No menu items!

பெங்களூரில் தொடங்கிய ரஜினி அண்ணாமலை நட்பு – மிஸ் ரகசியா

பெங்களூரில் தொடங்கிய ரஜினி அண்ணாமலை நட்பு – மிஸ் ரகசியா

 “திருச்சில நடந்தது சென்னைல நடக்கக் கூடாதுன்னு சேகர்பாபுவுக்கு உத்தரவு போட்டிருக்காராம் முதல்வர்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “இப்படி மொட்டையா சொன்னா எப்படி? என்ன விஷயம்னு தெளிவா சொல்லேன்.”

 “திருச்சியில் சில நாட்களுக்கு முன் பிரதமரும், முதல்வரும் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் பேசும்போது சிலர், ‘மோடி மோடி’ன்னு கோஷம் போட்டாங்க. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்னைக்கு நடக்கப்போற கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்ச்சி தொடக்க விழால அது மாதிரி எந்த சம்பவமும் நடக்கக் கூடாதுன்னு சேகர் பாபுவுக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்காராம். அதனால சேகர்பாபுவும் இந்த நிகழ்ச்சியில திமுகவினர் அதிகமா கலந்துக்கற மாதிரி ஏற்பாடுகளை செஞ்சிருக்கார்.”

”இப்பல்லாம் பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர்றாரே?”

 “நாடாளுமன்ற தேர்தல் வரை பிரதமரோட தமிழக விசிட்கள் தொடரும்னு பாஜகல பேசிக்கறாங்க.  அதே சமயம் அமித் ஷா தமிழக நிகழ்ச்சிகளை தவிர்த்துட்டு வர்றாராம். அதிமுகவுடன் கூட்டணி முறிவு போன்ற விஷயங்களால அவருக்கு சில மன வருத்தங்கள் ஏற்பட்டதுதான் இதுக்கு காரணம். அமித் ஷா பின் வாங்கறதாலதான் பிரதமரே தமிழக அரசியல்ல முழு கவனம் செலுத்தறாராம்.”

 “அதனாலதான் டெல்லியில மத்திய அமைச்சர் முருகன் நடத்தின பொங்கல் விழால அவர் கலந்துக்கிட்டாரோ?”

 “அது அவர் எல்லா வருஷமும் கலந்துக்கற நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் நடிகை மீனாவை கூப்பிட்ட அமைச்சர் முருகன், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவை கூப்பிடல. அதனால குஷ்பு கொஞ்சம் மன வருத்தத்துல இருக்காராம்.”

“மீனா எப்படி இந்த விழாவுல கலந்துக்கிட்டாங்க?”

“டான்ஸ் மாஸ்டர் கலாதான் கூட்டிட்டுப் போனாராம். மீனாவுக்கு அரசியல்ல அத்தனை ஆர்வம் இல்லை. ஆனா கலாதான் சும்மா வானு கூட்டிட்டுப் போனதா தகவல் இருக்கு”

“கலா மாஸ்டரும் குஷ்பூவும் ரொம்ப க்ளோஸ் ஆச்சே…அப்புறம் எப்படி குஷ்பு இல்லாம மீனாவை கூப்பிட்டாங்க”

“தமிழ்நாட்டு பாஜக தலைவர்கள் யாருக்கும் குஷ்புவை பிடிக்கல. டெல்லி தலைவர்களுக்கும் குஷ்பு மேல நம்பிக்கையில்லை. நாடாளுமன்றத் தேர்தல்ல தனக்கு வாய்ப்பு தருவாங்கனு குஷ்பு அமைதியா பொறுமை காத்துக்கிட்டு இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் அரசியல் நிலைப்பாடு மாறலாம்னு தகவல் இருக்கு”

”குஷ்பூ இடத்தை மீனா பிடிச்சிடுவாங்களா?”

“மீனா இன்னும் அரசியலுக்கே வரலையே. ஆனா வரவே மாட்டாங்கனும் சொல்ல முடியாது”

“குஷ்பு மாதிரியே உதயநிதிக்கும் மன வருத்தம்னு ஒரு தகவல் வந்ததே?”

“அவரோட வருத்தமெல்லாம் திமுக ஐடி விங் மேலதான். இளைஞர் அணி மாநாட்டை பொது மக்கள்கிட்ட  திமுக ஐடி விங் சரியா கொண்டு போகலைன்னு அவங்க மேல உதயநிதி வருத்தமா இருக்கார். அதனால இப்ப அவர் தனியா  ஒரு குழுவை அமைச்சு  அவங்க  மூலமா இளைஞர் அணி மாநாடு பற்றிய அப்டேட்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துட்டு வர்றார்.”

”நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுல உதயநிதியை போட்டிருக்காங்களே?”

“கட்சில அவர் முன்னேறிகிட்டு வரார்ன்றதை காட்டுது. கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பெயர்களுக்குப் பின்னால்தான் அவர் பேரை போட்டிருக்காங்க”

“தேர்தல் அறிக்கை குழு தலைமையா கனிமொழியை நியமிச்சிருக்காங்களே..2019 தேர்தலின்போது டி.ஆர்.பாலுதானே தேர்தல் அறிக்கை குழு தலைவரா இருந்தாரு?”

“அவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவராக போட்டிருக்காங்களே? ஆனா, அதுல கனிமொழி இல்லை”

 “சசிகலா 7 வருஷம் கழிச்சு கோடநாட்டுக்கு போயிருக்காரே?”

“கோடநாடு எஸ்டேட்டுக்கு முன்னால ஜெயலலிதா சிலை அமைக்கறதுக்கான பூமி பூஜையில கலந்துக்க அவர் கோடநாடு போயிருக்கார். முதல்ல இந்த நிகழ்ச்சியில கலந்துக்க அவர் ஆர்வமா இல்லை. ஆனா பிறகு மனசு மாறி இந்த நிகழ்ச்சியில கலந்துக்க போயிருக்கார். நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சசிகலா  திரும்பவும் அரசியல்ல கவனம் செலுத்துவார்னு அவரோட ஆதரவாளர்கள் சொல்றாங்க.”

 “அவர் ஓபிஎஸ்சோட கை கோர்ப்பாரா?”

 “இப்போதைக்கு அவர் ஓபிஎஸ் பக்கம் போறதா இல்லை. அவர்கிட்ட கட்சி, கொடின்னு எதுவுமே இல்லை. அதனால அவரை சந்திக்க வேண்டாம்னு சசிகலா நினைக்கிறார். அவருக்கு பதிலா எடப்பாடியை திரும்பவும் தன்னோட வழிக்கு கொண்டுவர்றது எப்படின்னு அவர் யோசிக்கறார்.”

 “சசிகலாவை எடப்பாடி சேர்த்துக்குவாரா?”

“தன்னோட யாராவது சேர மாட்டாங்களான்னு தேடற நிலைலதான் இப்ப எடப்பாடி இருக்கார்.  அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்னு அவர் பேசினாலும், யாரும் அதிமுகவோட கூட்டணி அமைக்கத் தயாரா இல்லை. சீமான்கூட கூட்டணி வைக்க தூதர்களை அனுப்பினார்.  ஆனா அவர் கூட்டணியில் சேரத் தயாரா இல்லை.  விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக மேல அதிருப்தியில் இருக்கோன்னு நினைச்சு அவங்களை தொடர்புகொண்டா,  ‘முதல்வர் ஸ்டாலினை அழைச்சு  நாங்கள் திருச்சியில் மாநாடு நடத்துறோம். கூட்டணி மாற நாங்க தயாரா இல்லை’ன்னு அவங்களும் கதவை மூடிட்டாங்க. வாசனும் பாஜக மேலதான் காதலா இருக்கார். இப்படி எல்லாரும் கைவிரிச்சதால ஜாதிக் கட்சிகள் பக்கம் போலாமான்னு எடப்பாடி யோசிச்சுட்டு இருக்காராம்.”

”அவர்கூடதான் இப்ப புதுசா ஒருத்தங்க சேர்ந்திருக்காங்களே?”

“காயத்ரி ரகுராமை சொல்றிங்களா? அவங்க திமுக பக்கம்தான் போறதா இருந்தது. ஆனா திமுகவுடன் சேர்ந்த அவங்களோட ஆன்மிக இமேஜ் பாதிக்கும்னு அவங்ககூட இருந்தவங்க அட்வைஸ் பண்ணியிருக்காங்க. அதனால அதிமுக. அவங்க அதிமுகவுக்கு வந்ததுல எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியாம்”

“ஏன்”

“அண்ணாமலையை திட்ட காயத்ரி ரகுராம்தான் சரியான ஆள்னு நினைக்கிறார். அது மட்டுமில்லாம அவங்களை நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட வைக்கலாம்னும் நினைக்கிறாராராம்.”

”கட்சிக்காரங்க ஏத்துப்பாங்களா?”

”போட்டி போடறதுக்கு ஆளே கிடைக்காதபோது இவங்க கிடைச்சா நல்லதுதானே”

”கஷ்டம்தான், சரி, பாஜக நிலைமை எப்படியிருக்கு?”

”அவங்களுக்கும் அதே நிலைமைதான் கூட்டணிக்கு யார் வருவாங்கனு பாத்துக்கிட்டு இருக்காங்க”

“அண்ணாமலை தனக்கு சி.எம். ஆசை இல்லனு சொல்லியிருக்கிறாரே?”

“ஆமா. அண்ணாமலை சி.எம்.னு ரஜினி சொன்னதா குருமூர்த்தி பேசுனதை வச்சு சொல்லியிருக்கிறார். ஆனா அவருக்கு உண்மையில் சிஎம் ஆசை இருக்கு. அது ரஜினிக்கும் தெரியும்”

“அது என்ன கதை?”

“கர்நாடகத்துல பி.எல்.சந்தோஷ்னு பாஜகவுல முக்கியமான நபர் இருக்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடியே சந்தோஷ் கூட அண்ணாமலைக்கு நட்பு இருந்தது. ரஜினியும் சந்தோஷும் நல்ல நண்பர்கள். ரஜினி கட்சி ஆரம்பிச்சப்ப தான் முதல்வர் ஆகப் போறதில்லைனு சந்தோஷ்கிட்ட சொல்லியிருக்கிறார். உடனே சந்தோஷ், அப்படினா ஒரு போலீஸ் ஆபிசர் இருக்கிறார். அவருக்கு அரசியல் ஆசை இருக்கு. அவரை ட்ரை பண்ணுங்கனு சந்தோஷ் சொல்லியிருகிறார். அப்புறம் ரஜினியையும் அண்ணாமலையையு பெங்களூர்ல சந்திக்க வச்சிருக்கிறார். அதன் பிறகுதான் அண்ணாமலை சிஎம்னு குருமூர்த்திகிட்ட ரஜினி சொன்னது நடந்திருக்கு”

“எங்கருந்து இந்த தகவல் கிடைச்சது?”

“பெங்களூர் சோர்ஸ் சொன்னாங்க. அவங்க சந்தோஷ்க்கு நெருக்கமானவங்க”

”கடைசில எல்லா திட்டமும் க்ளோஸ் ஆயிடுச்சு”

“நல்ல வேளை க்ளோஸ் ஆச்சு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...