பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டிற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா இல்லையா என்று தீர்மானிப்பதை விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. வினேஷ் போகாட்டின் மேல் முறையீடு மீது வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகட், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வினோத் போகட் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அவர் விளையாட இருந்த 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். விளக்கத்தை ஏற்காத இந்தியா கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து, வினேஷின் தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், தனக்கும் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்றதையடுத்து நேற்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் வினேஷ் போகட் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் வாதாடியிருந்தனர். வாதத்தில், “பாரிஸில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனவே, வினேஷ் தண்ணீர் குடித்திருக்கிறார். இதனால் வெயிட் ஏறியிருக்கும். மட்டுமல்லாது ஒரு நாளைக்கு 3 போட்டிகளை எதிர்கொள்கிறார். அதற்கு தேவையான அளவுக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் மனிதனின் அடிப்படை. எனவே இதை வைத்து தகுதி நீக்கம் செய்வது முறையானது அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கின் தீர்ப்பு ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று தீர்ப்பு குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதாவது இந்த வழக்கில் ஆக.16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.