No menu items!

பிரபாகரனுக்கு கவச உடை கொடுத்த ராகுல் – மணிசங்கர் ஐயரின் புது தகவல்

பிரபாகரனுக்கு கவச உடை கொடுத்த ராகுல் – மணிசங்கர் ஐயரின் புது தகவல்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் அமைச்சரும் ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவருமான மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் ‘The Rajiv I Knew’ (நான் அறிந்த ராஜீவ்) என்ற நூல்,  இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்த நூலை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் ராஜீவ் காந்தி ஆட்சியில் கையெழுத்தான ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவுத் துறை கொள்கை முயற்சிகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத் ராஜ் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியுள்ளார் மணிசங்கர் ஐயர்.

இதில், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து சில நுணுக்கமான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு எனக் குறிப்பிடும் மணிசங்கர் ஐயர், இந்திய அமைதி காக்கும் படையை அனுப்ப இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என்பது குறித்தும் ஒரு புதிய தகவலைச் சொல்கிறார்.

“ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே.

அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்தார். அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.

ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்.

ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜீவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது. பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது.

இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் தில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, என்னிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்னார். அந்த வீடியோ அதன்படியே கொடுக்கப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்திலிருந்தே ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆரம்பக் கட்டச் சேதங்களுக்குப் பிறகு, ராணுவம் சுதாரித்துக்கொண்டாலும் இது பேரழிவாகவே அமைந்தது. ஆரம்பத்தில், இந்திய அமைதி காக்கும் படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த வரவேற்பில் இணைந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும் இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றிருப்பதாக இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எவ்விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை.

அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து புலிகளுக்கும் அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டம் இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதி காக்கும்படை, தமிழ்ப் போராளிகளோடு மோத வேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட – கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்னாமாக மாற்றியது’ என்று தெரிவித்துள்ளார் மணி சங்கர் ஐயர்.

தொடர்ந்து புது டில்லியில் நடைபெற்ற ராஜீவ்காந்தி – பிரபாகரன் பேச்சுவார்த்தையின் போது என்ன நடந்தது என்பதையும் இந்நூலில் விளக்கியுள்ளார், மணீ சங்கர் ஐயர்.

‘ஒப்பந்தம் கையெழுத்தான வாரம் விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புது தில்லிக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் ஒப்பந்தத்தின் பிரதி அளிக்கப்பட்டபோதே, பிரச்சனை ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.

அவர் தில்லி அசோகா ஹோட்டலில் பலத்த காவலுக்கு இடையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, தன் சகாக்களிடம் கருத்துக்களைக் கேட்க விரும்பினார் அவர். விரைவிலேயே அந்த ஒப்பந்தம் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.

பிரபாகரன் தங்கியிருந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் இதனை அவர் வெளிப்படையாகவே சொன்னார். அனிதா பிரதாப் பிரச்சனை உருவாவதை புரிந்துகொண்டார். ஆனால், இந்திய அரசக் கட்டமைப்பிலிருந்த யாருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட வசீகரத்திற்கு பிரபாகரன் பணிந்துவிடுவார் என நம்பினார்கள். ஆனால், தில்லியிலிருந்து எப்படித் தப்புவது என்பதைத்தான் பிரபாகரன் யோசித்துக் கொண்டிருந்தார்.

பிரதமர் ராஜீவ் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவரது குடும்பத்துடனான விருந்தில் கலந்துகொள்ள பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு, தனது மகன் ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், ‘உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று புன்னகையுடன் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களிடம் `பிரபாகரன் ஒப்புக்கொண்டார். நான் அவரை நம்புகிறேன்` என்று பதிலளித்தார் ராஜீவ்.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் பிரபாகரன் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி தேவையெனத் தெரிவித்தார். அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், இறையாண்மையுள்ள தனி தேசமாக ஈழத்தை அடைவதிலும் பிரபாகரன் உறுதியாக இருந்தார். ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுதுமலையில் நிகழ்த்திய தனது பேச்சிலேயே ஒப்பந்தம் குறித்த முரண்பாட்டை பிரபாகரன் தெரிவித்தார். ‘நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறோம். ஆனால், தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்’ என்றார்.

விரைவிலேயே ஆயுதங்களை ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை புலிகள் இயக்கத்தினர் அறிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியப் படைகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்காக, ரேடியோ அலைவரிசையும் புலிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஆனால், இப்படி அலைவரிசையை பகிர்ந்துகொண்டது பிறகு பிரச்சனையாகவே முடிந்தது.

திலீபனின் மரணம் ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதற்கிடையில், ஏகப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் புலேந்திரன், 16 புலிகள் இயக்கத்தினருடன் பாக் நீரிணை பகுதியில் கைதுசெய்யப்பட்டார். அவர்களைப் பார்க்கவும் உணவு அளிக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டனர். உணவு அளிக்கும் சாக்கில் அவர்களுக்கு சயனைடு அளிக்கப்பட்டது. அதனை அருந்தி 17 பேரும் உயிரிழந்தனர்.

அவர்களது சடலங்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறைக்கு கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது. புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். மோதலைத் தவிர்ப்பதற்காக பிரபாகரனைச் சந்திக்க இந்திய தளபதிகள் முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. விரைவிலேயே இந்திய ரோந்து வாகனத்தைத் தாக்கிய புலிகள், ஐந்து கமாண்டோக்களை கொன்றனர். இரு தரப்புக்கும் இடையில் மோதல் தொடங்கியது.

அக்டோபர் 5-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜெனரல் சுந்தர்ஜி, புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க ‘ஆபரேஷன் பவன்’ நடவடிக்கையை தொடங்க உத்தரவிட்டார். இந்திய ராணுவம் மூன்று, நான்கு வாரங்களில் இதனை முடித்துவிடும் என்றார் சுந்தர்ஜி. இது மோசமான கணிப்பாக முடிந்தது. காரணம், இந்திய ராணுவத்தின் திட்டங்கள் முன்பே பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தன. காரணம், நிலைமை சுமுகமாக இருந்தபோது தனது தகவல் தொடர்பு அலைவரிசையை புலிகளுடன் இந்திய ராணுவம் பகிர்ந்து கொண்டிருந்ததுதான்.

ஒரு முறை ஹெலிகாப்டரில் வந்திறங்கி, புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்க இந்தியப் படை திட்டமிட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அனைவரும் அங்கிருந்து தப்பியிருந்தனர். ஆரம்பத்தில் புலிகளை 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் சுற்றி வளைத்துவிடலாம் என இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், ஒருபோதும் அது நடக்கவில்லை.

அந்தத் தருணத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித், இந்தத் தோல்விக்கான காரணத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். `தமிழ் ஈழம் மீதான பிரபாகரனின் பிடிப்பையும் திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனம், எதிர்த்து நிற்பதில் உறுதியான தன்மை, ஒற்றை நோக்குடைய தன்மை ஆகியவற்றை மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். அதேபோல, இந்திய அமைதி காக்கும் படைக்குச் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக இறங்கிவருவதில் ஜெயவர்தனேவுக்கு இருந்த அரசியல் உறுதியையும் நேர்மைத்தன்மையையும் அதிகமாக மதிப்பிட்டுவிட்டோம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து புலிகளைத் தனியாக பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது” என்கிறார் ஜே.என். தீக்ஷித்.

இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் ஈடுபாட்டை வரலாறு துல்லியமாக முடிவுசெய்யும். இந்திய, இலங்கை மக்களின் நலனுக்காக எவ்வித பிரதிபலனையும் தராத பணியை அவர் மேற்கொண்டார். அதற்கு அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்தார்,” என்று `The Rajiv I Knew` நூலில் எழுதியுள்ளார் மணி சங்கர் அய்யர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...