரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...