No menu items!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது?  திமுக எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது?  திமுக எதிர்ப்பது ஏன்?

இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு’ சட்டத் திருத்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும், சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? திமுக உட்பட எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

மசோதாவில் செய்யப்பட்டுள்ள  மாற்றங்கள் என்ன?

இந்திய நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று வக்ஃப் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான சிறுபான்மை விவகார அமைச்சகம் வக்ஃபு வாரியம் தொடர்பான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. அந்த மசோதாவின் நகலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியது. அதில் வக்ஃப் சட்டத்தில் 44 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

வக்ஃப் வாரியத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத் திருத்தங்கள் தேவை என்று இந்த மசோதா தொடர்பாக மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.

வக்ஃப் மீதான கவனம் என மத்திய அரசாங்கம் கூறுவது, வக்ஃப் கீழ் வரும் குறிப்பிடத்தக்க நில உடைமைகளையும் குறிக்கிறது. வக்ஃப் வாரியத்தின் கீழ் 8.72 லட்சம் சொத்துகளும், மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள 3.56 லட்சம் எஸ்டேட்களும் உள்ளன. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, அதிகபட்ச சொத்துகளை அதன் கட்டுப்பாட்டில் வக்ஃப் வாரியம் வைத்துள்ளது என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`வக்ஃப்’ என்பது இஸ்லாத்தை நம்பும் எந்தவொரு நபரும் அல்லாவின் பெயரில் அல்லது மத நோக்கங்களுக்காக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்கும் அசையும் அல்லது அசையாச் சொத்து ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்களின்’படி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ள எந்தவொரு நபரும் வக்ஃபுக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம்.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வக்ஃப் தொடர்பான சுமார் 120 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாகத்தான் தற்போது இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்குப் பதிலாக இந்தப் பொறுப்பு தற்போது மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின் கீழ், போஹ்ரா மற்றும் அககானி சமூகத்தினருக்கென (Boharas, Aghakhanis) தனி வக்ஃப் வாரியம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

வக்ஃப் சொத்துக்கான பதிவு மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த போர்ட்டல் மூலம், முத்தவல்லிகள் (Mutawalli) அதாவது வக்ஃப் சொத்தைக் கவனிப்பவர்கள் சொத்துக் கணக்குகள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். இதனுடன், ஆண்டு வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள சொத்துக்கு வக்ஃப் வாரியத்திற்கு முத்தவல்லி (Mutawalli) செலுத்த வேண்டிய தொகையும் ஏழு சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு சொத்து வக்ஃப்-க்கு கீழே வருமா இல்லையா என்பதை முடிவு செய்யும் வக்ஃப் வாரியத்தின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, தற்போதுள்ள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயமும் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் இறுதியானதாகக் கருதப்படாது, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

வரம்பு சட்டத்தை (Limitation Act) அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கப் புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. அதன்படி 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்தத் திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும்.

அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த சட்ட திருத்த மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், “மத அடிப்படையில் எந்தத் தீர்ப்பாயமும் செயல்பட முடியாது. ஒரு விஷயத்தில் இரண்டு வெவ்வேறு சட்டங்கள் உள்ள நாடாக இந்தியா இருக்க முடியாது. ஒரு தேசம், ஒரு சட்டம் என்பதுதான் சரி. நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 120 மனுக்களில் 15 மனுக்கள் முஸ்லிம்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் ஒருபோதும் மத அடிப்படையிலானதாக இருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

ஆனால், அரசியல் ஆய்வாளர் குர்பான் அலி இந்தச் சட்டத் திருத்தத்தை “பிரதான நிலங்களை அரசு கையகப்படுத்தும் முயற்சி. இது இந்து வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.

எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் “தொண்டு” என்ற கருத்தைக் குறைத்து மதிப்பிடச் செய்யும் முயற்சியாகவும், ஆக்கிரமிப்பாளர்களை சொத்தின் உரிமையாளர்களாக மாற்ற வழிவகுக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வக்ஃப் சட்டம் “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு” சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயருக்கு ஏற்ப முன்மொழியப்பட்ட மாற்றங்கள், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக நாடாளுமன்றத்தில் வாதிட்டார். மேலும் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 30க்கு எதிராக உள்ளதாகவும் வாதிட்டார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான், “வக்ஃப் சட்டம் 1995, முழுமையான சட்டமாக இருக்கிறது. அதற்கு சட்டத் திருத்தம் தேவையில்லை. வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கும் அதிகாரம் உள்ள வக்ஃப் வாரியத்தைப் பலவீனமாக்கக் கூடியதாக, புதிய சட்டத் திருத்தங்கள் அமைந்துள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, முஸ்லிம் செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளை பள்ளிவாசல்கள், தர்காக்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் ஆரோக்கியமானதாக இல்லை.

வக்ஃப் சொத்துகளில் முறைகேடு நடந்தால் அதைத் தடுப்பதற்கு வக்ஃப் வாரியமும் வக்ஃப் தீர்ப்பாயமும் உள்ளது. மேல் முறையீடுகளுக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளன. இதில், தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது, அந்தந்த அமைப்புகளின் பொறுப்பு.

முந்தைய சட்டத்தில், வக்ஃப் சொத்துகளை தனிநபர்கள் வளைத்துப் போடுவதற்கு வாய்ப்பில்லை. தற்போது அதற்கான வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தித் தருகிறது. இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது விரைவில் தெரியவரும்,” என்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி. முகமது பஷீர், இந்த மசோதா, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அரசியல் அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30க்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதா நிறைவேறினால் வக்ஃப் அமைப்புக்கு மதிப்பேதும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் மாநிலங்களவை துணைத் தலைவர் ரஹ்மான் கான், “முதலில், முன்மொழியப்பட்ட இந்த சட்டத் திருத்தம் வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கு சிக்கலான செயல்முறையை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் ஆட்சியர் அல்லது துணை ஆணையரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பொறுப்புகளுக்குக் கூடுதல் சுமை.

வாரியம் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இரண்டு பதவிகளை ஒதுக்குவது நல்லதுதான். ஆனால், இந்து கோவில்களின் வாரியத்திலும் முஸ்லிம்களுக்கு இதேபோன்ற இடஒதுக்கீடு கிடைக்குமா? சட்டத் திருத்தத்தில் மிக மோசமான அம்சம் `வரம்பு சட்டம்’ பற்றியதுதான். வக்ஃப் சட்டத்தில் இருந்து வரம்பு சட்டத்தின் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த விதிகளைச் சட்டமாக்கினால், வக்ஃப் சொத்துகளில் 99 சதவீதம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால், வக்ஃப் சொத்துகள் பெருமளவில் குறைந்துவிடும். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில், வக்ஃப் சொத்துகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பாளர்கள் வைத்துள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளின் உரிமையாளர்களாக மாறுவார்கள்” என்கிறார்.

எதிர்க்கட்சியினரின் கோரிக்கை வலுத்து வரவே தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...