எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், நடிகர், இயற்கை விவசாயி, அரசு அலுவலர் என்று பன்முகம் கொண்டவர் பவா. செல்லத்துரை. புதிய பிரபலங்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக கதை சொல்லியாக மிகப்பெரிய அளவில் வாசகர்களையும் கதை கேட்பவர்களையும் தன் வசப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம் அந்த கதைகள் மட்டுமல்ல; பவா. செல்லதுரையின் கம்பீரமான, அதே நேரத்தில் சினேகமான குரலும்தான்.
நாடுகளைக் கடந்து, தமிழர்கள் மத்தியில் கதை சொல்லியாக வலம் வரும் பவா. செல்லதுரை, இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள்… அதேநேரம், பவா பிக்பாஸில் கலந்துகொண்டது சரியா என்று சர்ச்சைகட்டி மோதிக்கொண்டிருக்கிறது அவரது நண்பர்கள் சூழ்ந்த நவீன இலக்கிய வட்டாரம்.
சரி, இது தொடர்பாக இலக்கியவாதிகளும் பவா செல்லத்துரையின் நண்பர்களும் அப்படி என்னதான் சொல்கிறார்கள்?
கவிஞர் போகன் சங்கர் இது தொடர்பாக முகநூலில் எழுதியிருக்கும் பதிவில், “நித்தியானந்தா பிரச்சினை எழும்போது எனக்கு அவர் மீது அவரது பாலியல் உறவுகளுக்காகக் கோபம் ஏற்படவில்லை. அவர் ஒரு சாமியார் என்பதற்காகவும் ஏற்படவில்லை. அதெல்லாம் தனி மனித விவகாரங்கள். ஆனால், அதற்கு முன்பு அவர் பிரம்மச்சரியத்தின் மகிமை பற்றி தடித்தடியாக புத்தகம் எழுதி இருக்கிறார். அதற்காக கோபம் ஏற்பட்டது.
அதே போல்தான் இலக்கியவாதிகள் வணிக சினிமாவுக்கு வசனம் எழுதவும் பாடல் எழுதவும் போவதிலோ, இப்போது பிக்பாசுக்கு போவதிலோ எனக்கு பிரச்சினையில்லை. ஆனால், இங்கெல்லாம் போவதற்கு முன்பு ஏன் ஐயா தீவிர இலக்கியம், அதன் புனிதம் என்றெல்லாம் பேசி நிறைய நாற்காலிகளை உடைத்தீர்கள்?
1980,90களில் வணிக சினிமா, வணிக இலக்கியம், வணிக எழுத்தாளர்கள் மேல் எல்லாம் கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தீவிர இலக்கியவாதிகள் அதனுடன் தொடர்பு வைத்துக்கொள்வது அருவெறுப்பாகக் கருதப்பட்டது. சுந்தர ராமசாமி, க.நா. சுப்பிரமணியன், பிரமிள், வெங்கட சாமிநாதன் போன்ற எழுத்தாளர்கள் இந்தப் போக்கின் முன் தளபதிகள். இன்று பிரபலமாக இருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களே. இதில் பவா செல்லத்துரையும் ஒருவர்.
அன்று மிகப்பெரிய நட்சத்திர எழுத்தாளரான பாலகுமாரன் மீது பவா. செல்லத்துரை வைத்த கடும் விமர்சனங்கள் இன்னமும் அவர் ப்ளாக்கில் இருக்கிறது. அப்படியெல்லாம் பேசியவர், அந்த வணிக எழுத்தாளர்கள் கூட செய்யாத சமரசங்களை, குட்டிக் கரணங்களை செய்யும்போது ஒவ்வாமை வருகிறது. அவ்வளவுதான்” என்கிறார்.
சரி, அப்படியானால் இலக்கியவாதிகள் சினிமாவுக்கோ டிவிக்கோ போகக்கூடாதா? சம்பாதிக்கக் கூடாதா?
“போகலாம். ஆனால், பாலகுமாரனை போல் முன்னால் போனவர்களை எல்லாம் ‘மாட்டுக்குச் சொறிந்து கொடு. மனுஷனுக்குச் சொறிந்து கொடுக்காதே’ என்றெல்லாம் பஞ்சு டயலாக் போட்டுத் திட்டியிருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்கிறார் போகன் சங்கர்.
ஆனால், கவிஞரும் நடிகருமான கவிதா பாரதி இதனை மறுக்கிறார். “பிக்-பாஸ் என்பது ஒரு பெருவணிக விளையாட்டு. அதற்கான வாய்ப்பை பவா செல்லத்துரை நிராகரித்திருக்க வேண்டுமென்ற பல பதிவுகளைக் காணுற நேர்ந்தது. இந்த விளையாட்டில் இறங்குவதன் சாதக பாதகங்களை அறியாதவரல்லர் பவா. கமல் என்னும் நன்மதிப்புக்கொண்ட நடிகர் தன் பிரபலத்தின் காரணமாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைப் பெறுகிறார். அதனால் பொருளீட்டுகிறார், பாராட்டுப் பெறுகிறார். எனில் ஒரு எழுத்தாளர் தன் பிரபலத்தின் மூலமாகக் கிடைக்கும் வாய்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும்?
புத்தகம் விற்று வாழ்க்கையை நடத்துவதற்கான சூழல் தமிழ் எழுத்தாளர்களுக்கு அரிது. எனவே, எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தின் மூலம் கிடைக்கும் அறத்துக்கு புறம்பற்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை. பவாவின் தேர்வை நான் ஆதரிக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்” என்கிறார் கவிதா பாரதி.
பவா செல்லத்துரையின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான சசி எம்.குமார், “பவா, பிக்பாஸ் செல்வது ஒரு வாரத்துக்கு முன்பே தெரியும். அப்போதே வாழ்த்துக்கள் சொன்னோம். ஒரு படைப்பாளி எல்லா உலகத்தையும் தரிசிக்க வேண்டும் என்பதே அவரின் ஆவா. அவர் அந்த உலகத்தையும் பார்த்து வரட்டும்” என்கிறார்.
பிக்பாஸில் பவா கலந்துகொள்வது சரியா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் முதல்நாள் பவாவின் செயல்பாடுகள் குறித்தும் இலக்கியவாதிகள் பலர் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். அதில் என்ன சொல்கிறார்கள்?
“இலக்கியத்துக்கு சம்மந்தம் இல்லாத கூட்டம், வாசிப்பே இல்லாத கூட்டத்திடம் இவ்வளவு நீண்ட நேரம் பேசுவது மிகவும் சிரமமான விஷயம். இதைச் சாதித்ததே பவாவின் முதல் வெற்றிதான். பிக்பாஸ் வீட்டில் முதல்பவா செல்லத்துரை கதை சொன்னதற்குப் பிறகான சம்பாஷனைகள்தான் எனக்கு சுவாரசியமாக இருந்தன.
என்னதான் பவா முற்போக்காக பேசினாலும், கூல் சுரேஷ் அதை ‘எம்பொண்டாட்டி’ என மடை மாற்றி அழ முயற்சித்ததைக் கண்டு சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. பவா திறமையாக அதை தடுத்தார்” என்கிறார் எழுத்தாளர் அராத்து.
ஆனால், பவா செல்லத்துரை பிக்பாஸி கலந்துகொள்வதை ஆதரித்தவரும் இதற்காக பவாவுக்கு நேரில் வாழ்த்து சொன்னவருமான அவரது நண்பரும் எழுத்தாளருமான சசி எம்.குமாரோ, “குயில புடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லுகிற உலகம் என்கிற கதையாக உள்ளது பவாவை பிக்பாஸ் வீட்டில் பார்ப்பது. முடியவில்லை. என் கணக்கு தப்பாகிவிட்டது! அது கோமாளிகளின் கூட்டம். அங்கு சிங்கத்துக்கு வேலையில்லை. வெளியே வந்துவிடுங்கள் பவா” என்கிறார்.
பவா பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்து பிக்பாஸ் பட்டத்தை வெல்வாரா? அவரது இலக்கிய நண்பர்கள் மனம் அறிந்து வெளியே வருவாரா?