No menu items!

கல்யாணத்துக்கு காத்திருக்கும் கிராமத்து இளைஞர்கள் – வருத்தத்தில் பெற்றோர்

கல்யாணத்துக்கு காத்திருக்கும் கிராமத்து இளைஞர்கள் – வருத்தத்தில் பெற்றோர்

கிராமத்து இளைஞர்களை திருமணம் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, சொந்தத் தொழில் அல்லது விவசாயம் செய்யும் இளைஞர்களை திருமணம் செய்ய கிராமத்து பெண்களே சம்பதிப்பதில்லை. இதனால், 30 – 35 என திருமண வயதைக் கடந்தும் பெண் தேடிக்கொண்டு இருக்கும் கிராமத்து இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதுதான் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். உண்மை என்ன?

ஃபேஸ்புக்கில் கமல் ராஜ் என்பவர் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில் இருந்துதான் இந்த விவாதம் தொடங்கியது. அந்தப் பதிவில் கமல்ராஜ், “கவுண்டர் இன ஆண்களுக்கு இனி பெண் கிடைப்பது அரிது. கவுண்டர் இன பெண்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஐடி வேலை, 6 இலக்க சம்பளம். தோட்டம் தொறவு என 100 ஏக்கர் வைத்திருந்தாலும் அவர்களுக்கு அது பெரிது அல்ல” என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலானதைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தை லாக் செய்துவிட்டார், கமல்ராஜ்.

இதனிடையே, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளரும் யூ டியூப்பருமான ஷான் கருப்பசாமி, “உள்ளுரில் சொந்தத் தொழில் அல்லது விவசாயம் செய்யும் ஆண்களை பெண்கள் நிராகரிப்பது உண்மையில் நடக்கத்தான் செய்கிறது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

தெரிந்தோ தெரியாமலோ கொங்கு பகுதி பள்ளிக் கல்வியில் முன்னணி வகிக்கிறது. கல்லூரி வரை படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். சட்டமே இருந்தாலும் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகளுக்குத்தான் இன்னும் நில உரிமை என்பது எழுதப்படாத விதி. இல்லாவிட்டால் சொந்தத் தகப்பன், சகோதரர்கள் மீது வழக்குத் தொடர்ந்துதான் பெண்கள் சொத்து பெற வேண்டியிருக்கும். இதற்கு மனமில்லாமல் பல பெண்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுப்பது இங்கே சாதாரணம். இதனால் பெண்கள் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். ஒன்று தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ளும் அளவு படிப்பது அல்லது சொத்துள்ள அதே நேரம் படித்த வேலைக்குச் செல்லும் மாப்பிள்ளையைத் தேர்வு செய்வது.

மாப்பிள்ளைக்கு சொத்தும் இருக்கவேண்டும் படிப்பு, வேலையும் வேண்டும் என்பது கொஞ்சம் பேராசை போல் தெரிந்தாலும், படித்து பெருநகரங்களில் வேலைக்குச் செல்லும் ஆண்கள் முன்னழகை மறைக்க சால்வை போடவில்லை, பொன்னாடை போர்த்தவில்லை என்று புழுதியில் புரண்டு கொண்டிருக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். தங்கள் வாழ்க்கையை சற்றேனும் சுதந்திரமாக வாழ அவர்கள் அனுமதிப்பார்கள் என்று அப்படியானவர்களைத் தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாக உண்மையிலேயே நல்ல குணம் படைத்த, ஆனால் உள்ளூரில் தங்கிவிட்ட சுய தொழில் செய்யும் பையன்களுக்கும் பெண் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அப்படியே ஒப்புக்கொள்ளும் சில பெண்கள் கூட ஜாதகம், கட்டம், வயது, சகுனம் என்று பல பெர்முடெஷன் காம்பினேஷன்களைத் தாண்டி வந்து சேர்வதில்லை.

நான் புரிந்துகொண்ட வரை கொங்கு பகுதிப் பெண்கள் சொந்தத் தொழிலுக்காகவோ, சொத்து இல்லை என்பதற்காகவோ உள்ளூரில் வாழும் மாப்பிள்ளைகளை நிராகரிப்பதில்லை. ஆனால், அந்த ஆண்களின் சிந்தனாவாதம் ஐம்பது ஆண்டுகள் பழைய ஒரு உலகத்தை விரும்புவதாக உள்ளது. அந்த உலகத்தில் பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், அந்தப் பழைய உலகத்தில் மீண்டும் நுழைய இப்போதைய கல்வி கற்ற பெண்களுக்கு விருப்பம் இல்லை. அவ்வளவுதான். அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய சொத்தைக் கொடுத்துவிட்டால் சொத்து விஷயத்தில் வேண்டுமானால் இறங்கி வருவார்கள். ஆனால் படிப்பு, வேலை மற்றும் சிந்தனைவாதம் சார்ந்து ஆண்கள்தான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

ஆனால், “கவுண்டர் சமூகத்தில் மட்டுமல்ல எல்லா சமூகத்திலும் உள்ள பிரச்சினை இது. 450 வீடுகள் கொண்ட எங்கள் கிராமத்தில் 35 வயதாகியும் பெண் கிடைக்காமல் தேடிக்கொண்டிருக்கும் ஆண்கள் 45 பேருக்கு மேல் இருக்கிறார்கள். எங்கள் கிராமத்து பெண்கள் இந்த ஊரில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் நகரத்திற்கு நகரும் கனவுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் நகரத்தில் இருக்கும் பெண்கள் கிராமத்துக்கு வருவார்களா? எனவே, உள்ளுரில் சொந்தத் தொழில் அல்லது விவசாயம் செய்யும் ஆண்களுக்கு பெண் தேடுவது பெரும்பாடாக இருக்கிறது” என்கிறார் ஊட்டியைச் சேர்ந்த கோகுல்.

திருநெல்வேலி மாவட்டம் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த குணா, “எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் இதுதான் நிலை. முன்பெல்லாம் ஏக்கர் கணக்காக நிலம், 20 – 30 மாடு, 300க்கு மேல் ஆடு இருக்கும் குடும்பங்கள் நிலக்கிழார் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் குடும்ப ஆண்களுக்கு பெண் கொடுக்க போட்டி போடுவார்கள். இப்போது நிலமை நேர்மாறாக இருக்கிறது. நிலபுலம், ஆடு, மாடு இருக்கிறது என்று சொன்னாலே பெண் வீட்டுக்காரர்கள் தயங்குகிறார்கள். காரணம், கல்யாணப் பெண் இப்படி வருபவர்களுடன் பேசவேண்டாம் என பெற்றோர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்கள். இதனால், பெரும் சொத்து இருப்பவர்களும் கல்யாண பெண் தேடவாவது ஒரு சிறு வேலைக்கு செல்லும்படி தங்கள் மகன்களை நிர்பந்திக்கும் நிலைதான் உள்ளது” என்கிறார்.

பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

ஷோபனா நாராயணன் என்பவர் எழுதியுள்ள பதிவில், “பிராமணர்கள் சமூகத்தில் கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பே உண்டான சிக்கல் இது. பெண்கள் கல்வி கற்பதும் ஐடி போன்ற அதிக சம்பளம் வாங்கும் வேலைகளுக்கு போவதும் அதிகரித்த வேளையில், நிறுவனங்களில் அக்கவுண்ட் பிரிவில் வேலை பார்த்த லோயர் மிடில்கிளாஸ் மாப்பிள்ளைகள் மற்றும் கோவிலில் புரோகிதம் புரியும் மாப்பிளைகளுக்கு மவுசு குறைய தொடங்கி பெண்களே கிடைக்காத நிலை வந்தது. பிராமண சமூகத்தில் இப்போதும் பெண் கிடைக்காத மணமகன்கள் என ஒரு தலைமுறை உள்ளது. எல்லா வீடுகளிலும் ஒரு பையனாவது இருப்பான்.

பெண்கள் எப்போதும் சீக்கிரம் விழித்துக்கொள்பவர்கள். நன்றாக படித்து, ஐடி தொழிலுக்குள் சென்று லட்சங்களில் சம்பாரித்து பெற்றவர்களின் வாயை அடைத்தார்கள். பின்பு ஆர்தோடக்சான வீட்டிற்கு போகமாட்டேன் என ஆரம்பித்தார்கள். நானும் எனது திருமணத்திற்கு போட்ட ஒரே கன்டிசன் இது.

பிறகு மெல்ல ஆன்சைட் டூட்டி, வெளிநாடு பயணம் என துவங்கினார்கள்.

பின்னர் காதல் திருமணம் என்று வந்தார்கள். முதலில் திகைத்த பெற்றோர்கள், இருவரது வருமானத்தை கணக்கிட்டு இந்த காலத்தில் இதுல்லாம் பெருசா என ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்ல எல்லா பிராமண குடும்பங்களிலும் காதல் திருமணங்கள் நிலைபெற்று விட்டது. இன்று யாரும் லவ் மேரேஜா என்று கேட்பதில்லை.

இன்று காதல் திருமணம், கலப்பு சாதி திருமணங்கள் இல்லாத பிராமண வீடுகளே இல்லை. எங்கள் குடும்பத்தில் பிராமணரல்லாதோர், மலையாளி, ஜெயின், கிருத்துவர், இசுலாமியர் என அனைத்து தரப்பும் உண்டு. இது ஒரு முன் நகர்வு. காலத்திற்கு அவசியமான ஒன்று” என்கிறார்.

தேஜாஸ் சுப்பு என்பவரும் இதனையே தெரிவிக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சுய சாதியிலேயே பெண் எடுப்பேன் என்று வீராப்பாக இருந்தால் காலம் முழுவதும் முதிர் கண்ணன்களாகவே தான் இருக்க வேண்டும். வெஸ்டர்ன் கல்ச்சர் ஒன்றும் மோசமில்லை. பெண்களைக் கேவலப்படுத்தும் இந்தியக் கலாச்சாரத்தையும் அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் இந்தியப் பண்பாட்டையும் விட தனக்கான வாழ்வை, தன் விருப்பமான தேர்வுடன் இனிமையாக வாழும் மேற்கத்திய கலாச்சாரம் உயர்ந்தது தான். பெண்கள் துப்பட்டா போடுவதால் மட்டும் இவர்கள் ஆடை தாண்டி உற்று நோக்காமல் இருக்கப் போகிறார்களா என்ன?

நீங்க ஏண்டா அங்க பார்க்கறீங்க? கண்ணைப் பார்த்துப் பேசுங்கடா நொண்ணைகளா என்று இப்போதைய பெண்கள் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.

எத்தனை தலைமுறைப் பழக்கவழக்கமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மெல்ல மெல்ல மாற்றம் காணும். இதுதான் இயற்கையின் நியதி. பெண் கிடைக்கவில்லை என்று புலம்பாமல் ஒழுங்காகப் படித்து, சம்பாதித்து, சமுதாயத்துக்கும் கொஞ்சம் நல்லது பண்ணினால் ஆகும். அப்புறம் அந்த சாதிப் பெருமையை யாராக இருந்தாலும் தூக்கி வீசுங்கள்” என்கிறார் தேஜாஸ் சுப்பு.

“உண்மைதான், எல்லாத் தரப்பிலும் சூழலுக்கேற்றவாறு பெண்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு அடுத்தகட்டத்துக்கு வேகமாக நகர்ந்துவிட்டார்கள். ஆண்களிடம் அந்தத் தெளிவும் வேகமும் இல்லை. சும்மா புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார், கவிஞரும் நடிகருமான கவிதா பாரதி.

கிராமத்து ஆண்களும் மாற வேண்டிய காலம் வந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...