No menu items!

காற்றில் கரைந்த ஆனந்த ராகம்! மறைந்த உமா ரமணன்!

காற்றில் கரைந்த ஆனந்த ராகம்! மறைந்த உமா ரமணன்!

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

சிறுவயதிலேயே இசை கற்றுக்கொண்ட உமா ரமணன்,  தனது கல்லூரிக் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பல வென்றுள்ளார். 1972-ம் ஆண்டு ஏ.வி.ரமணனின் மியூசியானோ இசைக்குழுவில் ஒரு பாடகியாக சேர்ந்தார்.

இசைக் கச்சேரிகளில் பிரபலமான நிலையில், 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்…’ என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமா  ரசிகர்களிடையே  உமா ரமணன் புகழ்பெற்றார்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்..’  தூறல் நின்று போச்சு படத்தில் இடம்பெற்ற ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்’, மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற  ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு’,  நண்டு படத்தில் இடம்பெற்ற, ‘மஞ்சள் வெயில்’, ல் ‘கோவில் புறா’ திரைப்படத்தில் ‘அமுதே தமிழே’  உள்ளிட்ட பல பாடல்களை உமா ரமணன் பாடியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் அவர் பணியாற்றி உள்ளார்.

கடைசியாக விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு குரல்கொடுத்து  ‘கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு…’ என்ற பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். திரைப்படங்களைத் தவிர தனது கணவரும், இசையமைப்பாளருமான ஏ.வி.ரமணனின் இசைக் கச்சேரிகளிலும் அவர் பாடிவந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். இது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

கணவர் வேண்டுகோள்

உமா ரமணன் மறைவு தொடர்பாக அவரது கணவர் ஏ.வி.ரமணன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “என்னுடைய மனைவியான உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்கள் மீடியா நண்பர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட சுதந்திரத்தின் காரணமாக, இது உமா ரமணனின் ஆசை” என்று கூறியுள்ளார்.

உமா ரமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரபல பதிவர் கானா பிரபா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

74 பாடல்கள்

உமா ரமணன் என்ற பாடகிக்குக் கிடைத்த வாய்ப்புகள் அரிதாக இருந்தாலும், கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

பெண்ணுலக தீபன் சக்கரவர்த்தி போல. “அமுதே தமிழே அழகிய மொழியே” தெள்ளு தமிழ்ப் பிள்ளையாய், “பூங்கதவே தாழ் திறவாய்” காதலியாய், “பூங்காற்றே இங்கே வந்து பாடு” சகோதரியாய் “மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே” தாய்மையின் பிரதிபலிப்பாய், “ஊரடங்கும் சாமத்திலே” தோழியாய், “ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி” கேட்டால் கையெடுத்துக் கும்பிட வைப்பார், என்று கடக்க முடியாத பாடல்கள்.

 “ஆனந்த ராகம் கேட்கும் காலம்” தமிழ்த் திரையிசை உள்ளவரை நிலையாய் அவர் பேர் சொல்லும் பாட்டு. “நீ பாதி நான் பாதி கண்ணே”, “ நில் நில் பதில் சொல் சொல்” “வெக்காத செந்தூரம் தான்” என்று அப்பழுக்கற்ற கிராமியத்தனத்திலும் (பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு) தன் முத்திரை காட்டியவர். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜோடிக் குரலாகவும், தனித்த பாடகியாகவும் 74 பாடல்கள் பாடியிருக்கிறார்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...