கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவன் கான்வேயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் இருந்தனர். இந்த தொடரில் காயம் காரணமாக டெவன் கான்வே ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக யாரை இறக்குவது என்ற யோசனையில் சிஎஸ்கே அணி உள்ளது.
நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, இங்கிலாந்து வீர்ர் மொயின் அலி, இந்திய வீர்ர் அஜிங்ய ரஹானே ஆகியோரிl யாராவது ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது பற்றி சிஎஸ்கே நிர்வாகம் யோசித்து வருகிறது. இதில் நியூஸிலாந்து அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஒரு காலத்தில் ஆடிய தல தோனியே இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று ஒரு சில வீர்ர்கள் அவரை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆக இந்த தொடரில் தல தோனி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஐபிஎல் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 22-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி மோதுகிறது. ஐபிஎல்லின் முதல் போட்டி சென்னையில் நடப்பதால் தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்.
முதல் போட்டிக்கு முன்னதாக மாலை 6.30-க்கு நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு மினி இசை நிகழ்ச்சிக்கு அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சோனு நிகாம், அக்ஷய் குமார். டைகர் ஷெராப் ஆகியோரும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2-ம் பாகம் துபாயில் நடக்குமா?
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதி ஆட்டங்களுக்கான ஒரு பகுதி அட்டவணை மட்டுமே இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதல் அட்டவணைப்படி ஏப்ரல் 7-ம் தேதி வரை மட்டுமே இந்தியாவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் காரணமாக மீதமுள்ள ஆட்டங்கள் துபாயில் நடக்கலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போட்டித் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்களை துபாயில் நட்த்துவதற்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதற்காக பிசிசிஐ-யின் குழு ஒன்று துபாய்க்கு சென்றிருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் ஐபிஎல் தொடரின்போது பொதுத் தேர்தல் குறுக்கிட்டதால், அந்த ஆண்டு ஐபிஎல்லின் சில போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதேபோல் கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த முறையும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு பிறகு துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.