முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் பூஜ்யம் பிரசண்டைல் எடுத்தவர்களும் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக, திமுக மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் மருத்துவர் யாழினி ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு பேசினார்.
முதலில், பிரசண்டேஜ் – பிரசைண்டல் இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா?
பெர்சண்டேஜ் என்பது சதவீதம். நூறில் எத்தனை பங்கு எனக் கணக்கிடுவது. உதாரணமாக 100 மார்க் தேர்வில் 50 பெர்சண்டேஜ் என்பது 50 மார்க். இந்த பெர்சண்டேஜ் எத்தனை பேர் தேர்வு எழுதினாலும் மாறாது. யார் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மாறாது. ஜீரோ பெர்சண்டேஜ் என்பது ஜீரோ மார்க்.
பெர்சண்டைல் என்பது அனைத்து மாணவர்களும் எடுத்த மதிப்பெண்களை வரிசைப்படுத்தி அதில் ஒரு மாணவரின் இடத்தை குறிப்பது. எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களின் மதிப்பெண்ணைப் பொறுத்தும் இது மாறும். 50 பெர்சண்டைல் என்பது 50ஆவது இடத்தை பெற்ற மார்க். ஜீரோ பெர்சண்டைல் என்பது கடைசியாக உள்ள மாணவன் பெற்ற மார்க். நீட் தேர்வில் நெகடிவ் மார்க்கும் உண்டு என்பதால், ஜீரோவுக்கும் கீழே மைனஸ் மார்க்கும் பல மாணவர்கள் எடுத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கடைசி மார்க், மைனஸ் 40. இந்த மைனஸ் 40 மார்க் தான் இந்த ஆண்டு ஜீரோ பெர்சண்டைல்.
ஆக மைனஸ் 40 மார்க் எடுத்த மாணவர்களும் மருத்துவ உயர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
மிக மிக ஆச்சிரியம். எல்லா வருடங்களும் கொஞ்சம் இடங்கள் காலியாக இருக்கும். ஆனால், இந்த வருடம்தான் காலியாக இருக்கும் இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று இப்படி திடீரென அறிவித்திருக்கிறார்கள். மெரிட் என்று சொல்லித்தான் நீட்டை கொண்டு வந்தார்கள். ஆனால், இப்போது என்ன நடக்கிறது? மைனஸ் 40 மார்க் வாங்கியுள்ளவர்களையும், அவர்களால் கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியும் என்கிற ஒரே காரணத்துக்காக, அவர்களை தகுதியான மாணவனாக ஆக்குகிறார்கள். அதேநேரம், இவர்கள் சொல்லும் மெரிட் மார்க் வாங்கிய பல மாணவர்கள், செலவு செய்ய முடியாத ஒரே காரணத்தால், சீட் கிடைக்காமல் வெளியே நிற்கிறார்கள். எக்ஸாம் எழுதிய எல்லாருமே பாஸ் என்றால் மெரிட் என்று சொன்னது என்ன ஆனது?
இட ஒதுக்கீட்டில் படிக்க வந்த மாணவர்களில் யாரும் இப்படி மைனஸ் 40 எடுத்து எல்லாம் வரவில்லை. 200க்கு 199ஆவதுதான் கட் ஆஃப் இருக்கும். குறைந்தபட்சம் 190ஆவது எடுத்த மாணவர்கள் தான் உள்ளே போக முடியும். அப்படி வந்தவர்களை ‘கோட்டோவில் வந்தவர்கள்’ என்று அவமானப்படுத்தி ஒரு மாணவியை தற்கொலையே செய்து வைத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்.
மெரிட் என்று சொல்லித்தான் நீட்டை கொண்டு வந்தீர்கள். இப்போது அது மெரிட் இல்லை என்று உறுதியாகிவிட்டது. இனிமேலும் நீட் எதற்கு என்பதுதான் என் கேள்வி.
நீட் நுழைவுத் தேர்வு மெரிட் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய நடத்தப்படுகிறது என்ற வாதம் பொய்யாகியிருக்கிறது. அந்த வகையில் இது திமுகவுக்கும் ஒரு வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாமா?
நிச்சயமாக. திமுக கண்ணை மூடிக்கொண்டு, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எல்லாம் நீட்டை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டிலும் முதலில் நுழைவுத் தேர்வு இருந்தது. அப்போது அனந்தகிருஷ்ணன் கமிட்டி, இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளால் பொருளாதார ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களும் கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தது. அதனடிப்படையில்தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இப்போது ஏ.கே. ராஜன் குழுவும் அதைத்தான் சொல்கிறது. இதையே, நீதிபதி சந்திரசூட் இன்னும் மிக அழகாக சொல்லியிருப்பார்: ‘மெரிட் என்பது ஒருவர் வாங்கும் மார்க் கிடையாது. ஒருவரின் முன்னேற்றம் மட்டும் மெரிட் கிடையாது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம்தான் மெரிட்.’ இதற்கு உதாரணத்தை தமிழ்நாட்டிலேயே பார்க்கலாம். அருந்ததியர் சமூகத்தில் இருந்து தொடக்கத்தில் மிகக் குறைவாகத்தான் இன்ஜினியர்கள் வந்தார்கள். அந்த சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பின்னர் அது அதிகரித்தது. ஆனால், நீட்டில் என்ன நடக்கிறது? யாரிடம் காசு இருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் முன்னேறுகிறார்கள்.
‘நீட் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கப்படும். அதற்கான இடங்கள் நிரம்பிய பின்னர், காலியாக உள்ள இடங்களை நிரப்ப, கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்த முறை உதவும். இதை புரிந்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜக தலைவர் அண்ணாமலையும், இப்படி நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணைக் குறைக்காவிட்டால் பல மருத்துவ இடங்கள் காலியாக இருந்து வீணாக போகின்றன என்று சொல்லியிருக்கிறார். வீணாக போகும் இடங்களை நிரப்ப இது ஒரு முயற்சியாக பார்க்கலாமா? நீட் கட் ஆஃப் சதவீதத்தை குறைத்ததால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
அண்ணாமலை நிறைய பொய் சொல்கிறார். பிஜியில் 1 லட்சத்து 80 ஆயிரம் சீட் இருக்கிறது என்றார். இது ஒரு பொய். உண்மையில் பிஜிக்கு 64 ஆயிரத்து 59 சீட் மட்டும்தான் இருக்கு. அடுத்ததா சென்ற வருடம் நிறைய இடங்கள் காலியாக இருந்தது என்றார். இது இரண்டாவது பொய். உண்மையில் 2022-23 கல்வியாண்டில் 4400 இடங்கள்தான் காலியாக இருந்தது. இவ்வளவு இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளதுக்கு காரணம் தகுதியான மாணவர்கள் இல்லை என்பதல்ல; தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒவ்வொரு இடமும் பல கோடிகள் விலையில் இருக்கும். தகுதியானவர்களில் அவ்வளவு பணம் கட்டி படிக்கும் வசதியானவர்கள் இல்லை என்பதுதான் அர்த்தம். பாஜக ஆளும் கடந்த ஒன்பது ஆண்டுகளில், தனியார் கல்லூரிகளில் 42 சதவிகிதம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த 42 சதவிகித இடங்கள் நிரம்ப வேண்டும்; அதன்மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு பணம் போக வேண்டும்; கோச்சிங் சென்டர்களுக்கு பணம் போகவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான் இப்போது, உயர் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி ஜீரோ பிரசண்டைல் ஆக்கப்பட்டுள்ளது.