‘புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறை போன்றது’ என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிச் மான்; ‘புத்தகத்தைப் போல விசுவாசமான நண்பர் யாரும் இல்லை’ என்கிறார் எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே. அப்படி தன்னைக் கவர்ந்த, தன்னை பாதித்த 10 புத்தகங்கள் பற்றி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் நடிகை ரோகிணி. அது இங்கே…
கட்டடக் கலைஞர் லாரி பேக்கர் நூல்கள்
பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில், குறிப்பாக சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், பிரிட்டினில் இருந்து சேவை செய்வதற்காக இந்தியா வந்தவர் லாரி பேக்கர். கட்டடக் கலைஞர். லாரி பேக்கரின் எல்லா நூல்களையுமே நான் படித்துள்ளேன். அனைத்து நூல்களுமே என்னைக் கவர்ந்தவை.
லாரி பேக்கர் இந்தியாவில் முதலில் இமாசலப் பிரதேசத்தில்தான் இருந்தார். அவரது மனைவி ஒரு மருத்துவர். தொழு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். லாரி பேக்கர் அப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டும் பணியை ஒரு தொண்டாகவே செய்து வந்துள்ளார்.
அப்போது லாரி பேக்கருக்கு இந்திய கட்டடக் கலை மிகவும் பிடித்துவிட்டது. ஒரு வீடு கட்டும் போது, அதன் அருகாமையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே வீடு கட்டும் அன்றைய இந்திய கட்டடக் கலையை அற்புதமான கட்டடக் கலை என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இன்று அதிலிருந்து நாம் நீண்ட தூரம் விலகி வந்துவிட்டோம். எங்கோ இருந்து சிமெண்ட் வருகிறது, வேறு எங்கோ இருந்து மணல் வருகிறது, இன்னொரு இடத்தில் இருந்து கம்பிகள் வருகிறது… இதனால் அந்த வீட்டின் பலம் குறைவதுடன் வீடு கட்டும் செலவும் அதிகரிக்கிறது என்கிறார் லாரி பேக்கர்.
இமாச்சலில் இருந்து கேரளாவுக்கு வருகிறார் லாரி பேக்கர். மிக மலிவாகவும் அதே நேரம் மிக திடமாகவும் வீடுகள் கட்ட முடியும் என்பதை அங்கே அவர் கண்டுபிடித்து அதை செயல்படுத்துகிறார். ஏசி இல்லாமல் ஆனால் மிக குளுமையாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும்படி அவர் கட்டிய வீடுகள் உள்ளன. அதைப் பார்த்து கேரளா அரசாங்கமே பல வீடு கட்டும் திட்டங்களை அவரிடம் ஒப்படைக்கிறது. கேரளாவில் அவர் கட்டிய வீடுகள் இன்றும் திடமாக உள்ளன. லாரி பேக்கர் வீடுகள் என்றே அவை அழைக்கப்படுகின்றன.
நாம் இப்போது எல்லா இடங்களையும் சிமெண்ட் போட்டு மூடிவிட்டோம். தண்ணீர் நிலத்துக்குள் இறங்க இடமே இல்லாமல் ஆகிவிட்டது. அது மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது. இப்படி காங்கிரீட் காடுகளாக நாம் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்கு லாரி பேக்கரின் யோசனைகள் மிக தேவையானவை என்று நான் நினைக்கிறேன்.
அவதூறுகளின் காலம் – இளம்பிறை
இது ஒரு கவிதை நூல். ஆனால், இந்த ஒரு நூல் மட்டுமல்லாமல் இளம்பிறையின் எல்லா கவிதை நூல்களுமே எனக்கு விருப்பமானவைதான். ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி பேசுவது, ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைப் பற்றி பேசுவது, எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பேசுவது என்ற வகையில் மிக அருமையான கவிதைகள் இளம்பிறையினுடையவை.
நான் எடுக்கப்போகும் ஒரு குறும்படத்தில் இளம்பிறை கவிதைகளை நான் பயன்படுத்தப் போகிறேன். அந்தளவு இளம்பிறை கவிதைகள் எனக்கு பிடிக்கும். மிக மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் ஒரு இடத்துக்கு போகிற பெண்களைப் பற்றி பேசும் குறும்படமாக அது இருக்கும். இந்த குறும்படத்தில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் ஒரு கவிதையையும் நாங்கள் பயன்படுத்த இருக்கிறோம்.
மீசை என்பது வெறும் மயிர் – ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யாவின் அனைத்து சிறுகதைகளும் மிக முக்கியமானவை. அதேநேரம், அதிலும் மிக முக்கியமானதாக நான் நினைப்பது, ‘மீசை என்பது வெறும் மயிர்’ என்னும் கதைதான். மீசையை முறுக்குவதுதான் வீரம், பெண்களைவிட அல்லது தாழ்த்தப்பட்டவர்களைவிட நீ பெரிய வீரன் என்றால் மீசையை முறுக்கு என்றுதான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீரத்தை காண்பிக்க விதவிதமான மீசைகளை வைத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில், மீசை என்பது ஒன்றுமே கிடையாது; அது வெறும் மயிர்தான் என்னும் இடத்தில் இருந்து பேசுகிறார், ஆதவன் தீட்சண்யா.
கதைகள், கவிதைகள் போலவே ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரைகளும் மிக முக்கியமானவை. அந்த கட்டுரைகளில், வரலாற்றுக்குள் போய், அன்றைய நிகழ்வுகள் தந்த பாடத்தின் அடிப்படையில் இன்றைய நிகழ்வுகளை ஆராய்ந்து எழுதியிருப்பார். வரலாற்றை தெரிந்துகொண்டு, அதனடிப்படையில் நிகழ்காலத்தை புரிந்துகொண்டால்தான், எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க முடியும். அந்தவகையில், ஆதவன் தீட்சண்யாவின் கட்டுரைகளும் என்னை பாதித்தவை.
தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
ரோகிணி பேட்டியை பார்க்க