இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, துக்க வீட்டில் தொலைக்காட்சி நிறுவனங்களும் யூடியூப் சேனல்களும் நடந்துகொண்ட விதம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, துக்க வீடுகளில் ஊடகக்காரர்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சினிமாக்காரர்கள் வைத்துள்ளார்கள்.
என்ன நடந்தது? திரைத்துறையினரும் ஊடகர்களும் என்ன சொல்கிறார்கள்?
திரைத்துறையினரோ அரசியல் பிரபலங்களோ மரணமடையும்போது அந்த துக்க நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்வதும் மரணமடைந்தவர்கள் குறித்த மற்றவர்கள் இரங்கலை பெற்று வெளியிடுவதும் ஊடகங்களின் வழக்கம். இதனடிப்படையில், விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி கடந்த 19-09-23 அன்று தற்கொலை செய்துகொண்ட போதும், வழக்கம்போல் அவரது வீட்டில் பெரும்பாலான ஊடகங்களின் கேமிராக்கள் குவிந்தன. பிரபலங்கள் மீரா குறித்து பகிர்ந்துகொண்டதை மட்டுமல்லாமல், விஜய் ஆண்டனி குடும்பத்திற்கும் தங்களது ஆறுதலை பகிர்ந்துகொண்டனர்.
இதுவரைக்கும் பிரச்சினையில்லை. அதன் பிறகே விஷயம் கைமீறி, நாகரிக வரம்பை மீறியது. சில ஊடகங்கள் துக்க வீட்டிற்கு வந்த மீராவின் ஆசிரியர்கள் சிலரிடம் கட்டாயப்படுத்தி கருத்துகளைக் கேட்டனர். இது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் விதமாக அமைந்ததாக கண்டனங்கள் எழுந்தது. ஆனால், இதுபோன்ற வீடியோக்களே அதிக பார்வைகளை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தொலைக்காட்சி நிறுவனங்களும் யூ டியூப் சேனல்களும் கல்லறை வரைக்கும் அவர்களை பின்தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டனர்.
இதுதான் இப்போது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, துக்கத்தில் இருப்பவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஊடகங்கள் நடந்துகொண்டதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
முதன்முதலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, ‘மரண வீட்டில் கூட காமிரா வைத்து காசு பார்க்க ஒரு கூட்டம் வந்துவிட்டது. மீடியா என்ற பெயரில் சிலரும்… மீடியா இல்லாமல் செல்போனைத் தூக்கிக் கொண்டு படம்பிடிக்கும் பலரும் பெருகிவிட்டார்கள். நமது இழப்பு அவர்களுக்கு லைக்கும் காசும். நமது துக்கத்தை அவர்களது துக்கமாக பார்க்கத் தவறுகிறார்கள். துக்க வீட்டிலாவது இனி காமிரா அனுமதியில்லை என்ற முடிவெடுக்க வேண்டும். நம் வீட்டில் நாம் யாரை அனுமதிக்க வேண்டும். கூடாது என்ற முடிவையாவது அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும். இல்லையேல் துக்க வீட்டைக்கூட கொண்டாட்ட நிகழ்வு போல மாற்றிவிடுகிறார்கள். கொடுமையான நிகழ்வு இது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று’ எனக் கொஞ்சம் காட்டமாகவே பதிவிட்டிருந்தார்.
விஜய் ஆண்டனி மகள் மரணத்துக்கு முன்பு நடிகர் மாரிமுத்துவின் மரணத்தின் போதும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ‘வடக்கன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வேடியப்பன், ‘மாரிமுத்து இறப்பின்போதும் இதே நிலை. சில ஊடகங்கள் ஒரு படி மேலே போய், செய்தி வெளியான சிறிது நேரத்தில் மாரிமுத்து அவர்களின் ஊரில் உள்ள வீட்டுக்கு சென்று அங்குள்ள வயதானவர்களின் மனநிலைகளையும் அவர்கள் அழுவதையும் பதிவு செய்துள்ளது கொடுமையிலும் கொடுமை’ என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் கண்டனத்தை வரவேற்றுள்ள எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர், ‘சுரேஷ் காமாட்சி கருத்தை உரத்த குரலில் நான் ஆமோதிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘பிரபலங்களின் வீட்டு துக்கம் என்றால் இறுதி அஞ்சலி செலுத்தப் போகிற உறவினர்களும் நண்பர்களும் இந்த மீடியா படைக்கு நடுவில் நீந்திதான் உள்ளே செல்லும், வெளியே வரும் நிலை! யாராய் இருந்தாலும் மைக்கை நீட்டி கேள்விகளால் துளைத்தெடுப்பதெல்லாம் துக்கத்தில் இருப்பவர்களுக்குச் செய்கிற கூடுதல் கொடுமை! சாலை முழுக்க மீடியா வேன்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடியும் கூட.
இது போதாதென்று முக்கிய அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் வரும்போது சூழ்நிலை புரியாமல் அந்த நேரத்திலும் அவர்களுடன் செல்ஃபி எடுக்க பாயும் மற்றும் ஒரு அநாகரிகக் கும்பல்.
எனவே, துக்க வீட்டின் நிகழ்வுகளைப் படம் பிடிக்க மீடியாக்கள் மற்றும் கையில் போன் வைத்திருக்கும் திடீர் மீடியாக்காரர்கள் யாராய் இருந்தாலும் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரின் எழுத்துப்பூர்வமான சம்மதத்தைப் பெற வேண்டும் என்று காவல்துறை விதி கொண்டுவர வேண்டும். அல்லது நீதி மன்றமே ஒரு உத்தரவு பிறப்பிக்கலாம்’ என்ற யோசனையையும் முன்வைத்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும், ‘பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்லவை கெட்டவை எதுவாயினும் ஊடகங்களே அவற்றை முக்கியப்படுத்துகின்றன. ஆயினும் ஒருவர் வாழ்வில் துக்க விசயங்கள் நடக்கும்பொழுது, அவை எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்ற அடிப்படை அறிவும் கடமையும் ஊடகவியலாளர்களுக்கு மிகமுக்கியமான பொறுப்பாகும். சமீபத்திய இரு துயர சம்பவங்களில் சில ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் முற்றிலும் தவறான, அறமற்ற செயல். அதற்காக எனது வன்மையான கண்டனத்தையும், இவ்வாறான போக்கை இனியாவது தவிர்க்குமாறு எனது வேண்டுகோளையும் பதிவு செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மூத்த இயக்குனருமான பாரதிராஜா. அதில், ‘மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீப கால மீடியாக்களின் செயல்.
புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும், கூடாதென்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடு வதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா? நேற்றும் இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது. குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரிகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால், காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும்.அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரிகங்கள் தடுக்கப்படும். ஒரு மூத்த கலைஞனாகவும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில்ம் ‘இனிமேல், துக்க வீடுகளுக்கு அவர்கள் அழைப்போ அனுமதியோ இல்லாமல் நாங்கள் செல்லப்போவதில்லை’ என்று Behinwoods நிறுவனம் அறிவித்திருக்கிறது.
Behinwoods முடிவை வரவேற்றுள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘ஒரு பொறுப்புள்ள ஊடகத்தின் மாண்பை நிலை நாட்ட முன்வந்திருக்கிற Behindwoods நிறுவனம் பாராட்டுக்குரியது. இதை மற்றவரும் இனிமேல் பின்பற்றியே ஆகவேண்டும். பெரிய நிறுவனங்கள் செய்துவிடுவார்கள்; வேறு வழியில்லை. ஆனால் இந்த குட்டி YouTubers ஒத்துழைக்க வேண்டும். பிறரின் துக்கத்தையும் கையறு நிலையையும் காட்சிப்பொருளாக்கி, காசக்க முயலாதீர்கள். ஒரு நல்ல தொடக்கம் வந்துவிட்டது. இணைந்து மாண்பைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறியுள்ளார்.
நல்ல தொடக்கம்தான்.