No menu items!

தமிழ்நாட்டை வம்பிக்கிழுத்த பிரதமர் – மிஸ் ரகசியா

தமிழ்நாட்டை வம்பிக்கிழுத்த பிரதமர் – மிஸ் ரகசியா

“தமிழ்நாட்ல தேர்தல் முடிஞ்சுடுச்சு. ஆனா இன்னும் தேர்தல்ல தமிழர்கள் தலைதான் உருண்டுட்டு இருக்கு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“நீ எதைப்பத்தி சொல்றே?”

“பிரதமரோட ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தை பத்திதான் சொல்றேன். அங்க நடந்த ஒரு பிரச்சார கூட்டத்துல பேசின பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால காணாம போன பூரி ஜெகன்நாதர் ஆலய பொக்கிஷ சாவியைப் பத்தி பேசியிருக்கார். அப்ப, ‘நம்ம வீட்டு சாவி காணாம போனா ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 வருஷமா காணலை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்’னு பேசி இருக்கார். அவர் இப்படி பேசினது பெரிய அளவுல சர்ச்சையைக் கிளப்பி இருக்கு.”

“பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?”

“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எப்படி நெருக்கமோ, அதே அளவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கோடு நெருக்கமா இருப்பவர் வி.கே.பாண்டியன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 2000 ஆண்டு குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ் பெற்று பஞ்சாப் கேடர் அதிகாரி ஆனார். 2002-ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செஞ்சுகிட்டதால அநத மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிப் போயிட்டார். கடந்த 2011-ல் இவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு தனிப்பட்ட உதவியாளரா நியமனம் செய்யப்பட்டார். அன்னையில இருந்து நவீன் பட்நாயக்குக்கும், இவருக்கும் நெருக்கம் அதிகமாயிடுச்சு. ஒடிசா அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களுக்கு இவர்தான் காரணம்னும் பேசிக்கறாங்க. கடந்த அக்டோபர் மாசம் பதவியை ராஜினாமா செஞ்ச பாண்டியன், பிஜு ஜனதா தளத்துல சேர்ந்துட்டார். பாஜக – பிஜு ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைய இவர்தான் முக்கிய காரணம்னு பாஜக நம்புது. அதனாலதான் பிரதமர் இப்ப இவரை வம்புக்கு இழுக்கறார்.”

“அதுக்காக பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ சாவிக்கு தமிழ்நாட்டை வம்புக்கு இழுக்கறது எந்த வகையில நியாயம்?”

“அதுதான் இப்ப சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கு. மக்களிடையே வேணும்னே பிரதமர் பிராந்திய அளவில் வேற்றுமையை வளர்க்கிறார்னு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்காங்க. முதல்வர் ஸ்டாலினும் கண்டிச்சிருக்கிறார். இது பிரதமர் பதவியில இருந்து இப்படி தரக்குறைவா இருக்கலாமானு கேட்டிருக்கிறார்”

“உதயநிதிக்கு அறிவாலயத்துல தனி அறை அமைக்கப்படறதா கேள்விப்பட்டேனே?”

“உதயநிதியை சந்திக்க கட்சிக்காரங்க அடிக்கடி அவர் வீட்டுக்கு போறாங்க. ஆனா வர்றவங்களை உட்கார வச்சு பேச தேவையான வசதி வீட்ல இல்லைன்னு சொல்லி முதல்வர்கிட்ட உதயநிதி வருத்தப்பட்டிருக்கார். அதனாலதான் அவருக்கு அறிவாலயத்துலயே தனி அறையை ஒதுக்கி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கார். அதுக்கான பணிகளும் நடந்துட்டு இருக்கு.”

“ஓபிஎஸ் திரும்பவும் அதிமுகவுக்கு வரப் போறதா ஒரு வதந்தி திடீர்னு கிளம்பிச்சே?”

“இந்த வதந்தியை கிளப்பி விட்டதே ஓபிஎஸ்தான்னு பேசிக்கறாங்க. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தன்னைப் பற்றி பரபரப்பா எதும் செய்திகள் வராம இருந்த்தால இந்த செய்தியை ஓபிஎஸ்ஸே கிளப்பி விட்டதா சொல்றாங்க. ஆனா இந்த வதந்தியை முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் மறுத்திருக்கார். கட்சியை உடைக்க முயற்சி செஞ்சதே ஓபிஎஸ்தான். அப்படி இருக்கும்போது அவரை எப்படி நாங்க கட்சியில சேர்ப்போம்னு அவர் செய்தியாளர்கள்கிட்ட கேட்டு இருக்கார். இந்த விஷயத்தில் எடப்பாடியைப் பொறுத்தவரை ஓபிஎஸ், தினகரன், சசிகலா தவிர அவங்களோட ஆதரவாளர்கள் யார் வந்தாலும் கட்சியில சேர்த்துக்க தயாரா இருக்கார்.”

“எடப்பாடி தலைமையில்தான் அதிமுக இயங்கும்னு எஸ்.பி.வேலுமணிகூட பேட்டி கொடுத்திருக்காரே?”

“அந்த பேட்டியைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, ‘வேலுமணியை தொடர்புகொண்டு, ‘இனி இப்படி எந்த பேட்டியும் தர வேண்டாம். மற்றவர்களின் பரபரப்புக்கு நாம ஆளாக வேண்டாம். நீங்கள் என்னை முழுமையாக நம்புகிறீர்கள். நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். அவ்வளவுதான். விடுங்கள்’னு சொல்லி இருக்கார். அதனால இனி இந்த விஷயத்துல அதிமுகல யாரும் பேசறதா இல்லை.”

‘நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஆட்கள்கிட்ட 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்குல கேசவ விநாயகத்துக்கும், எஸ்.ஆர்.சேகருக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருக்கே?”

“சம்மனைப் பார்த்ததும் அவங்க 2 பேரும், நாங்க பிரதமருக்காக பிரச்சாரம் செய்யப் போறோன்ம்னு சொல்லி வாரணாசிக்கு கிளம்பிப் போயிட்டாங்க. அதனால இனி நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்ச பிறகுதான் இந்த விவகாரத்துல விசாரணை வேகம் எடுக்கும்.”

“நிஜம்மாவே அவங்க பிரச்சாரத்துக்குதான் போயிருக்காங்களா?”

“விசாரணைக்கு பயந்து இப்படி பொய் சொல்லி வெளியூர் போகிற எத்தனை அரசியல்வாதிகளை நமக்கு தெரியும்” என்று சிரித்தபடியே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...