No menu items!

அரைவேக்காடு – விஜய் ஆண்டனியை சாடிய டாக்டர்!

அரைவேக்காடு – விஜய் ஆண்டனியை சாடிய டாக்டர்!

சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செருப்பு அணியாமல் வந்த நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேசுகையில், “செருப்பு இல்லாம நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும். சீரியஸ்ஸா சொல்றேன், 1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்க. அதோட பயன் உங்களுக்கு தெரியும், செமையா இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

விஜய் ஆண்டனி சொல்வது சரியா? செருப்பு அணியாமல் நடப்பது நல்லதா கெட்டதா?

ஆனால், விஜய் ஆண்டனி சொல்வதி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரியானோ அன்டோ புருனோ மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடல் புழுக்கள் என்று சில உள்ளன. ஆங்கிலத்தில் Hook Worm. இவற்றில் பல இருந்தாலும் Ancylostoma duodenale, Necator americanus குடல் புழுக்கள் மனிதர்களை தாக்கும் வகைகள்.

இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே, குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும்.

நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய முடியும். இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (Oxygen) போதிய அளவு செல்லாது. எனவே, உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது

இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால், கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். ஊடுகதிர் (எக்ஸ் ரே) எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும்.

இரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia causing Heart Failure). மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்திலும் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் (Maternal Mortality), பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும். அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் (Stunted Growth).

எனவே, கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக்கூடிய பிரச்சனை அல்ல. பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக் குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளின் மூலம் குடற்புழுக்கள் ஆகும். அதே போல் இரத்தச் சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும்.

சரி, இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன?

காலரா, டைப்பாயிடு போன்ற கிருமிகளும் குடலினுள் வந்து பிரச்சனை செய்கின்றன. ஆனால், காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைப்பாயிடு கிருமியும் அப்படியே. எனவே, நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும்.

ஆனால், குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் இரத்தக்குழாயில் (venules) இருந்து காற்றுப் பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன.

ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தைத்தை உறிஞ்சுகின்றன. காலரா, டைப்பயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்: அதுவும் காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். ஆனால், இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போது, உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா, larva) தொற்றுவதை தவிர்க்கவேண்டும்.

எப்படி தவிர்க்க முடியும்?

சிம்பிள் பதில்… செருப்பு அணியுங்கள் என்பதுதான்.

எனவே, இது போன்ற அரைவேக்காடுகளின் முட்டாள்தனமாக உளறல்களை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள்.

விஜய் ஆண்டனி ரசிகர்கள், “எனக்கு இரத்த சோகை வந்தால் உனக்கு என்ன பிரச்சனை’ என்றுகூட கேட்கலாம். பிரச்சினை இருக்கிறது.

குடற்புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா. இதில் Necator americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே, நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால், Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே, நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, உங்கள் அருகில் இருக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனை.

பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகுதான் நமது ஊரில் இரத்தச்சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால், அது தான் அறிவியல்” என்கிறார் டாக்டர் புருனோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...