ராகுல் காந்தியை தொடர்ந்து அடிக்கும் பாஜகவினருக்கு இப்போது இன்னொரு காரணம் கிடைத்துவிட்டது. ஐஸ்வர்யா ராயை ராகுல் காந்தி அவமானப்படுத்திவிட்டார் என்று ராகுல் காந்திக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடந்தது இதுதான்.
உத்தரபிரதேசத்தில் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அங்கு ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழாவுக்கு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை அழைக்கவில்லை. இவர்கள்தான் இந்தியாவின் 73 சதவீதத்தினர். இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அதானி, அம்பானி, அமிதாப்பச்சன் போன்ற மேட்டுக்குடி பிரபலங்களையும் தொழிலதிபர்களையும்தான் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைத்தார்கள். பழங்குடியினத்தை சேர்ந்த நமது குடியரசுத் தலைவர் திரவுபதி மர்முவைக் கூட அழைக்கவில்லை. இதுதான் இவர்கள் இந்தியா. உங்களுடைய இந்தியா அல்ல’ என்று குறிப்பிட்டார். கூட்டத்தினரைப் பார்த்து வேறு என்ன பார்த்தீர்கள் என்று கேட்டதும் அவர்கள் ‘காத்ரீனா கைஃப்’ என்று சத்தமிட்டார்கள். உடனே காத்ரினா கைஃப் பேரையும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
மற்றொரு கூட்டத்தில் பேசும்போது ’தொலைக்காட்சி சேனல்கள் 24 மணி நேரமும் மோடியையும் அமிதாப்பச்சனையுமே காட்டிக் கொண்டிருக்கின்றன. ஐஸ்வர்யா ராய்டான்ஸ் ஆடுவதைக் காட்டுகின்றன.” என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் உடனே கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கஷ்டப்பட்டு முன்னேறி மிஸ் இந்தியா பட்டம் வென்று உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தப் பெண்ணை ராகுல் காந்தி இழிவுப்படுத்திவிட்டார்.
பெண்களை இழிவுபடுத்துவதையே ராகுல் காந்தி வழக்கமாக வைத்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னடப் பெண்ணான ஐஸ்வர்யா ராயை தாக்கியிருப்பதன் மூலம் கன்னட மக்களையே இழிவு செய்துவிட்டார்.
அவர் அம்மா சோனியா, சகோதரி பிரியங்கா பற்றி இப்படி பேசுவாரா?
இப்படி பல கண்டனங்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. இது குறித்து இதுவரை ஐஸ்வர்யா ராய் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
”ராகுல் கேட்ட கேள்விகளுக்கும் அவர் சொன்ன விஷயங்களுக்கும் பதிலளிக்காமல், ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் என்று பாஜகவின் பிரச்சினையை திசை திருப்பிவிடுகிறார்கள். இதுதான் பாஜகவின் நீண்ட கால பழக்கம்.” என்று பாஜக மீது விமர்சனம் வைக்கிறார்கள் ராகுல் காந்தி ஆதரவாளர்கள்.