No menu items!

அதிமுகவை உடைக்கிறதா பாஜக? – மிஸ் ரகசியா

அதிமுகவை உடைக்கிறதா பாஜக? – மிஸ் ரகசியா

“சர்வே நடத்தி இருக்காராம் எடப்பாடி” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்ன சர்வே?… எதுக்கு சர்வே?… கொஞ்சம் விளக்கமா சொல்லு” என்றோம்.

“பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகின பிறகு அதிமுகவோட செல்வாக்கு எப்படி இருக்க்குன்னுதான் சர்வே நடத்தி இருக்கார் எடப்பாடி. அந்த சர்வேல அதிமுகவோட முடிவை பலரும், குறிப்பா சிறுபான்மையினர் வரவேற்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. இதனால நாடாளுமன்றத் தேர்தல்ல சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு வரும்னு நம்பிக்கையா இருக்கார்.”

“அந்த நம்பிக்கைலதான் கூட்டணி முறிவு பத்தி அவர் கடைசியா வாய் திறந்திருக்காரா? சரி, அதிமுக உடையுதுனு ஒரு நியூஸ் வருதே அப்படியா?”

”ஆமாம். அப்படியொரு செய்தி பரபரப்பா வந்திருக்கு. கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் சந்திச்சிருக்காங்க. கூட்டணி இல்லைனு எடப்பாடி சொன்ன பிறகும் இவங்க ஏன் சந்திச்சாங்கன்றதுதான் இப்ப கேள்வி. அதிமுக எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்கப் பார்க்கிறதுனு செய்தி வருது. இதுக்கு கோவை மண்டலத்தை சேர்ந்த ஒரு முக்கிய தலைவரே உதவுகிறாராம்”

”எஸ்.பி.வேலுமணியை சொல்றியா? அவரே அந்த செய்தியை மறுத்திருக்கிறாரே? என்றென்றும் அதிமுககாரன்னு ட்விட்டர் ஹேஷ்டாக்ல சொல்லியிருக்கிறாரே?”

”அதையெல்லாம் மேலிடத் தலைவர்கள் நம்பலனு சொல்றாங்க. அவர் மேல இன்னும் டவுட் இருக்கு. நிர்மலா சீதாராமனை சந்திச்ச மூணு எம்.எல்.ஏ.க்களை என்ன செய்யப் போறாங்கன்றதை வச்சுதான் அரசியல் எப்படி நகர்கிறதுனு பார்க்கணும்”

”அப்போ பாஜக – அதிமுக கூட்டணி அவ்வளவுதானா? இனிம கிடையாதா?”

“அப்படி முழுசா சொல்ல முடியாது. பாரதிய ஜனதா இன்னும் அதிமுகவை விடறதா இல்லை. நாடாளுமன்ற தேர்தல்ல வட இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்கு 200 சீட்டுக்கு மேல கிடைக்காதுன்னு மத்திய உளவுத் துறை கணிச்சு சொல்லி இருக்கு. அதனால மாநில கட்சிகளோட தயவு அவங்களுக்கு தேவைப்படுது. அதனால தேவைப்பட்டா நிர்மலா சீதாராமனை அதிமுக கிட்ட பேசவைக்க திட்டம் போட்டிருக்காங்க.”

“இந்த வாரம் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை சந்திச்சாரே… அந்த சந்திப்பு பத்தி ஏதாவது தெரியுமா?”

“அதுக்கு முன்ன நிர்மலா சீதாராமன் ஒரு நாள் சென்னைக்கு வந்திருக்கார். இங்க இருக்கற சில பாஜக தலைவர்களை சந்திச்சிருக்கார். அதுல அண்ணாமலையோட சில ஆதரவாளர்களே முதல்வர் சொன்ன மாதிரி அதிமுக நமக்கு அடிமைக் கட்சியாத்தான் இருந்துச்சு. ஆனா அண்ணாமலை உசுப்பேத்தினதால அவங்க நம்மளை விட்டு போய்ட்டாங்கன்னு குற்றம் சொல்லி இருக்காங்க. இதைத் தொடர்ந்து டெல்லி தலைவர்களைச் சந்திச்சு நிர்மலா சீதாராமன் தமிழக நிலவரம் பத்தி பேசி இருக்கார். அதிமுக இல்லாத கூட்டணியை அமைக்க அண்ணாமலை திட்டமிட்டு வர்றார். ஆனா அது சரிப்பட்டு வராதுன்னு அந்த சந்திப்புல அவர் தெளிவாச் சொல்லி இருக்கார். கட்சியோட மேலிடத் தலைவர்களும் இதை உன்னிப்பா கேட்டிருக்காங்க. பாரதிய ஜனதாவின் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளரா கிஷன் ரெட்டி இருந்தார். இப்ப அந்தப் பதவி காலியா இருக்கு. அந்த பதவியில நிர்மலா சீதாராமனை உட்காரவச்சா என்னன்னு டெல்லி தலைவர்கள் நினைக்கறாங்களாம். இந்த சூழல்லதான் அண்ணாமலை அவரைச் சந்திச்சிருக்கார்.”

“சந்திப்புல என்ன நடந்துச்சுன்னுன்னும் தெரிஞ்சு வச்சிருப்பியே?”

“இந்த சந்திப்புல அண்ணாமலை சொன்ன எதையும் நிர்மலா சீதாராமன் காதுல வாங்கிக்கலையாம். அவர் பேசி முடிச்சதும், ‘கட்சியை வளர்க்கப் போய் நீங்க உங்களை வளர்த்துக்கிட்டீங்கன்னு பலரும் உங்களைப் பத்தி குறை சொல்றாங்க. நாடாளுமன்றத் தேர்தலில் என்னை தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த முதலில் பாரதிய ஜனதா திட்டமிட்டிருந்தது. ஆனா இப்ப நீங்க அடிச்ச கூத்தால அதிமுக கூட்டணியை விட்டு வெளிய போயிடுச்சு. வெற்றி வாய்ப்பும் குறைஞ்சுடுச்சு. அதனால என்னை கேரளாவில் சசிதருரை எதிர்த்து நிற்கச் சொல்லி இருக்காங்க’ன்னு நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கார். அவர் டோஸ் விட்டதுல கடுப்பாகித்தான் மாவட்ட தலைவர்கள் கூட்ட்த்தையும், நடைப்பயணத்தையும் அண்ணாமலை தள்ளி வச்சிருக்கார்னு சொல்றாங்க.”

“அதிமுகவை பணியவைக்க ஒருவேளை அமலாக்கத்துறையை ஏவுவாங்களோ?”

“அது நடக்காதுன்னுதான் தோணுது. அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துரை சோதனைகள் பூமராங் மாதிரி தங்களை திருப்பி தாக்கறதா பாஜக நினைக்குது. இந்த சோதனைகளால எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நமது கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். நீதிமன்றமும் நமக்கு அவ்வளவாக சாதகமாக இல்லை. அதனால இப்போதைக்கு அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்றவற்றை எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்த வேண்டாம்ன்னு என்று பாரதிய ஜனதா முடிவு செய்திருக்காம்.”

“திமுக கூட்டணி நிலவரம் எப்படி இருக்கு?”

“திமுக கூட்டணியில் மதிமுகவும் விசிகவும் 4 சீட் கேட்குது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா மூன்று இடத்தில் போட்டியிட விரும்புறதா முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. காங்கிரஸ் 15 இடங்கள் கேட்குது. . ஆனால் திமுக இது பற்றி எந்த கருத்தும் சொல்லாமல். ‘உங்கள் கட்சி எத்தனை இடங்களில் பூத் கமிட்டி அமைத்து இருக்கிறது என்ற விவரங்களை தாருங்கள். அதன் பிறகு நாம் முடிவு செய்வோம்’ன்னு சொல்லி இருக்கு. அதனால கூட்டணி கட்சிகள் இப்ப பூத் கமிட்டி அமைக்கறதுல பிஸியா இருக்காங்க.”

“முடிவா திமுக எவ்வளவு சீட்தான் கொடுக்குமாம்?”

“திமுகவை பொறுத்தவரை மதிமுக, விசிக கட்சிகளுக்கு ஒரு தொகுதின்னு ஆரம்பிச்சு கடைசில 2 தொகுதி கொடுக்க திட்டமிட்டு இருக்காங்க. ஆனா அவங்க திமுக சின்னத்துலதான் போட்டியிடணும்னு கட்டாயப்படுத்துவாங்களாம். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இரண்டு இடங்களையும், காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஏற்கனவே ஜெயிச்ச 9 இடங்கள் மற்றும் கூடுதலா ஒரு தொகுதி கொடுக்க திட்டமிட்டு இருக்காங்களாம்.”

“பாமகவும் வரும்னு சொல்றாங்களே?”

“அதுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தடையா இருக்கார். சமீபத்தில் முதல்வரை சந்திச்ச அவர், ‘நெய்வேலி நிலம் கையகப்படுத்தபட்டபோது அன்புமணி தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோட திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கட்சி தொண்டர்கள் அவர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். அதனால கூட்டணி வேண்டாம்’னு சொல்லி இருக்கார். ஆனா அதுக்கு நேர்மாறா துரைமுருகன் இருக்கார். ‘இந்த தேர்தலில் நமக்கு வன்னியர்களின் வாக்குகள் முக்கியம். அதுக்கு பாட்டாளி மக்கள் கட்சியோட வாக்கு வங்கியை நாம பயன்படுத்திக்கணும்’னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்கார். இப்படி 2 மூத்த அமைச்சர்கள் இரண்டு வித கருத்தைச் சொல்றதால முடிவு எடுக்க முடியாம முதல்வர் தடுமாற்றத்துல இருக்காராம்.”

”அவருக்குதான் ஆலோசனை சொல்ல உதயநிதி இருக்கிறாரே…அப்புறம் ஏன் தடுமாற்றம்?”

“அவர் மட்டுமா..இன்னும் நிறைய பேர் இருக்காங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...