No menu items!

தண்ணீர்ப் பஞ்சம்.. தவிக்கும் பெங்களூரு! -என்னதான் முடிவு?

தண்ணீர்ப் பஞ்சம்.. தவிக்கும் பெங்களூரு! -என்னதான் முடிவு?

குளுகுளு மலைநகரமான பெங்களூரு, குடிநீருக்குக் கூட ததிங்கிணத்தோம் போடும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆம். கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூரு, இப்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது.

குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க.,. எதற்குமே தண்ணீர் இல்லை. குடிசைப் பகுதிகளில் மட்டுமல்ல, அடுக்ககங்களில் வசிக்கும் பெங்களூருவாசிகள் கூட தண்ணீருக்கு இப்போது ஆலாய்ப் பறக்கும் அவலநிலை.

‘நாங்க போஷ் பகுதியில் வசிக்கிறவங்க. கேட்டட் கம்யூனிட்டியாக்கும்’ என்று பெருமை பேசியவர்களும்கூட, பெங்களூருவில் இப்போது டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து தெருவில் கியூவில் நிற்கிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் முதல்வர் அலுவலகமான கிருஷ்ணா கூட, இந்த தண்ணீர்த் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

பெங்களூருவின் 60 சதவிகித குடிமக்களுக்கு, டேங்கர் லாரிகள்தான் இப்போது ஆபத்பாந்தவன், அனாதரட்சகன். அதற்காக பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை.

‘வீட்டில் இருக்கிற நேரத்தை விட கியூவில் நிற்கிற நேரம்தாங்க அதிகமா இருக்கு’ என்று இல்லத்தரசிகள் அலுத்துக் கொள்ள, ‘அலுவலக நேரத்தை விட அதிக நேரம் கியூவில் நிற்க வேண்டியிருக்கிறதே’ என்று இல்லத்தரசர்கள் இன்னொருபக்கம் அலுத்துக் கொள்கிறார்கள்.

குழாய்களில், 24 மணிநேரமும் தண்ணீர் வருவதை பெங்களூரூவாசிகள் பார்த்து முழுதாக ஒருமாதம் ஆகிவிட்டது. பகலில் சொட்டுநீர் வருவதில்லை. இரவிலோ சேறு கலந்த துர்வாடையுடன் கொஞ்சூண்டு நீர் வருகிறது. அது கழிப்பறைக்குக்கூட பயன்படாது.

அடுக்கங்களில், ‘அளவுக்கு மீறி, குளிப்பதற்கோ, துவைப்பதற்கோ தண்ணீரை வீணடித்தால் அபராதம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் மாதாந்திர பராமரிப்புக் கட்டணம் இப்போது ஐந்தாயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

அடுக்குமாடிகளில் வசிக்கும் பெங்களூரூகாரர்கள், கொடுமையான இந்த தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அருகில் இருக்கும் வணிக வளாகங்கள், மால்களில் போய் காலைக்கடன்களைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உடற்பயிற்சிக்காக ஜிம்களுக்குச் செல்பவர்கள் இன்னொருவிதமான டெக்னிக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். எக்ஸ்ட்ரா உடை, ஒரு டவலுடன் ஜிம்முக்குப் போக வேண்டியது.

பயிற்சியை முடித்ததும், வியர்வையை நீக்கும் சாக்கில், ஒரு காக்கா குளியல் குளித்து விட்டு வந்து விட வேண்டியது.

சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவ நீர் வேண்டும் என்பதால், இதை சமாளிக்க பெங்களூரூ நகரத்து ஓட்டல்கள்., வீடுகள் இப்போது காகிதத் தட்டுகளுக்கு அதாவது பேப்பர் பிளேட்டுகளுக்கு சத்தமில்லாமல் மாறிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக, பல பள்ளிக்கூடங்கள், கொரோனா காலம் போலவே, ஆன்லைன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்து விட்டன.

‘குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவினாலோ, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினாலோ, கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தினாலோ 5 ஆயிரம் ரூபாய் அபராதம்’ என பெங்களூரில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மால்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரை விட்டு வெளியேறுபவர்கள், ஒருபக்கம் அதிகரித்து வருகிறார்கள். அதிக தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களை விட்டு, வேறுவேறு இடங்களுக்கு வீடு மாறி குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.

என்னதான் ஆச்சு பெங்களூரூக்கு? ஏன் இந்த நிலை?

பெங்களூரு, காவிரிப் படுகையில் அமைந்த நகரம்தான். ஆனாலும், பெரிய நீர்நிலைகள் எதுவும் பெங்களூரு நகரத்துக்குப் பக்கத்தில் இல்லை. தென்மேற்குப் பருவக்காற்று மூலம் பெய்யும் கொஞ்சூண்டு மழைதான் பெங்களூருக்கு இருக்கும் இதமான குளிர்ச்சியான ஆறுதல். 2023ல் அந்த பருவ மழையும் பொய்த்துப் போய், பெங்களூருக்கு ‘பெப்பே’ காட்டி ஏமாற்றி விட்டது.

பெங்களூரு நகரம் முழுக்க ஆழ்துளை கிணறுகள் அதிகம். அதில், 1,214 ஆழ்துளை கிணறுகள், இந்தமுறை அடியோடு வற்றி, வறண்டு போய்விட்டன. அதில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வீட்டு ஆழ்துளை கிணறும் ஒன்று என்பது கூடுதல் தகவல்.

பெங்களூரூ நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1.3 கோடி. நாள்தோறும் நகரத்துக்கு வந்து செல்லும் மக்களையும் சேர்த்தால் 1.4 கோடி. பெங்களூரூ நகரத்தின் ஒரு நாளுக்கான தண்ணீர்த் தேவை மட்டும் 1,500 மில்லியன் லிட்டர்.

காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருக்கு குழாய்கள் மூலம் நீர்எடுத்து வரப்படுவது வழக்கம். ஆனால், இந்தமுறை காவிரியும், வறட்சியில் சிக்கி, பெங்களூருவை கைவிட்டுவிட்டது. இத்தகையை காரணங்களாலத்ன் பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது பெங்களூரு.

தண்ணீர்த் தட்டுப்பாடு ஒருபக்கம், பெங்களூருவை மிரட்டிக் கொண்டிருக்க, இன்னொரு புறம், தனியார் டேங்கர் லாரிகளின் காட்டில் இப்போது அடைமழை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீரின் விலை ஆயிரம் ரூபாயாக இருந்தது. இப்போது அது 2 ஆயிரம் ரூபாயாக எகிறி நிற்கிறது. தனியார் டேங்கர் லாரிகளின் கொட்டத்தை அடக்க பெங்களூரு மாவட்ட ஆட்சியர், கே.ஏ.தயானந்த் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்திருக்கிறார்.

ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் 6 ஆயிரம் லிட்டர் நீருக்கு விலை 600 ரூபாய். அதுவே 5 முதல் 10 கிலோ மீட்டராக இருந்தால் 750 ரூபாய். 8 ஆயிரம் லிட்டர் நீருக்கு விலை 700 ரூபாய், 12 ஆயிரம் லிட்டர் நீருக்கு விலை ஆயிரம் ரூபாய் என்று மாவட்ட ஆட்சியர் விலை நிர்ணயம் செய்துள்ளார்.

பெங்களூரு நகரத்தில் இயங்கும் மொத்த டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை 3,500. இதில் 10 சதவிகிதம், அதாவது 219 லாரிகள் மட்டும்தான் பதிவு பெற்ற லாரிகள். இப்படி பதிவு கூட செய்யாமல், பணம் பறிக்கும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்யும் வேலையும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

இன்னொருபுறம், பெங்களூரு மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் 210 டேங்கர் லாரிகளை, 4 மாத ஒப்பந்தத்தின் கீழ், நியமித்து தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. பால் வண்டிகள் கூட குடிநீர் வாரியத்தின் கைங்கர்யத்தால், டேங்கர் லாரிகளாக புது அவதாரம் எடுத்து வருகின்றன.

ராமநகரம், ஹோஸகோட்டே, சென்னப்பட்டணம் போன்ற பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெங்களூருவுக்கு நீர் தருவிக்கப்படுகிறது. ஆனாலும் என்ன? பற்றாக்குறையால் பரிதவித்துக் கொண்டிருக்கிறது பெங்களூரு.

பெங்களூருவின் இந்த தண்ணீர்ப் பிரச்சினைக்கு என்னதான் காரணம்? இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

பருவநிலை மாற்றம், மக்கள் தொகை உயர்வு, சரியாகத் திட்டமிடப்படாத
நகரமயமாக்கம், இயற்கையோடு இணக்கமில்லாத, நட்பு பாராட்டாத தொழில்துறை,

ஏரிப் படுகைகள், சிறிய நீர்நிலைகளின் மீது கட்டடம் கட்டியது, மழை நீர் சேகரிப்பு இல்லாதது, நிலத்தடி நீர் வீணடிப்பு, சரியாக பராமரிக்கப்படாத, பழுதடைந்த குடிநீர் குழாய்கள், அவற்றில் ஏற்படும் கசிவு, குழாய்களில் திருட்டு இணைப்புகள்… இப்படி பலப்பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

பெங்களூரு நகரத்துக்கு 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டி.கே.ஹள்ளி பகுதியில் இருந்து, காவிரிநீர் குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. மலைப்பகுதி என்பதால் சில இடங்களில் 300 முதல் 400 மீட்டர் உயரம் வரை நீரை ஏற்ற வேண்டியிருக்கிறது. அதன்பின்சிறிய நீர்த்தேக்கங்களில் நீர் சேகரித்து வைக்கப்படுகிறது.

இந்த குழாய் வழிகளோ, சேரிக்கப்படும் நீரோ சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. சமயங்களில் கழிவுநீர் கலந்து நல்ல நீர் வீணாகிறது. குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள், கசிவுகள் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர் நீர் வீணான காலங்களும் உண்டு.

காவிரியில் இருந்து இப்படி தண்ணீர் கொண்டுவர மின்செலவு, ஊழியர் செலவு என்று பார்த்தால் ஒரு கிலோ லிட்டர் நீருக்கு 80 முதல் 100 ரூபாய் வரை செலவாகிறது.

பெங்களூரு நகரத்தில் ஒருவரது ஒருநாள் தண்ணீர் செலவு 130 லிட்டர். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆகும் செலவு 520 லிட்டர். ஒரு மாதத்துக்குக் கணக்கிட்டால் 15 ஆயிரத்து 600 லிட்டர். ஆனால் ஒரு குடும்பத்தின் ஒரு மாத தண்ணீர் பில் வெறும் 172 ரூபாய்தான். ஆக, செலவு அதிகம், வரவு குறைவு என்று அல்லல்பட்டு கொண்டிருக்கிறது பெங்களூரு குடிநீர் வாரியம்.

ஒருகாலத்தில் தண்ணீர்குழாய் இல்லாத வீடுகள் பெங்களூருவில் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டன. இப்போதோ தண்ணீரே இல்லாத குழாய்கள் பெங்களூருவின் பிரச்சினையாக உருமாறி இருக்கின்றன.

இந்தநிலையில், மழைநீர் சேகரிப்பு, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, சேமித்த நீரை சரிவர பராமரிப்பது…போன்றவற்றைச் செய்தால் மட்டும்தான் பெங்களூருவுக்கு இனிமேல் விடிவுகாலம். இல்லாவிட்டால் சிக்கல்தான் என்று பயமுறுத்துகிறார்கள் நீரியல் நிபுணர்கள். புதிதாக சாலைகளைப் போடுவதற்குப் பதில் குளங்களை வெட்டி நீர்சேகரிப்பதில் கவனம் செலுத்துங்கள் என்கிறார்கள் வல்லுநர்கள்.

நிலைமை இப்படியிருக்க, ‘அட! இன்னும் கோடைகாலமே தொடங்கவில்லையே. மார்ச் மாதத்திலேயே தண்ணீருக்காக இப்படி மல்லுகட்ட வேண்டியிருக்கிறதே. இந்த அழகில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெய்யில் கொளுத்தத் தொடங்கி விட்டால் இன்னும் என்ன ஆகுமோ?’ என்ற பயத்தில் இருக்கிறார்கள் பெங்களூருகாரர்கள்.

இருக்கிற பிரச்சினை போதாது என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா, ‘இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூரு தண்ணீர்த் தட்டுப்பாடு தீர்க்கப்படாவிட்டால் சட்டமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவேன்’ என்று அறிவித்துள்ளார்.

பெங்களூரு நகரம், கொஞ்சம் கொஞ்சமாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுண் நகரம் போல மாறிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் கேப்டவுண் போலவே, முற்றமுழுக்க நிலத்தடி நீரே இல்லாத நகரமாகக் கூட பெங்களூரு உருமாறலாம்.

இப்போதே பெங்களூருவில் இந்த நிலைமை. 2031ஆம் ஆண்டளவில் பெங்களூரு மாநகரத்தின் மக்கள் தொகை, 20.3 மில்லியனாக உயர்ந்து விடும். அப்போது என்ன கதையோ? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...