‘உலகம் முழுவதும் தியேட்டர் வருமானத்தில் 48 சதவிகிதம் பாப்கார்னில் இருந்துதான் வருகிறது’ என்கிறது நேஷனல் ஜியாகரபி சேனலின் ஓர் ஆய்வு. சென்னையிலும் இதுதான் நிலமை என்கிறார், ஏஜிஎஸ் சினிமாஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. சமீபத்தில் வெளியாகியுள்ள பிவிஆர் ஐநாக்ஸ் ரிப்போர்ட்டும் இதை உறுதிபடுத்தியுள்ளது. என்ன நடக்கிறது திரையரங்குகளில்?
பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனை குறித்த தகவலை Money Control என்கிற தளம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி பிவிஆர் நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களின் விற்பனையால் மட்டும் 1958.4 கோடி சம்பாதித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் பிவிஆர் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களின் விற்பனையில் 1618 கோடி சம்பாதித்திருந்தது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 2023ஆம் ஆண்டில் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களின் விற்பனையில் 21 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது பிவிஆர்.
டிக்கெட் விற்பனையைப் பொறுத்தவரையில், பிவிஆர் கடந்த 2022ஆம் ஆண்டு 2751. 4 கோடி விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 19 சதவீதம் அதிகரித்து 3279.9 கோடிக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளது.
பிவிஆர் தியேட்டர்களில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே தியேட்டர் வருமானத்தில் பாப்கார்ன் பெரும்பங்கு வகிக்கிறது. நேஷனல் ஜியாகரபி சேனல் சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் ‘டாப் 10’ ஸ்நாக்ஸ் பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்தது. அதில் மூன்றாவது இடத்தில் பாப்கார்ன் இடம்பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தில் பீட்ஷாவும் முதலிடத்தில் சாக்லேட்டும் இருந்தன.
நேஷனல் ஜியாகரபி சேனல் ஆய்வில் இன்னொரு ஆச்சரியமான தகவலும் வெளிவந்தது. அது, ‘உலகம் முழுவதும் தியேட்டர் வருமானத்தில் 48 சதவிகிதம் பாப்கார்னில் இருந்துதான் வருகிறது’ என்பது.
இந்தியாவிலும் குறிப்பாக சென்னையிலும் இதுதான் நிலமை என்கிறார், ஏஜிஎஸ் சினிமாஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி. இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, “டிக்கெட் விற்பனையில் எங்களுக்கு லாபம் இல்லை. பாப்கார்ன், பார்க்கிங் போன்றவற்றின் மூலமாகவே வருமானம் கிடைக்கிறது” என்கிறார்.
பிவிஆர் ஐநாக்ஸ் ரிப்போர்ட் அதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. தியேட்டருக்கு போகிறவர்கள் படம் பார்க்கிறார்களோ இல்லையோ, பாப்கார்ன் வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
தியேட்டர்களில் குடிப்பதற்காக இலவசமாக தண்ணீர் வைக்க வேண்டும் என்கிற பொதுவிதி இருக்கிறது. ஆனால், அந்த தண்ணீரை எந்த திரையரங்கமாக இருந்தாலும் சுற்றி அலைந்து ஒரு மூலையில்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், விலை கொடுத்து வாங்க வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில் கண்ணெதிரிலேயே இருக்கும். பிவிஆர் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்குகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 70 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக திரையரங்குகளில் டிக்கெட் விலை 200 ரூபாய் என்றால் ஒரு ரெகுலர் பாப்கார்னின் விலை 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. திரையரங்குகள் டிக்கெட் விற்பனைகளைக் காட்டிலும் தங்கள் உணவுப் பொருட்களின் விற்பனைகளையே முதன்மையாக சார்ந்திருக்கின்றன. இதற்குக் காரணம், ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் என்றால் அதில் முதல் வாரத்தில் 70 சதவீதம் தயாரிப்பாளருக்கு போய்விடுகிறது. 30 சதவீதமே திரையரங்க உரிமையாளர்களுக்கு சேர்கிறது. “இதனால் தான் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் விலை பலமடங்கு அதிகமாக இருக்கிறது” என்கிறார்கள்.