ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையில் தேவையான நேரத்தில் ரன்களை அடிக்காததால் ஒருபுறம் ரசிகர்கள் சூர்யகுமார் மீது கோபமாக இருக்க, திடீர் அதிர்ஷட வாய்ப்பாக இந்த கேப்டன் பதவி அவரைத் தேடி வந்துள்ளது.
கூடவே உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.
சூர்யகுமாருக்கு கேப்டன் பதவி கிடைக்க மிக முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் காயம். டி20 போட்டிகளுக்கான அடுத்த கேப்டனாக ஹர்த்திக் பாண்டியாவைத்தான் தேர்வுக்குழு உருவாக்கி வந்தது, ஆனால் உலகக் கோப்பை போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் புதிய கேப்டனை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஹர்த்திக்கிற்கு அடுத்து கேப்டனாக வாய்ப்புள்ள ரிஷப் பந்த் காயத்தால் ஓய்வெடுக்க, அவரும் அணியில் சேர வாய்ப்பில்லை. ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுலும் ஓய்வுக்கு ஆசைப்பட, அடுத்த சீனியர் என்ற முறையில் சூர்யகுமாரைத் தேடி கேப்டன் பதவி வந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் சொதப்பினாலும், டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர்தான் ராஜா. இதுவரை 53 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சூர்யகுமார் யாதவ், அதில் மொத்தம் 1,841 ரன்களைக் குவித்துள்ளார். எல்லோரும் பொறாமைப்படும் விதமாக 172.7 என்ற ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார். அவர் அளவுக்கு ஸ்டிரைக் ரேட் கொண்டுள்ள வீர்ர்கள் வேறு யாரும் டி20 கிரிக்கெட்டில் இல்லை. சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவி கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இன்று ஏதோ அதிர்ஷ்டத்தால் அவருக்கு கேப்டன் பதவி கிடைத்ததுபோல் தெரிந்தாலும், இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய அணியில் நுழைவதற்கே 31 வயதுவரை அவர் காத்திருக்க வேண்டிவந்தது.
1990-ம் ஆண்டில் மும்பையில் பிறந்த சூர்யகுமார் யாதவுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். தெருவில் சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்த அவரது அப்பா, தனது மகனுக்கு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக நம்பினார். அவரை வெங்சர்க்கார் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே கிரிக்கெட் என்றாகிப் போனது.
2010-11லேயே ரஞ்சி கோப்பை கிர்க்கெட்டில் ஆடத் தொடங்கினாலும், இந்திய அணிக்கு அவர் தேர்வாக கடுமையாக போராடவேண்டி வந்தது. ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடும் சூர்யகுமார் யாதவ், ஒவ்வொரு முறையும் அணித் தேர்வு நடைபெறும்போது அதில் தனது பெயர் இருக்கும் என்று நம்புவார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இப்படி 2015-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு தேர்வு பெறுவார் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்.
கடைசியில் சூர்யகுமார் யாதவின் 31-வது வயதில்தான் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. லேட்டாக வந்தாலும் தான் லேட்டஸ்டாக வந்தவர் என்பதை தனது திறமையால் நிரூபித்த சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பந்துகளை பரக்கவிடுவதில் கெட்டிக்கார்ர். அதனாலேயே மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.