கமல் ஹாஸன் மகள் என்ற மாபெரும் அடையாளத்துடன் சினிமாவில் இறங்கினார் ஷ்ருதி ஹாஸன். ஆனால் கமல் ஹாஸன் என்னும் மாபெரும் கலைஞனின் மகள் என்று சினிமாவில் அவரால் நிரூபிக்க முடியாமல் போனது.
வழக்கமான கமர்ஷியல் சினிமா, கவர்ச்சியான உடைகளில் டூயட் என்று மற்ற நடிகைகளுடன் ஒருவராகிப் போனார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போக, தனது தந்தையின் வயதுடைய சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் கமல் தன் மகளுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று நினைத்தவர், ஷ்ருதிக்கு இருக்கும் இசை புலமையை வைத்து அவருக்கென்று ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறாராம்.
அதனால் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ஷ்ருதியை வைத்து ஒரு மியூசிக் ப்ராஜெக்ட்டை தயாரிக்க இருக்கிறாராம். இதில் ஷ்ருதியுடன் கமலும் திரையில் தோன்றும்படியாக காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
கமலும், ஷ்ருதியும் இணைந்து நடிக்க ஆசைப்பட்டது நடக்காத சூழ்நிலையில், தன் மகளுக்காக மியூசிக் ஆல்பத்தில் கமல் தோன்ற இருப்பது, தந்தை மகளுக்காற்றும் உதவியாக இருக்கும்.
பார்வதி அவதாரமெடுக்கும் நயன்தாரா!
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான மோகன்பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. இவர் ;கண்ணப்பா’ என்றப் பெயரில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் – இந்திய படமொன்றை தயாரிக்க இருக்கிறார்.
இது புராணக்காலத்து பக்த கண்ணப்பா என்று சிவப்பக்தரைப் பற்றிய கதை. இதனால் சிவப்பெருமான், பார்வதி கதாபாத்திரங்களுக்கு பான் – இந்திய இமேஜ் உள்ள நட்சத்திரங்களை வளைத்துப் போடுவதில் விஷ்ணு மஞ்சு மும்முரமாக இருக்கிறார்.
பெரும் பட்ஜெட் என்பதால், வியாபாரத்திற்கு வசதியான நட்சத்திரங்களாகப் பார்த்து பார்த்து கமிட் பண்ணும் முயற்சிக்கு முதலில் ஓகே சொன்னவர் பிரபாஸ். சிவப்பெருமான பிரபாஸ் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
அடுத்து பார்வதி கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை அணுகி இருக்கிறார்கள். ‘ஜவான்’ என்ற பெரும் கமர்ஷியல் ஹிட் படத்தில் நடித்த நயன்தாரா அடுத்து புராணக்கதையில் நடிப்பதா என்று தயக்கம் காட்டினாராம்.
நயன்தாரா இதற்கு முன்பு ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் மூக்குத்தி அம்மனாகவும், தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதாவாகவும் நடித்திருக்கிறார். இதனால் நீங்கள்தான் நடிக்கவேண்டுமென தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.