நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சையின் அதிர்வலைகளே இன்னும் அடங்கவில்லை; அதற்குள் குஷ்பூவின் பதிவு ஒன்று பேசுபொருளாகி உள்ளது. குஷ்புவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில், குஷ்பு மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
என்ன நடந்தது? குஷ்பு என்ன அப்படி பதிவிட்டிருந்தார்?
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நடிகை த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன்சூர் அலி கான் காவல்துறையினர் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, த்ரிஷா குறித்த பேச்சுக்காக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தினர் உட்பட பலரும் வலியுறுத்தினர். கண்டனமும் தெரிவித்தனர். ஆனால், தான் பேசியதில் தவறு ஏதும் இல்லை என்று தெரிவித்த மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் கருத்து பதிவிட்டிருந்த நடிகையும், தற்போது பாஜகவில் இருப்பவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ‘தன் மீது என்ன தவறு உள்ளது என்பதை மன்சூர் அலிகான் பார்க்க வேண்டும், அவரது பேச்சில் அவருடைய ஆணவம், பெண்கள் மீதான வெறுப்பும்தான் வெளிப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.
குஷ்புவின் இந்த எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்திருந்த தி.மு.க-வை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான ஷண்முகம் சின்னராஜ் என்பவர், மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் (Cheri language) பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களைப் போன்ற முட்டாள்கள் அவரைச் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு அவமானம். மு.க. ஸ்டாலின் உங்களை அழிக்க இந்த முட்டாள்கள் கூட்டம் வெளியே இருக்கிறார்கள், ஜாக்கிரதை” என கூறியிருந்தார்.
இதில் உள்ள ‘சேரி மொழி’ என்ற வார்த்தை பிரயோகம்தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’, ‘குஷ்பு, பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளை ‘சேரி மொழி’ என்று முத்திரை குத்துகிறார். சேரி என்பது தலித் வசிக்கும் இடங்களுக்கான தமிழ் வார்த்தையாகும். இது சாதி, பாலினம் மற்றும் பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் பெண்களின் தலைமுறைகளுக்கு இடையேயான எதிர்ப்பைக் கண்ட இடம். அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையின் ‘பேச்சுமொழி’ பயன்பாட்டை இயல்பாக்குவது, அவதூறு என்ற அர்த்தத்திற்குள் சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையைப் புறக்கணிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
கவிஞர் சுகிர்தராணி, ‘ஏண்டியம்மா குஷ்பூ.. எது சேரி லேங்குவேஜ்? உந்து இன்னா லேங்குவேஜ்? அது இன்னா… யாரையாச்சும் எதுவாச்சும் சொல்லனும்னா, சேரி பிஹேவியர், சேரி லேங்குவேஜ்னு எங்களாண்ட ஒடீயாறீங்க!! சேரி ஓட்டு வாங்கும்போது நல்லாகீதா? நீ எல்லாம் என்னாத்த படிச்சியோ… எங்க படிப்புல பண்புல கால்தூசி பெற மாட்ட… ச்சீ… கம்னு போம்மே!!” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு தனது பதிவில் மன்சூர் அலி கான் வீட்டு பெண்கள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “மன்சூர் அலிகான் வீட்டுப் பெண்களின் மேன்மை அவரின் நடத்தையின்பாற்பட்டதா? முதலாவது (‘சேரி மொழி’ என்றது) சாதி ஆதிக்கம், இரண்டவது (மன்சூர் வீட்டு பெண்கள் பற்றி கூறியது) ஆணாதிக்கம்” என பதிவிட்டுள்ளார்.
‘சேரி மொழி’ என்ற வார்த்தை சர்ச்சையான நிலையில், அது குறித்து விளக்கமளித்த குஷ்பூ, ‘பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன்” என கூறினார்.
ஆனால், “அன்பு (Love) எனும் சொல்லுக்கு பிரஞ்சு மொழியில் La charite என்பதே சரியான சொல். இதிலிருந்து வந்ததுதான் charity. அதையும் ‘ல ஷரிட்டே’ என்றே உச்சரிக்கிறார்கள். இதில், ‘சேரி’ எங்கிருக்கிறது?” என்கிறார் எழுத்தாளர் சோழ நாகராஜன்.
“Mon Chéri என்று பிரெஞ்சில் சொன்னால் என் அன்பே என்று பொருள். ஆனால், குஷ்பு தன் பதிவில் சேரி என்ற சொல்லை அன்பு என்னும் பொருள்படும்படி பயன்படுத்தவில்லை” என்கிறார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
குஷ்புவின் விளக்கம் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பு அவமதித்துள்ளார். மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும்கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்யத் தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தம் என யாரை ஏமாற்ற குஷ்பு கபட நாடகமாடுகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குஷ்புக்கு முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ‘சேரி பிஹேவியர்’ என்று குறிப்பிட்டு பேசி நடிகை காயத்ரி ரகுராமும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது அதே வார்த்தையை குஷ்பூ பேசியுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், “நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் மிக அதிக வலியை உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். அதுபோல் குஷ்புவும் தன் தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். ‘சேரி மொழியை’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக குஷ்பு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னர் பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவையும் அதன் தமிழக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ‘‘ஆறு ஆண்டுகளுக்கு முன்பு என்று காயத்ரி ரகுராம் பேசிய போதே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது குஷ்புவுக்கு இப்படிப் பேச வாய் வந்திருக்குமா? இனியும் தாமதிக்காமல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என்கிறார், எழுத்தாளர் தீப லஷ்மி.
குஷ்பு, மன்னிப்பு கேட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது மன்சூர் அலி கான் போல் வழக்கை எதிர்கொள்வாரா? பொறுந்திருந்து பார்ப்போம்.