“தேர்தல் பிரச்சாரம் முடிஞ்சு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஓய்வு எடுக்கறாங்க. முதல்வர்கூட ஓய்வுக்காக கொடைக்கானல் போயிருக்கார். ஆனா எனக்குதான் இந்த வெயில்ல ரெண்டு நாள் லீவ் தர மாட்டேங்குறீங்க” என்று சலித்தபடியே ஆபீசுக்குள் வந்தாள் ரகசியா.
ரகசியாவின் புலம்பலைக் குறைக்க பிரிட்ஜில் வைத்திருந்த நுங்கு சர்பத்தை எடுத்து நீட்டினோம்.
“முதல்வர் கொடைக்கானல் போயிருக்கிறாரே ஏதாவது விசேஷம் உண்டா?
2021 தேர்தல் முடிஞ்சதும் கொடைக்கானலுக்குதான் ஓய்வுக்குப் போனாரு…இப்பவும் அங்கதான் போயிருக்கிறாரு”
“ஆமாம். வெளிநாட்டுக்குப் போகலாம்னுதான் முதல்ல யோசிச்சிருக்காங்க. ஆனா முதல்வர் வேண்டாம்னுட்டாராம். வெயில்ல எல்லோரும் இருக்கிறப்போ நாம வெளிநாட்டுக்குப் போனா தப்பா தெரியும்னு மறுத்திருக்கிறாரு”
“மெட்ராஸ் வெயில்லருந்து தப்பிக்க குளுகுளுனு கொடைக்கானல் போயிருக்கிறாரே?”
“முதல்வர்களுக்கு வெயில், வெப்பம் இதெல்லாம் பிரச்சினையே இல்லை. ஆனாலும் கொடைக்கானல் போனாலும் தப்பா பேசுவாங்கனுதான் போகிறதுக்கு முன்னாடி வெயில்ல எச்சரிக்கையா இருங்கனு மக்களுக்கும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ங்கனு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு கொடைக்கானல் கிளம்பினார்”
“அங்க முழு ஓய்வா? இல்ல அரசியலும் இருக்கா?
“அரசியல் இல்லாமல? அவருக்கு கட்சி சார்பா எடுத்த சர்வே ரிப்போர்ட்டுகளை அவர்கிட்ட கொடுத்திருக்காங்க. அதுல தொகுதிவாரியா திமுக சதவீதத்தை பார்த்து குறிப்பி எடுத்துக்கிட்டு இருக்கார். தூத்துக்குடிலதான் திமுகவுக்கு அதிகமான வாக்குகள் விழுந்துருக்குனு அந்த ரிப்போர்ட் சொல்லியிருக்கு. கிட்டத்தட்ட 54 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு அங்க விழுந்துருக்காம்”
“திமுகவு கூட்டணிக்கு வாக்கு சதவீதம் குறைந்த தொகுதிகள் எவை?”
“கோவைல 38 சதவீதம், வேலூர்ல 37 சதவீதம் திருநெல்வேலில 38 சதவீதம், தர்மபுரில 35 சதவீதம், திருப்பூர்ல 38 சதவீதம், தேனீல 39 சதவீதம்னு இந்த 6 தொகுதிகள்லதான் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் குறைஞ்சிருக்கு”
”முதல்வர் என்ன சொன்னாராம்?”
“வேலூர், தர்மபுரில ஏன் குறைஞ்சிருக்குனு கேட்டார்னு ஒரு நியூஸ் இருக்கு. சென்னை வந்தப் பிறகுதான் இதோட ரியாக்ஷன்லாம் தெரியும்”
”முடிவுகளுக்குப் பிறகு கட்சி ரீதியா மாற்றங்கள் வருமா?”
“நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகல கட்சி ரீதியா மாற்றம் இருக்கும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இப்ப சிலர் அப்படி மாற்றங்கள் ஏதும் இருக்காதுன்னு பேசிக்கறாங்க.”
“மாற்றங்கள் இருக்காதுன்னு அவங்க எப்படி உறுதியா சொல்றாங்க?”
“நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்ச சில மாதங்கள்ல உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல்வர் திட்டமிட்டு இருக்கார். இதுக்குப் பிறகு 2026-ல சட்டமன்ற தேர்தல் நடக்கப் போகுது. இப்படி அடுத்தடுத்து தேர்தல் நடக்கப் போறதால கட்சியில பெரிய மாற்றங்களை முதல்வர் செய்ய மாட்டார்ங்கிறது அவங்களோட நம்பிக்கை”
“கட்சி ரீதியா மாற்றங்கள் இல்லாட்டியும் அரசு அதிகாரிகள் விஷயத்தில் மாற்றங்கள் இருக்கும்னு பேசிக்கறாங்களே?”
“ஆமாம்… ராஜேஷ் லகானியும், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் சீக்கிரமா மத்திய அரசு பதவிக்கு போகப் போறதா சொல்றாங்க. அந்த பதவிகளை பிடிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில இப்பவே கடும் போட்டி ஏற்பட்டிருக்கு.”
“நீலகிரியில வாக்குப் பெட்டிகளை வச்சிருந்த இடத்துல கண்காணிப்பு கேமரா ஒளிபரப்பு சில நிமிடங்கள் தடைபட்டுப் போயிருக்கே?”
“அங்க சுமார் 20 நிமிடங்கள் கண்காணிப்பு கேமரா ஒளிபரப்பு தடையானது பத்தி திமுக முகவர்தான் மாவட்ட தேர்தல் அதிகாரிகிட்ட சொல்லி இருக்கார். முதல்ல கண்காணிப்பு கேமரா ஒளிபரப்புதான் தடைபட்டுச்சு. அது எடுத்த படங்கள் உள்ள பத்திரமா இருக்குன்னு சொன்னாங்க. அப்ப திமுக முகவர் அதை பரிசோதனை செய்து காண்பிக்கணும்னு சொல்லி இருக்கார். அவர் சொன்ன பிறகு சோதிச்சு பார்த்தப்ப, அந்த கேமரால எதுவுமே பதிவாகாம இருந்திருக்கு. இந்த விஷயம் நீலகிரி வேட்பாளர் ஆ.ராசாவுக்கு தெரியவர, ஸ்ட்ராங் ரூம் சீல் எதாவது அகற்றப்பட்டிருக்கிறதான்னு முகவர்கிட்ட கேட்டிருக்கார். அவங்க அதை சோதிச்சு பார்த்துட்டு அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லி இருக்காங்க. நேற்று ஈரோடிலும் இதே பிரச்சனை வந்திருக்கு. அடுத்தடுத்து 2 இடங்கள்ல இப்படி நடந்ததால இது ஏதோ திட்டமிட்ட சதியா இருக்குமோன்னு முதல்வர் சந்தேகப்படறாராம். அதனால தேர்தல் அதிகாரியை சந்திச்சு இதுபத்தி புகார் கொடுக்கச் சொல்லி என்.ஆர்.இளங்கோவனுக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்கார். அவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திச்சு புகார் தந்திருக்கார். இந்த விஷயத்தில் பாஜக அமைதியாக இருக்கறதால முதல்வரோட சந்தேகம் அதிகரிச்சு இருக்காம்.”
“தமிழிசை சவுந்தரராஜன் பிரச்சாரத்துக்காக தெலங்கானா மாநிலத்துக்கு போறதா கேள்விப்பட்டேனே?”
“ஆமாம். பாஜக தேசிய தலைமைதான் அவரை அங்க போகச் சொல்லி இருக்கு. தெலங்கானாவில் அவர் ஆளுநரா இருந்தப்ப மக்களிடம் நெருங்கிப் பழகி இருக்கார். அதனால இப்ப அவர் பிரச்சாரம் செஞ்சா அதனால கட்சிக்கு உதவியா இருக்கும்னு அவங்க நினைக்கறாங்க.”
“பாஜக பத்தி வேற ஏதும் நியூஸ் இருக்கா?”
“சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. கட்சிக்குள்ள ஏற்கனவே பண விநியோகப் பிரச்சனையும், கோஷ்டி பூசலும் இருக்கு. அதனால இந்த நேரத்துல ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்த வேண்டாம்னு அண்ணாமலைக்கு டெல்லியில இருந்து அட்வைஸ் வந்திருக்காம். அதோட கொஞ்ச நாளைக்கு அவர் ஏதும் பேச வேண்டாம்னும் உத்தரவு போட்டிருக்காங்க.”
”அவரால பேசாம இருக்க முடியுமா?”
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது தெரியும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.