நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். நடைபயணம், மாநாடு என்று இருபெரும்பணிக்காக குழுக்களை ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கிடையில் விஜய் தான் ஆசை ஆசையாக வாங்கிய ஒரு காரை விற்க இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
நடிகர்கள் தங்கள் வசதிக்காக உலகத்தில் அதி நவீன வசதி கொண்ட கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது என்பது இயல்பான விஷயம். அதில் விஜய்யும் தனக்கு பிடித்த கார்களை பயன்படுத்தி வருகிறார். இதில் மினி கூப்பர் காரை படங்களின் டப்பிங் வேலைகளுக்கு போகும்போது இரவு நேரங்களில் தானே ஓட்டிச்செலுவதுண்டு. அதே போல சென்னையில் சில இடங்களுக்கு யாருக்கும் தெரியாமல் போக வேண்டும் என்றால் மினி கூப்பரைத்தான் பயன்படுத்துவார்.
இன்னொரு கார் பி,எம்.டபிள்யூ கார் இதனை சென்னையில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கும், விழாக்களுக்கும் போகும்போது பயன்படுத்துவார்.
இதோடு இன்னோவா காரும் வைத்திருக்கிறார். இந்த கார்தான் அவர் ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய சமயத்தில் வாங்கிய கார். இது பல ஆண்டுகளாக அவரோடு இருந்து வருகிறது. இது வீட்டு பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ஷாப்பிங் மற்றும் அம்மா, அப்பாவை சந்திக்கப் போகும்போது இந்த காரைத்தான் பயன்படுத்துவார்.
இது இல்லாமல் நவீன டெக்னாலஜியோடு ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார். இந்த காரை வாங்கிய போதுதான் 1 லட்சம் வரி கட்ட வேண்டும் என்று பல்வேறு சர்ச்சை ஏற்பட்டது. இந்த கார் அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதனால் சில ஆண்டுகள் காரை பயன்படுத்தி வந்தார். ஆனால் செண்டிமெண்டாக அவருக்கு அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ராசி இல்லாத காராக இருக்கிறது என்கிற மன நிலையில் இருந்தார். வரிக்கட்டுவது குறித்து தான் சொன்ன கருத்தும், அதற்கு நீதி மன்றம் கண்டித்ததும் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்த ஆடம்பர கார் வாங்கியிருப்பது அவரது இமேஜை மக்கள் மத்தியில் லேசாக சரிவை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த கார் மீது விஜய்க்கு இருந்த பிரியத்தால் இதுவரைக்கும் தன்னுடன் வைத்திருந்தார். இப்போது அரசியல் பயணத்திற்கு விஜய் தயாராகி விட்டதால் தன்னுடைய இமேஜை முதலில் பாதித்த இந்த காரை இனி வைத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார் இப்போது பல கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளது. 2.5 கோடிக்கு இந்த காரை விற்க இருப்பதாக இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
இதற்கு பதிலாக இதே நிறுவனத்தின் தொழில் நுட்பத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பிரச்சார வாகனம் வாங்க இருக்கிறார். இதற்காக தனக்கு நெருக்கமான நண்பர்கள் வைத்திருக்கும் வாகனம் பற்றி விசாரித்து வருகிறார். அந்த வகையில் சிரஞ்சீவி வைத்திருக்கும் பஸ் வீடு போன்ற அமைப்புடையது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார். பவன் கல்யாண் வாகனமும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சோனு சூட், ஷாருக்கான் ஆகியோர் வைத்திருக்கும் பஸ் அதி நவீன வசதிகளுடன் இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் சேர்ந்த கலைவையில் இருக்கும் ஒரு பிரமாண்டமான பிரச்சார வாகனம் தயார் செய்ய ஒரு டீம் இயங்கி வருகிறது.