No menu items!

23 வகை நாய்களுக்குத் தடை!-என்ன பின்னணி?

23 வகை நாய்களுக்குத் தடை!-என்ன பின்னணி?

இந்தியத் திருநாட்டில் 2021ஆம் ஆண்டு வரை எந்த ஒரு நாய் இனத்துக்கோ, எந்த ஒரு நாய் இனத்தின் இனப்பெருக்கத்துக்கோ தடையோ, கட்டுப்பாடோ விதிக்கப்பட்டதில்லை.

வாலை ஆட்டும் வள்வள்கள் உள்பட வந்தாரை வாழ வைக்கும் நாடாகவே இந்தியா இருந்தது.

இந்தநிலையில் யார் கண்பட்டதோ தெரியாது? அண்மை காலமாக, குறிப்பிட்ட சில வெளிநாட்டு நாய்களால் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்தது.

பானை சோற்றுக்கு ஒன்றிரண்டு பருக்கைச் சோறுகள் பதம் என்பதுபோல சில உதாரணங்களைப் பாருங்களேன்.

தலைநகர் டெல்லியில் ஒரு குழந்தை, பிட்புல் ரக நாயால் தாக்கப்பட்டு, கால் உடைந்து 17 நாட்கள் மருத்துவமனை கட்டிலே கதி என்று கிடந்தது.

அதே டெல்லியில், பிட்புல் நாய் வளர்க்கும் ஒருவர் அண்டை வீட்டுக்காரர் மேல் தனது நாயை ஏவி கடிக்க விட்ட சம்பவம் நடந்தது.

காசியாபாத்தில் பத்து வயது குழந்தை ஒன்று பிட்புல் நாயால் குதறப்பட்டு படுகாயம் அடைந்தது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ராட்வீலர் ரக நாய் ஒன்று, பசி கலந்த வெறுப்பு காரணமாக வளர்த்தவரையே பந்தாடியது. நாய் உரிமையாளரின் தோள், கை, கால்களில் ஏற்பட்ட மொத்த காயங்களின் எண்ணிக்கை அறுபது!

பிட்புல், ராட்வீலர், அமெரிக்கன் புல்டாக் போன்ற நாய்கள், இல்லம் வளர் செல்லங்கள் பட்டியலில் சேராது. பெரும்பாலும் தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்புக்கும், மற்ற நாய்களுடன் சண்டை போடவும் வளர்க்கப்படும் நாய் இனங்கள் இவை.

இந்தியாவில் பெருகி வந்த நாய்த் தாக்குதல் சம்பவங்களைப் பார்த்தபிறகு விலங்குகள் நல அமைப்பான பீட்டா சும்மா இருக்குமா?

பீட்டா உள்பட பல்வேறு சமூக அமைப்புகள், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகின.

‘அரசு இது தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் அறிவுறுத்த, அதைத் தொடர்ந்து மத்திய மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக ஆணையர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அது பரிந்துரை அளித்தது.

அதைத் தொடர்ந்து நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் விதிமுறைகள் 2017, செல்லப்பிராணிகளுக்கான விற்பனை நிலையங்கள் தொடர்பான விதிமுறைகள் 2018 ஆகியவற்றை மத்திய அரசு கையில் எடுத்துத் தூசு தட்டியது.

அதன்பின், மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுடச்சுட ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தது.

‘பிட்புல், ராட்வீலர் உள்பட 23 வகையான நாய்கள் மனித உயிர்களுக்கு ஆபத்தானவை. இந்த இன நாய்களை வைத்து சட்டத்துக்குப் புறம்பாக நாய்ச்சண்டைகள் நடத்தப்படுகின்றன. ஆகவே, இந்த வகை நாய்களின் இறக்குமதிக்கு இனி தடை விதிக்கப்படுகிறது. இந்த வகை நாய்களுக்கு இனி உரிமம் (லைசென்ஸ்) வழங்க வேண்டாம். பிட்புல், ராட்வீலர், அமெரிக்கன் புல்டாக் போன்ற நாய்களை வளர்ப்பவர்கள் அங்கீகாரம் பெற்ற கால்நடை மருத்துவரிடம் நாயைக் காட்டி, அதற்கு கருத்தடை ஊசி, தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கான ஆதாரங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்’ என்பது அந்த சுற்றறிக்கையின் சாராம்சம்.

இந்த 23 வகை நாய்கள் மீதான தடை காரணமாக, இவற்றை யாரும் கைகழுவி, தெருவில் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த வகை நாய்களை ஏற்கெனவே வளர்ப்பவர்கள் தொடர்ந்து வளர்க்கலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே கர்ப்பமாக இருக்கும் பெண் நாய், குட்டிகளைப் போட்டால் அந்த குட்டிகளை வளர்க்கத் தடையில்லை. புதிதாக இனப்பெருக்கம் செய்யவும், இந்த 23 வகை நாய்களுக்குள் கலப்பினத்தை ஏற்படுத்தவும், நாய்களை விற்கவும், சண்டையில் ஈடுபடுத்தவும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

அரசு இன்னொன்றையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

‘இந்தியாவில் செல்ல விலங்குகளை விற்கும் பெட் ஷாப்புகளில் பல சட்டத்துக்கு புறம்பாக இயங்குகின்றன. கலப்பின நாய்களை உருவாக்குகின்றன.

இந்தமாதிரியான விற்பனை நிலையங்களில் பல, பதிவு செய்யப்படாதவை. இதுபோன்ற பெட் ஷாப்புகளில் சட்டத்துக்குப் புறம்பாக வளர்க்கப்படும் நாய்கள் உரிய காலத்தில் கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக காட்டப்படுவதில்லை. போதிய உணவு, உடற்பயிற்சி போன்றவை அந்த நாய்களுக்கு வழங்கப்படுவதில்லை. அன்பு காட்டப் படுவதில்லை. அக்கம் பக்கம் மற்ற நாய்களுடன் பழக விடப்படுவதில்லை. இந்த விற்பனை நிலையங்களை மாநில விலங்கு நலவாரிய அதிகாரிகள் சரிபார்த்து நடவடிக்கை வேண்டும்’ எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆக, மொத்தத்தில், இப்போது இந்தியாவில் வாழும் பிட்புல், ராட்வீலர், அமெரிக்கன் புல்டாக் போன்ற 23 வகை வெளிநாட்டு நாய்களுக்குப் பிரச்சினை வந்திருக்கிறது.

இந்த 23 வகை நாய்களின் இறக்குமதிக்கு, விற்பனைக்கு, இனப்பெருக்கத்துக்கான தடை,

மார்ச் 12ஆம்தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. மார்ச் 12ஆம்தேதி முதல் இந்த 23 வகை நாய்களை யாரும் இறக்குமதி செய்ய முடியாது.

இந்த தடை பற்றி, பீட்டா அமைப்பின் வழக்கறிஞரான சௌரியா அகர்வால் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.

காரணம், இந்தியாவில் அதிக அளவில் தெருக்களில் கைவிடப்படும் நாய் பிட்புல் வகை நாய்தான். அதன்மூலம் அந்த நாய்க்கும் ஆபத்து. அந்த தெருவில் நடமாடுபவர்களுக்கும் ஆபத்து என்பதுதான் நிலை.
ஏனோ தெரியவில்லை? இந்த 23 வகை நாய்களுக்கான தடையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரம்தான் மிக மும்முரமாக இருக்கிறது.

லக்னோவில் ஏப்ரல் 1ஆம்தேதி முதல் வீடு வீடாகச் சென்று இந்த வகை நாய்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெறப் போகிறது.

உரிமம் இல்லாமல் இந்த 23 வகை நாய்களில் ஏதாவது ஒன்றை வைத்திருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கூடவே அந்த நாய் பறிமுதல் செய்யப்பட உள்ளது.

சரி. இந்திய அரசு தடைவிதித்திருக்கும் அந்த 23 வகை நாய்கள் என்னென்ன?

பிட்புல், டெரியர், டோசா, அமெரிக்க ஸ்டார்போர்ட்ஷயர் டெரியர், ஃபிலா பிரேசிலெரியோ, டோகோ அர்ஜென்டினோ, மஸ்தீப், அமெரிக்க புல்டாக், போயர் புயல், கன்கால், டோரின்ஜாக், அகிட்டா, சர்பிளானினாக், ஜப்பானிய டோசா, ராட்வீலர், ரொடீசிய ரிட்ஜ்பேக், வுல்ப் டாக், கேனரியோ, கேன் கோர்சோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டுடாக், பேன் டாக் ஆகியனதான் இந்த 23 வகை நாய்கள்.

இந்த நாய் இனங்களின் மீதான தடை இந்தியாவில் நீடித்தால், இப்போதுள்ள நாய்கள் மட்டும் மெல்ல வாழ்ந்து மறைந்து போகும். பிறகு, வருங்காலத்தில் இந்த 23 வகை நாய் இனங்களும் இந்தியாவில் இருக்காது என்று அரசு நம்புகிறது.

உலக அளவில் குறிப்பிட்ட சில நாய் இனங்களுக்குத் தடை விதிக்கப்படுவது ஒன்றும் புதிது அல்ல. புல்டாக் நாயினத்துக்கு ஏற்கெனவே நார்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளில் தடை உள்ளது. நியோபோலிடன் மஸ்தீப் ரக நாய்க்கு 12 நாடுகளில் தடை உள்ளது.

இது தவிர, இந்திய அளவில் பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் அடுக்கங்களில் நாய் வளர்ப்பவர்களுக்கு ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

‘நாய் வளர்ப்பவர் 18 முதல் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். நாய் வளர்ப்பதில் அவர் ஏற்கெனவே அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். கிரேட் டேன், ஜெர்மன் ஷெப்பர்ட், செயிண்ட் பெர்னார்ட் போன்ற பெரிய அளவுள்ள நாய்களை அடுக்கங்களில் வளர்க்கக்கூடாது, நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும்போது சங்கிலி, வாய்மூடி போட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்தான் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பனபோன்ற விதிமுறைகள் அவை. இந்தியாவின் சில நகரங்களில் 18 வகையான நாய்களுக்கு ஏற்கெனவே தடை இருக்கிறது.

இந்தநிலையில்தான் இந்திய அளவில் இப்போது 23 வகை நாய்களுக்குத் தடை பிறந்திருக்கிறது.

இந்த தடை சில முணுமுணுப்புகளையும் ஏற்படுத்தாமல் இல்லை.

இந்தியாவில் அதிக அளவில் மக்களுக்குத் தொல்லையாகவும், சிம்ம சொப்பனமாகவும் இருப்பவை தெருநாய்கள்தான். அவை பெரும்பாலும் நாட்டு நாய்கள்தான். அது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல், நான்கு சுவர்களுக்குள் கட்டுக்காவலாக வாழும் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்குப் போய் தடை விதித்திருக்கிறார்களே? இது நியாயமா?’ என்ற அங்கலாய்ப்பு அது.

தெருநாய்கள் பிரச்சினைக்கும் அரசு ஏதாவது முடிவு கட்டும் என எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...