No menu items!

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… மன்னித்த த்ரிஷா!

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… மன்னித்த த்ரிஷா!

த்ரிஷா தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவித்துள்ளார். “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!!” என்று இது தொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘லியோ’ படத்தில் நடித்த்தைப் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். இதில் த்ரிஷாவைப் பற்றி அவர் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகானின் பேச்சு குறித்த தனது அதிருப்தியை த்ரிஷா வெளியிட திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்..

மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்மன் வழங்கினர். இதைத்தொடர்ந்து அவர் நேற்று அந்த காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் த்ரிஷா தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்கு இன்று மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்சூர் அலிகான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன்
எனை மன்னித்துவிடு!

ஒரு வாரமாக கத்தியின்றி ரத்தமின்றி நடந்த போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தன. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும் அதானிந்தியா மார்பில் தவழும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி த்ரிஷாவே
என்னை மன்னித்துவிடு!

இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.

மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் To err is human,to forgive is divine (தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வகுணம்) என்று பதிவிட்டிருந்தார். இதன்மூலம் மன்சூர் அலிகானை தான் மன்னித்ததாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...