No menu items!

மன்சூர் அலிகான் Vs த்ரிஷா – என்ன நடக்கிறது?

மன்சூர் அலிகான் Vs த்ரிஷா – என்ன நடக்கிறது?

இந்தியாவில் சிலர் பேசாமல் இருப்பதாலேயே சர்ச்சைகள் கிளம்புகின்றன. ஆனால் சிலர் வாயை திறந்தாலே, திரும்பி பார்க்கும் இடமெல்லாம் கலவரமாகி விடுகிறது.

இதில் இரண்டாம் வகையறாவைச் சேர்ந்தவர் தமிழ் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான்.

விஜய் – லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் இணைந்த ‘லியோ’ படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார். இப்படம் வெளியானது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் வசூல் விஜய் கில்லிதான் என்று சொல்லும் வகையில் அப்பட வெற்றிவிழா சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது.

அவ்விழா மேடையில் பேசிய மன்சூர் அலிகான், ‘த்ரிஷா கூட நடிக்க வாய்ப்பே வரல. த்ரிஷா கூட நடிக்கிறேன்னு சொன்ன உடனேயே நான் ஒப்புக்கொண்டேன். லோகேஷ், ஹீரோயினி எல்லாம் இருக்காங்க. வழக்கம் போல அது இதுன்னு துரத்துவோம். கொள்ளுவோம்னு நினைச்சேன். ஆனா த்ரிஷாகிட்டவே என்ன நெருங்கவே விடல. அப்படியே ஃப்ளைட்டிலேயே கூட்டிட்டிப் போயிட்டு ஃப்ளைட்டிலேயே கொண்டு வந்துட்டாங்க. சரி மடோனா பாப்பாவது கிடைக்குமான்னு பார்த்தேன். செட்டுக்குள்ளே வந்தா, எனக்கு பயங்கர ஹேப்பி. மடோனா பாப்பா இருக்காங்களேன்னு பார்த்தா, எல்லோரும் ஜாலியா விளையாடலாம்னு பார்த்தா தங்கச்சி கேரக்டருன்னு சொல்லிட்டாங்க’ இப்படி வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தார்.

மன்சூர் அலிகானின் ஒட்டுமொத்த பேச்சையும் த்ரிஷா கேட்டுகொண்டு வெட்கத்தில் சிரித்தார். விஜய் மெல்லிய புன்னகையுடன் கேட்டு கொண்டிருந்தார்.  மடோனா விவரம் புரியாமல் என்னவோ போல் இருந்தார்.

இதுவரையில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மன்சூர் அலிகான். தனது ‘சரக்கு’ படம் தொடர்பாகவும், அரசியல் சார்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் மன்சூர் பத்திரிக்கையாளர்களிடம் பேச ஆரம்பித்தார்.

மன்சூர் அலிகான் பேசிக்கொண்டே இருக்கையில், மீண்டும் லியோ, த்ரிஷா பற்றிய பேச்சு கிளம்பியது.

‘வில்லனே போட மாட்டேங்குறாங்க. எனக்காக பேசலாம்ல அவரு. கற்பழிக்க விட மாட்டேங்குறாங்க. நான் அங்கேயே லியோவுல பேசலாம்னு பார்த்தேன். கலவரத்த உண்டுப்பண்ற சிலபேரு இருக்காங்கன்னு விட்டுட்டேன். எனக்கும் ரொம்ப ஆசையா இருந்துச்சு. இங்கே சொல்லிடுறேன். த்ரிஷா கூட நடிக்கணுமா.. ஆஹா.. நிச்சயமா பெட்ரூம் சீன்னெல்லாம் இருக்கும். குஷ்பூவை தூக்கி கட்டிலுல போட்ட மாதிரி ரோஜாவை தூக்கி போட்ட மாதிரி போடலாம். என்ன நண்பரே, நூத்தி ஐம்பது படத்துல நாம பண்ணாத ரேப்பா. நாம் பண்ணாத அட்டுழியமா. வில்லனே போட மாட்டேங்குறாங்கப்பா. த்ரிஷாவை அப்படியே கூட்டிட்டு போறாங்க. கண்ணுலயே காட்ட மாட்டேங்குறாங்க’ என்று சொன்னதுதான் ஒரு வாரம் கழித்து இணையத்தில் வைரலானது.

இதைப் பார்த்த த்ரிஷா, உடனடியாக இணையத்தில், ‘இப்போதான் ஒரு வீடியோ  என் கவனத்துக்கு வந்துச்சு. மன்சூர் அலிகான் என்னைப் பத்தி அருவெறுக்கத்தக்க வகையில் பேசியிருக்கார். இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். இது ஆணாதிக்க சிந்தனையில இருந்து வந்த மோசமான ரசனை கொண்ட பேச்சு. அவரைப் போன்றவருடன் இனிமேல் ஒரு போதும் சினிமாவுல சேர்ந்து நடிக்க மாட்டேன். இவரைப் போன்றவங்க மனித குலத்துக்கே கெட்டப் பெயரை கொண்டு வர்றாங்க’ என்று கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்தார் த்ரிஷா.

த்ரிஷா தனது கண்டனத்தை இணையத்தில் தெரிவித்ததுமே, லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் மன்சூர் அலிகானை கண்டித்து தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

த்ரிஷா குறித்து பேசுகையில் குஷ்பூவையும் குறிப்பிட்டு இருந்தார் மன்சூர் அலிகான். இதற்கு எதிர்வினையாற்றிய குஷ்பூ, ‘மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனது சீனியரிடம் பேசியிருக்கிறேன். அவரை சும்மா விடக்கூடாது’ என்று பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்து மன்சூர் அலிகான், ’அய்யா’ பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகளை அனுப்பிச்சாங்க.

அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில, வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில, அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி, காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நினைச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

த்ரிஷாகிட்ட தப்பா வீடியோவ காட்டியிருக்காங்க.

அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்.எல்.ஏ, எம்.பி. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்களை கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது.

த்ரிஷாகிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….

நன்றி!’ என்று தனது பதிலை வெளியிட்டார்.

இந்நிலையில், மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய கருத்து விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக சட்டப்பிரிவு 509-ன் கீழும், அது தொடர்பான பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கமும், ஒரு சில சினிமா சங்கங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளன.

பிரச்சினை பெரிதாகி கொண்டே போகும் சூழலில், மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், அரசியல் குறித்தும் பல சமூக பிரச்சினைகள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் சினிமா தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு நடிகனாகதான் பதிலளித்தேன். சினிமாவில் கொலை செய்வது போல் நடித்தால், உண்மையிலேயே கொலை செய்வதாகுமா. பாலியல் வன்கொடுமை செய்வது போல் நடித்தால், அதுவும் உண்மையா. எல்லாமும் நடிப்புகாகதான்.

இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது, என் கைக்கூட நடிகைகள் மீது தவறாகப் பட்டுவிடக்கூடாது என நினைப்பவன். சில காட்சிகளில் தெரியாமல் கைப்பட்டுவிட்டால் கூட மன்னிப்பு கேட்பவன் நான். யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் என்னை வைத்து சம்பாதிக்க நினைக்கிறார்கள். அது தப்பு இல்லை. என்னை வைத்து அவர்கள் சம்பாதித்தால், சம்பாதிக்கட்டுமே. அதில் தவறு இல்லை.

‘த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்கு நான்தான் அவர் மீது அவதூறு வழக்குப் போடணும்.’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர், ‘நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செஞ்சிருக்கு, என்னிடம் விளக்கம் கேட்காமலே தன்னிச்சையாக முடிவு எடுத்திருக்கு. நான் யார்னு மக்களுக்கு தெரியும்.

பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் பெண்களைப் பத்தி அவதூறாக பேசினார். ஆனால் அவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படல. நீட் தேர்வால மாணவி அனிதா உயிரை விட்டப்ப கூட எந்த மகளிர் சங்கமும் போராடல.

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிவிக்கையை 4 மணி நேரத்துக்குள்ளே திரும்பப் பெறணும். என்கிட்ட முறையா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பணும். எல்லோரையும் உசுப்பேத்திவிட்டு எனக்கு எதிரா பேச வைக்கிறாங்க. என்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க. நான் விளக்கம் சொல்றேன். பூச்சாண்டி எல்லாம் காட்ட வேண்டாம். முறைப்படி கேட்டால் எல்லாம் முறைப்படி நடக்கும்.

லோகேஷ் கனகராஜூக்கு இந்த விவகாரம் பத்தி ஒண்ணும் தெரியாது. த்ரிஷாவைப் பத்தி நான் தப்பா எதுவும் சொல்லல.’ என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

மன்சூர் அலிகான் நீண்ட காலம் திரைத்துறையில் இருப்பவர். ஒரு க்ரூப் டான்ஸராக இருந்து வில்லனாக வளர்ச்சிக்கண்டவர். தனது பேச்சால் அதிர்வலைகளைக் கிளப்புவது இவரது வாடிக்கை. இந்த முறை பிரச்சினை வேறுவிதமாக இருப்பதால், அவருக்கு நெருக்கடி ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள்.

நட்சத்திரங்கள் பற்றி எனக்கு தெரிந்ததை கூறுவேன் என்று அவர் ஆவேசப்படுவது, எதிர்பாராத சிக்கல்களை பல நட்சத்திரங்களுக்கு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்சூர் அலிகான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா.. தென்னிந்திய நடிகர் சங்கம் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து இன்னும் எதுவும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...