அமலாக்கத் துறை (ED), வருமானவரித் துறை (IT), மத்திய புலனாய்வு துறை (CBI) போன்ற மத்திய அமைப்புகளின் மூலம் சோதனை செய்து அழுத்தம் கொடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து 335 கோடி ரூபாய் பாஜக நன்கொடை பெற்றிருப்பதாக ‘நியூஸ் மினிட் & நியூஸ் லாண்டரி’ ஆய்வு செய்து ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
என்ன நடந்தது?
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகான கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் நன்கொடையாக அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. இதில், 2018-19 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் 23 நிறுவனங்கள் பாஜகவுக்கு கொடுத்த ரூ.335 கோடி நன்கொடைதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
இந்தக் குறிப்பிட்ட 23 நிறுவனங்களும் வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட பிறகு பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது, ‘நியூஸ் மினிட் & நியூஸ் லாண்டரி’. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றும் சோதனைக்குப் பிறகு பாஜகவுக்கு ரூ.100 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களைத் திரட்டி இந்த உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது, ‘நியூஸ் மினிட் & நியூஸ் லாண்டரி’.
இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள ‘நியூஸ் மினிட்’ தன்யா ராஜேந்திரன், “பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு மூன்று வழிகளில் நன்கொடை அளிக்கப்படுகிறது. ஒன்று நேரடியாகப் பணமாக ஒரு சின்ன அளவில் நன்கொடை தருகிறார்கள். அடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுக்கிறார்கள். மூன்றாவது Electoral Trust மூலம்.
இந்நிலையில், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எந்தந்த வழிகளில் எவ்வளவு தேர்தல் நன்கொடை வருகிறது என்பது பற்றிய ஆவணங்களை நாங்கள் திரட்டினோம். அந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். நாங்கள் தேர்தல் நன்கொடைகளைப் பற்றிய ஆவணங்களை மட்டும் தனியாக எடுத்து ஆண்டு வாரியாக ஆராய்ந்தோம். பின்னர், அதில் ஒரு கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்த நிறுவனங்களைப் பற்றிய பட்டியலை பிரித்து எடுத்தோம்.
பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் யார்? அவர்கள் நிறுவனம் மீது வருமான வரி சோதனையோ அல்லது அமலாக்கத்துறை சோதனையையோ இந்தக் குறிப்பிட்ட 10 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளதா? என ஆராய்ந்தோம். அப்படி ஆராய்ந்ததில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட பிறகு ஒரு நிறுவனம் நன்கொடை கொடுத்துள்ளது தெரியவந்தது. உதாரணமாக அந்த நிறுவனம் ஏ என்று வைத்துக் கொள்வோம். அந்த ஏ நிறுவனம் கடந்த 2014 முதல் பாஜகவுக்கு நன்கொடையே கொடுக்கவே இல்லை. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது 2018ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. அதன்பின்னர் அந்த ஆண்டு மட்டும் அந்நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. 2022இல் மீண்டும் அந்த நிறுவனத்தில் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. அப்போது திரும்பவும் அந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை தந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் பாஜகவுக்கு 100 கோடி கொடுத்துள்ளது. அதுவும் சோதனை நடத்தப்பட்ட பிறகு இந்த நன்கொடையை வழங்கியுள்ளதையும் கண்டுபிடித்தோம். இன்னொரு நிறுவனம் 11 கோடி கொடுத்துள்ளது. இதே நிறுவனங்கள் மற்ற கட்சிகளுக்குக் கொடுத்துள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்தோம். காங்கிரசுக்கோ திமுகவுக்கோ அதிமுகவுக்கோ இவர்கள் கொடுத்தார்களா எனத் தேடினோம். அவர்கள் இந்தக் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கவே இல்லை. பாஜகவுக்கு மட்டுமே கொடுத்துள்ளன. அந்த 11 கோடியை அந்த நிறுவனம் எப்போது கொடுத்துள்ளது எனப் பார்த்தோம். அதன் மீது சோதனை நடத்தப்பட்ட பின் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் பார்த்த போதுதான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. முதலில் ஒரு நிறுவனத்தில் சோதனை நடக்கிறது. அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பாஜகவுக்கு நன்கொடை போகிறது. இதில் ஏதோ ஒரு சந்தேகத்திற்கு உரிய யுக்தி உள்ளதாகத் தோன்றுகிறது. இப்படி நன்கொடை கொடுத்த நிறுவனங்கள் அரசிடமிருந்து ஏதேனும் ஒருவகையில் ஆதாயம் பெற்றிருக்கலாம் அல்லது நன்கொடை பெறுவதற்காக அந்த நிறுவனம் மீது சோதனை என்னும் பெயரில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள காலகட்டத்தை ஆராயும் போது நமக்கு இந்த சந்தேகம் வலுக்கிறது.
தெலங்கானாவில் ஒரு நிறுவனம் உள்ளது. அது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் நிறுவனம். பல ஆண்டுகளாகக் காங்கிரசிலிருந்து வந்த அவர் பாஜகவுக்கு மாறிவிட்டார். இரண்டு ஆண்டுகள் பாஜகவில் இருந்தார். அப்போது அந்த ஆண்டு அந்த கம்பெனி 6 கோடி ரூ. நன்கொடை பாஜகவுக்கு கொடுத்துள்ளது. அதன்பின்னர் அவர் மீண்டும் காங்கிரசுக்குச் சென்றுவிட்டார். உடனே 20 நாள்களில் அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள ஒரு கம்பெனி 3 கோடி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. அதன் முகவரியில் போய் கம்பெனி உள்ளதா எனப் பார்த்தோம். அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை. இப்படி பாஜகவுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை மீதும் அந்த நிறுவனங்கள் மீதும் சந்தேகம் எழுகிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ள நன்கொடைகள் பற்றிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் பல உண்மைகள் உலகத்திற்குத் தெரியவரும்” என்கிறார் தான்யா ராஜேந்திரன்.
மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குள்ளான கார்ப்பரேட் கம்பெனிகள், அதன்பின்னர் பாஜக கட்சிக்கு வழங்கிய அரசியல் நன்கொடைகள் கொடுத்தது குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
கே.சி. வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் சுமார் 30 நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.335 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள், புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு முன்பு பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது இல்லை. புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் பாஜகவுக்கு வழங்கும் நன்கொடையை அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய நிகழ்வு புலனாய்வு அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுத்து, நன்கொடை என்ற வடிவத்தில் மிரட்டி பணம் பறிக்கும் ஆளுங்கட்சி செயலுக்கு இது மிகத் தெளிவான நிகழ்வுகளாகும்.
பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணை அமைப்புகளால் எடுக்கப்பட்ட நவடிக்கைகள் தவறானது என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. ஆனால், அமலாக்கத் துறையின் விசாரணை வழக்குகள் இருக்கும் நிறுவனங்கள் ஏன் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது தற்செயல் நிகழ்வு மட்டும்தானா?
உங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், பாஜகவின் கஜானா நிரம்புவதற்கு காரணமான காலவரிசை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு அளிக்கத் தயாரா? உண்மையை விளக்க நீங்கள் தயாராக இல்லை என்றால், பாஜகவுக்காக நன்கொடையாக கொள்ளையடித்த இந்த சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உங்களை நீங்களே விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ‘மத்திய புலனாய்வு அமைப்புகளை வற்புறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ‘ரெய்டும் வசூலும்’ என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி, “ஆண்டுக்காண்டு நன்கொடை வராவிட்டாலும் ரெய்டு… நன்கொடை தொகை குறைந்தாலும் ரெய்டுதான்… ED, IT ஒன்றிய அரசின் முகமைகளா? தேர்தல் நிதி வசூல் முகமைகளா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.