No menu items!

சூர்யா – சுதா கொங்கரா மோதல் – என்ன நடந்தது?

சூர்யா – சுதா கொங்கரா மோதல் – என்ன நடந்தது?

கமர்ஷியல் படங்களில் நடித்து கொண்டிருந்த சூர்யாவுக்கு, சரியான ஹிட் படங்கள் அமையாமலேயே இருந்தது. இந்த சூழலில்தான் சூர்யா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தார்.

2020-ல் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, தேசிய விருதையும் வென்றது. சூர்யாவுக்கு சொல்லிக்கொள்ளும் ஒரு திரைப்படமாகவும் அமைந்தது. இந்த வெற்றியை அடுத்து சூர்யா – சுதா கொங்கரா மீண்டும் இணைவதாக கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.

சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா ஃபகத், தமன்னாவின் நெருங்கிய நண்பர் விஜய் வர்மா என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த ஆண்டு இப்படம் குறித்த அறிப்பில் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ‘புறநானூறு’ என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.

ஆனால் இப்படம் ஷூட்டிங் சொன்ன தேதிகளில் நடக்காமல் இரண்டு முறை தள்ளிப்போடப்பட்டது. மார்ச் 27-ம் தேதி ஷூட்டிங் என்று அறிவித்த நிலையில், திடீரென 9 நாட்களுக்கு முன் மார்ச் 18-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. சூர்யாவும் சுதா கொங்கராவும் இணைந்து வெளியிட்டு இருந்த அறிக்கையில், புறநானூறு பட த்தின் ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணி அதிக சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் இதன் ஷூட்டிங் ஆரம்பம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதையானது 1960-களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டங்களை மையமாக கொண்டு, நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த கதையை படமாக்க வேண்டுமெனில் கல்லூரிகளில் வைத்து எடுக்க வேண்டும். அல்லது பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட வேண்டும். செட்கள் அமைத்தால், கூடுதல் செலவு ஆகும் என்பதால், கல்லூரி விடுமுறை நாட்களில் எடுக்கலாம் என திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் இவர்கள் ஒரு முடிவு எடுக்க, தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதுவும் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம்தான். அதுவரையில் வாக்குப்பெட்டிகள் கல்லூரிகளில் வைக்கப்படலாம் என்ற சூழல் உருவானது.

படம் தள்ளிப் போக இது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், ‘வாடிவாசலும்’ இழுத்து கொண்டே போனதால் சூர்யா தரப்பில் ஒரு சிறிய குழப்பம் நிலவியது என்கிறார்கள்.

இப்படி இழுத்து கொண்டே போன ‘புறநானூறு’ பட ஷூட்டிங், இனி தொடங்குமா என்பது சந்தேகம்தான் என்று ஒரு பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வேறு வழியில்லாமல் இந்த படத்தை கைவிட்டுவிட வேண்டிய சூழலுக்கு இருவரும் தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கு இடையில் இருந்த ஆத்மார்த்தமான நட்பில் விரிசல் விழ என்ன காரணம் என்று விசாரித்தால், சூர்யா எல்லோரிடமும் புகழ் கூறிய புறநானூறு படக்கதைதான் என்கிறார்கள்.

1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், அதில் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும், போராட்டத்தின் போது நடந்த மரணங்களும், அதன் பாதிப்பும்தான் திரைக்கதையாக எழுதப்பட்டிருக்கிறதாம்.

இந்த கதையை இப்போது எடுத்தால், ஏதாவது தேவையில்லாத பிரச்சினை எழுமோ என்று ஜோதிகா சந்தேகத்தை கிளப்பிவிட்டாராம்.

ஜோதிகாவுக்கு சந்தேகம் எழ என்ன காரணம்?

சூர்யா – ஜோதிகா – தேவ் – தியா என குடும்பமே இப்போது மும்பைவாசிகள் ஆகிவிட்டார்கள். இவர்கள் கல்விப் படிப்பிற்காக மும்பைக்கு ஜாகையை மாற்றியிருப்பதாக சூர்யாவும் ஜோதிகாவும் கூறுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி ஒரு பக்கம் இருந்தாலும், சூர்யா மற்றும் ஜோதிகா என இவர்கள் இருவருரின் சம்பாத்தியம், வருமானம் அனைத்தும் மும்பை மற்றும் வட இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றனவாம். இவையனைத்தும் ஜோதிகாவுக்கு இருக்கும் மும்பை நட்பு வட்டாரங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இவர்களின் முதலீடு மும்பையில் இருப்பது ஒருபக்கம் என்றால், ஜோதிகா இப்போது இந்திப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சூர்யாவும் இந்திப் படமொன்றுக்கு நிதி அளித்திருக்கிறார். இது தொடரலாம் என்றும் கூறுகிறார்கள்.

இப்படியொரு சூழலில், இந்தி எதிர்ப்பை அடிப்படையாக கொண்ட ஒரு படத்தில் நடித்தால் அது சரியாக இருக்குமா? மும்பையில் இருக்கும் நமக்கு செட் ஆகுமா? இந்த கதையை எடுத்தே ஆகவேண்டுமா அல்லது வேறு கதையில் நடித்தால் என்ன இப்படி அடுக்கடுக்காக சூர்யாவிடம் ஜோதிகா கேட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

இதனால் சுதா கொங்கராவிடம் இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படை கருவை எடுத்துவிட்டு, மாணவர் போராட்டம் என்று மட்டும் திரைக்கதையில் மாற்றம் செய்துவிட்டு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாமே என்று சூர்யா கூறினாராம். இந்த கதையின் பலமே இந்தி எதிர்ப்பு போராட்டம்தான். அதைவிட்டுவிட்டு மாணவர்கள் போராட்டம் என்றால், கதைக்கு உயிரே இருக்காது. அதனால் அதை மாற்ற முடியாது என சுதா கொங்கரா மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா இப்போது ’புறநானூறு’ படத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதாகவும் கிசுகிசு கிளம்பியிருக்கிறது. அநேகமாக புறநானூறு வெறும் அறிவிப்புடன் நின்றுவிட வாய்ப்புகள் அதிகம் என்றும் முணுமுணுக்கிறார்கள்.

இதனால் ஜூன் மாதம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் மனநிலையில் சூர்யா தயாராக இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...