சாலை விபத்துகள் தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதிக வேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வது தான் 70 சதவித சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.
கடந்த வருடம் அதாவது 2022ல் இந்தியாவில், சாலை விபத்துகளில் உயிர் இறந்தோரின் எண்ணிக்கை 168,491. இவர்களில் அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,19,904.
இந்த மரணங்களுக்கு அடுத்த நிலையில் விபத்து இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக சொல்லப்படுவது ஹெல்மெட் அணியாதது.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் வாகனம் ஓட்டும்பொது தலைக்கவசம் அணிந்துக் கொள்ளாமல் உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000. இரண்டு சக்கர வாகனங்களுக்கு ஹெல்மெட் என்று கார்களுக்கு சீட் பெல்ட். சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட மரணங்களும் அதிகம்.
செல் ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,395. இந்த எண்ணிக்கை 2022ல் உயர்ந்திருக்கிறது. 2021ல் 2982 பேர் செல்ஃபோன் பேசியதால் ஏற்பட்ட விபத்துகளால் இறந்திருக்கிறார்கள். ஆகவே வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் இயக்குவதை அறவே தவிர்ப்பது நலம்.
வாகன ஓட்டுநர்கள் தவறுகள் மட்டுமில்லாது, அரசு சார்பிலும் சில தவறுகள் இருக்கின்றன. குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளாலும் சில இறப்புகள் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் நடக்கும் விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிகிறது. 2016-ல் 64 சதவிதமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 78 சதவிதமாக அதிகரித்துள்ளது.
இந்த மொத்த ஆய்வில் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய தகவல் இருக்கிறது.
2022ல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களில், உயிர் இறந்தவர்களின் எண்ணிக்கை 4201 பேர். ஆனால் 2021ல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3314 பேர்தான். மதுவால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்திருக்கின்றன.