No menu items!

மிஸ்ஸாகும் கூட்டணி சிக்கலில் அண்ணாமலை –  மிஸ் ரகசியா

மிஸ்ஸாகும் கூட்டணி சிக்கலில் அண்ணாமலை –  மிஸ் ரகசியா

 “பிப்ரவரி 27-ம் தேதி ஏதும் தப்பா நடந்துடக் கூடாதேன்னு திமுக,  காங்கிரஸ் தலைவர்கள் டென்ஷன்ல இருக்காங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “அன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”

 “தெரியாத மாதிரி கேட்கறீங்களே… அன்னைக்குத்தானே பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர்றார்.”

 “பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர்றதுக்கும், திமுகவும் காங்கிரஸும் டென்ஷன் ஆகிறதுக்கும் என்ன சம்பந்தம்?”

“பிரதமர் வர்ற அன்னைக்கு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சில பிரபலங்களை பாஜகல சேர்க்கிறதுல அண்ணாமலை தீவிரமா இருக்கார். பிரஸ் மீட்லகூட ‘நீங்கள் எதிர்பார்க்காத பலர் இன்னும் சில தினங்களில் எங்கள் கட்சியில் ஐக்கியம் ஆவார்கள்’னு அவர் சொல்லி இருக்கார்.  ஏற்கனவே அதிமுக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்னு டெல்லி பாஜக தலைவர்கள் அவர் மேல கோபத்துல இருக்காங்க.  அதானால அவங்களை சமாதானப்படுத்த பல கட்சிகள்ல இருந்தும் ஆட்களை இழுக்கற வேலையில அண்ணாமலை இருக்கார். 27-ம் தேதி பிரதமர் வரும்போது மாற்றுக் கட்சி பிரபலங்களை பிரதமர் முன்னிலையில கட்சியில சேர்க்கிறது அவரோட திட்டம். ஒரு பக்கம் விஜயதாரிணிகிட்ட பாஜகல சேர  சம்மதம் வாங்கிட்டதா சொல்றாங்க. இன்னொரு பக்கம் .கொலை வழக்கில் சிக்கி இருக்கற கடலூர் திமுக எம்.பி.யை வளைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கார். இந்த முறை வாய்ப்பு கிடைக்காதுன்னு நம்பற சில திமுக எம்பிக்கள், மன வருத்தத்துல இருக்கற எம்.எல்.ஏக்களுக்கும் அண்ணாமலை தூது விட்டுட்டு இருக்கார் அதனால இந்த முறை அண்ணாமலையோட பேச்சை திமுகவும், காங்கிரஸும் கொஞ்சம் சீரியஸா எடுத்துட்டு இருக்கு. அதனால வருத்தத்தில் இருக்கிற கட்சி பிரமுகர்கள்கிட்ட உதயநிதியே போன் போட்டு பேசிட்டு இருக்காராம்.”

”அண்ணாமலையையும் பாஜகவையும் நம்பி தமிழ்நாட்டுல பெரிய கட்சிகள்லருந்து முக்கியமான ஆளுங்க வருவாங்களா?”

“நல்ல கேள்விதான். ஆனாலும் அடுத்து மத்தியில ஆட்சியை பிடிக்கப் போற கட்சின்ற இமேஜ் இப்போ பாஜக மேல இருக்கு. அதனால வரலாம்”

“காங்கிரஸ் கட்சியை பெருசா மதிக்காம இருந்த ஆம் ஆத்மி கட்சியும், சமஜ்வாதி கட்சியுமே அவங்களோட தொகுதிப் பங்கீட்டை முடிச்சிட்டாங்க. திருணாமுல் கட்சியும் காங்கிரஸோட பேசி முடிச்சுட்டதா சொல்றாங்க. ஆனா காங்கிரஸ் கட்சியை ஆரம்பத்துல இருந்து தீவிரமா ஆதரிக்கிற திமுக இன்னும் தொகுதி உடன்பாட்டை முடிக்காம இருக்கே?”

 “எல்லாத்துக்கும் சீட்தான் காரணம். போன முறை ஒதுக்கின மாதிரி இந்த முறையும் தமிழ்நாட்ல 9 தொகுதிகளை ஒதுக்கணும்கிறது காங்கிரஸ் கட்சி தலைவர்களோட கோரிக்கை. காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும்,  டெல்லி காங்கிரஸ் பார்வையாளர்களும் முதல்வர்கிட்ட இதைப் பத்தி பேசி இருக்காங்க. ஆனா அவங்களுக்கு இத்தனை தொகுதிகளை ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் தயாரா இல்லை. அதனால ‘தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைச்சிருக்கோம். நீங்க அவங்ககிட்ட பேசுங்கன்’னு பந்தை அந்த பக்கம் திருப்பி விட்டிருக்காராம்.”

“எல்லா பாலையும் டி.ஆர்.பாலு பக்கம் அடிக்கறாரா முதல்வர்?”

 “எல்லா பாலையும் அவரால திருப்பி விட முடியலை. ஒரு சில பாலை அவர் சந்திச்சுதான் ஆகவேண்டி இருக்கு?”

 “அப்படி எதை சந்திக்க வேண்டி இருக்கு?”

 “கூட்டணி கட்சிகளை சுலபமா எதிர்கொள்ற முதல்வரால, சொந்த கட்சிக்காரங்களை எதிர்கொள்ள முடியலை. குறிப்பா உதயநிதி ஸ்டாலின் இந்த முறை இளைஞர் அணிக்கு அதிக சீட் வேணும்னு நிக்கறார். இன்னொரு பக்கம் கனிமொழி தன் பங்குக்கு ஒரு லிஸ்ட்டை ஸ்டாலின்கிட்ட கொடுத்துட்டு, ‘இவர்களுக்கு கட்டாயம் சீட் தரணும். இது  அன்புத்  தங்கையின்  வேண்டுகோள்’னு சொல்லி இருக்கார். அவர் கேட்கிற பல சீட்கள் இப்ப கூட்டணி கட்சிகள் கையில் இருக்கு. அதனால என்ன பண்றதுன்னு தெரியாம குழப்பத்துல இருக்காராம் ஸ்டாலின்.”

 “கலைஞரோட நினைவிட திறப்பு விழாவை தமிழக அரசு சிம்பிளா நடத்துதே?”

“கலைஞர் நினைவக திறப்பு விழாவை பிரம்மாண்டமான அரசு விழாவா  நடத்ததான் முதல்ல முதல்வர் நினைச்சிருந்தார்.  ஆனா ஏற்கெனவே அவருக்கு நினைவகம் தேவையாங்கிற விமர்சனங்கள் எழுந்ததால சிம்பிளா விழாவை நடத்தறார். அதோட கலைஞர் நினைவகத்துடன் சேர்த்து அண்ணா நினைவகத்தையும் புனரமைப்பு செய்ய சொல்லி இருந்தார். இப்போது இந்த விழாவுக்கு அழைப்பு எதுவும் கிடையாது விளம்பரம் எதுவும் இல்லாமல் எல்லோரும் வாருங்கள்னு பொதுவா சட்டசபையில் அறிவிச்சிருக்கார் முதல்வர்.”

 “அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்படி போய்ட்டு இருக்கு?”

 “அதிமுகவோட  தொகுதி பங்கீடு செய்யறதுல தேமுதிகவுக்கும்,  பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த ச்சிக்கலும் இல்லை. ஆனால்  ‘வைட்டமின் ப’ தான் பிரச்ச்சினையா இருக்கு. தேர்தல் செலவுக்கான பணத்தை எங்ககிட்ட தரணும்னு 2 கட்சி தலைவர்களும் கேட்கிறாங்காளாம். ஆனால் அதுக்கு உடன்பட எடப்பாடி பழனிசாமி தயாரா இல்லை.  ‘அதுக்கு வாய்ப்பு இல்லை. போன தடவை நாங்க கொடுத்த பணத்தை நீங்க சரியா செலவு செய்யலை. அதனால அந்த சீட்டெல்லாம் கைவிட்டு போயிடுச்சு. அதனால இந்த முறை எங்க கட்சியேதான் நேரடியா செலவுகளைச் செய்யும். பணத்தை உங்ககிட்ட நேரடியா தர முடியாதுன்னு எடப்பாடி அடிச்சு சொல்லிட்டாராம்.”

“பாஜக அதவிட அதிகமான வைட்டமின்களை தந்து இந்தக் கட்சிகளை இழுத்துடும் சொல்றாங்களே?”

“அவங்ககிட்ட அதிகமான வைட்டமின் இருக்கத்தான் செய்யுது. ஆனா பாஜகவுடன் கூட்டணி அமைச்சு அந்தக் கட்சிக்கு இங்க வாக்கு சதவீத்தை உயர்த்திக் கொடுக்க கட்சிகள் தயங்குறாங்க. அது மட்டுமில்லாம பாமக, தேமுதிக தலைவர்கள் பாஜக கூட்டணியை விரும்பினாலும் அடுத்தக் கட்ட தலைவர்கள் பாஜகவோட கூட்டணினா நமக்கு வர்ற ஓட்டும் வராது, இதுதான் யதார்த்தம்னு சொல்லி பயம் காட்டுறாங்களாம்”

”பாஜகவுக்கு கூட்டணிக்கு ஆள் கிடைக்கலனா அண்ணாமலைக்கு சிக்கலாகுமே..என்ன செய்யப் போகிறார்?”

”அவர் சிக்கல்ல இருக்கிறதை அவர் கட்சி ஆளுங்களே மகிழ்ச்சியா வேடிக்கைப் பார்க்கிறாங்க. இந்தத் தேர்தலோடு அண்ணாமலையை பாஜகவில் ஒதுக்கிடணும்னு ஒரு குழு வேலை செஞ்ச்சுக்கிட்டு இருக்கு. அவங்களையும் அண்ணாமலை சமாளிக்க வேண்டியிருக்கு”

”பாவம்தான்…எப்படி சமாளிக்கப் போறார்?”

“கூட்டணி இல்லாம தனியா நின்னு நம்ம பலத்தை காட்டலாம். நம்ம பலம் முன்னைவிட ஜாஸ்தியாகிருக்கு. அது 2024 தேர்தல்ல தெரியும்னு மேலிடத்துல சொல்லியிருக்கிறார்”

“அவங்க என்ன சொன்னாங்களாம்”

“பலம் கூடி இருந்தா கூட்டணிக்கு எல்லா கட்சியும் வருமே கேட்டிருக்காங்க. ஆனாலும் டெல்லில அண்ணாமலைக்கு சக்தி வாய்ந்த இருவருடைய ஆதரவு இருக்கு. அதனால அண்ணாமலை பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லைனு டெல்லில சொல்றாங்க”

“பிரதமர் விழாவுல முதல்வரும் கலந்துக்கிறாராமே? அரசியல்ல சண்டை போட்டாலும் விழாக்கள்ல ஒண்ணா கலந்துக்கிறாங்களே?”

”ஆமாம், தூத்துக்குடில நடக்கிற விழாவுல பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் கலந்துக்கிறாங்க. அந்த மேடைலன் தூத்துக்குடி எம்.பி கனிமொழியும் இருப்பாங்களனு சொல்றாங்க”

“சென்னை விழாவுல பிரதமர் விழாவுல உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கிறாரு. தூத்துக்குடில கனிமொழி கலந்துக்கிறாங்க..ஒண்ணும் புரிய மாட்டேங்குது”

“இது பேருதான் நாகரிக அரசியல் திராவிட மாடல் அரசியல்னு சொல்வாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினால் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...