No menu items!

பாஜக கூட்டணியில் சசிகலா, தினகரன் – மிஸ் ரகசியா

பாஜக கூட்டணியில் சசிகலா, தினகரன் – மிஸ் ரகசியா

”எல்லாமே நாடகமா மாறிப்போச்சு” என்று அலுத்துக் கொண்டே வந்தாள் ரகசியா.

“என்ன பாய் ஃப்ரெண்டோட சண்டையா?”

“பாய் ஃப்ரெண்டா? எங்க அதுகெல்லாம் டைம் கொடுக்கிறீங்க. நான் சொல்ல வந்தது அதிமுக-பாஜகவைப் பத்தி..”

“என்னாச்சு? ரெண்டு பேரும் சமரசம் ஆகிட்டாங்களா?”

“வேற வழி. டெல்லில இருந்து ரெண்டு தலைவர்களுக்குமே உத்தரவு வந்திருக்கு”

“ரெண்டு தலைவர்களா? தமிழ்நாட்டு பாஜகவுக்கு ஒரு தலைவர்தானே..?”

“ஜோக்கடிக்காதிங்க. நான் எடப்பாடியையும் அண்ணாமலையும் சொல்றேன்”

”ஓ அதிமுக தலைமைக்கும் டெல்லிலருந்து உத்தரவா?”

“ஆமாம். அப்படிதானே கொஞ்சம் காலமா நடக்குது. விஷயத்தை கேளுங்க. ரெண்டு கட்சிக்காரங்களும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக்கக் கூடாது. இறந்த தலைவர்களைப் பத்தி பேசக் கூடாது. அவங்க வழியைப் பாத்து போய்கிட்டே இருக்கணும்னு டெல்லி சக்தி சொல்லியிருக்கு”

“அப்ப கூட்டணி தொடருதா?”

”தொகுதி பங்கீடே முடிஞ்சிருச்சு”

“முடிஞ்சிருச்சா?”

“ஆமாம். 15 தொகுதிகளுக்கான பட்டியலை எடப்பாடி பழனிசாமிகிட்ட அமித்ஷா கொடுத்திருக்கிறார். இந்த 15 தொகுதில மூணு தொகுதிதான் ட்விஸ்ட்.”

“என்ன தொகுதி?”

“ஓபிஎஸ் மகனுக்கு ஒரு தொகுதி. டிடிவி தினகரனுக்கு ஒரு தொகுதி…அப்புறம் ரொம்ப முக்கியமா சசிகலாவுக்கு ஒரு தொகுதினு கேட்டிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி ஷாக்காயிருக்கிறார்.”

“அப்புறம்”

“அமித்ஷாகிட்ட என்ன பேச முடியும்…ஓபிஎஸ், தினகரன் ஓகே..ஆனா சசிகலா வேணாமேனு சொன்னாராம். அதுக்கு அமித்ஷா, முக்குலத்தோர் வாக்கு மொத்தமா வேணும்னா இவங்க மூணு பேரும் வேணும்னு சொல்லியிருக்கிறார். இதெல்லாம் பாஜகவுக்கு ஒதுக்கிற 15 தொகுதிகள்லருந்து கொடுத்துக்கறோம்னும் சொல்லியிருக்கிறார். எடப்பாடியால தாங்க முடியல. மையமா தலையாட்டிட்டு சென்னைக்கு கிளம்பி வந்திருக்கார்”

“இவங்க தரப்புல கோரிக்கை எதுவும் வைக்கலையா?”

“ஒரே ஒரு கோரிக்கைதான். அண்ணாமலையை மாத்திடுங்க. எங்களுக்கு கஷ்டமாயிருக்குனு சொல்லியிருக்காங்க. பார்க்கலாம்னு பதில் சொன்னாராம் அமித்ஷா”

”அண்ணாவைப் பத்தி அண்ணாமலை பேசுனதை பாஜக தலைமை ரசிக்கலனு ஒரு நியூஸ் வருதே?”

“ஆமாம். பிடிக்குதோ பிடிக்கலையோ அண்ணா தமிழ்நாட்டின் மிகப் பெரிய தலைவர். அவரை விமர்சிக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம அவரை அண்ணாதுரைனு சொல்லக் கூடாதுனும் உத்தரவு போட்டிருக்காங்க. அதுனாலதான் அண்ணாதுரை அண்ணாதுரைனு பேசுனா அண்ணாமலை நேத்து ப்ரஸ் மீட்ல அறிஞர் அண்ணானு திருப்பி திருப்பி சொன்னார்”

“நல்ல மாற்றம்தான்..ஆனா அண்ணா பத்தி பேசுனதுக்கு மன்னிப்பு கேட்க முடியாதுனு சொல்லியிருக்கிறாரே அண்ணாமலை?”

“முழுசா பணிஞ்சு போனா பாஜக பேரு கெட்டுரும்னு அண்ணாமலை சொல்லியிருக்கிறார். நம்ம கொஞ்சம் கெத்து காட்ட வேண்டியிருக்குனும் எடுத்து சொல்லியிருக்கிறார்”

“அண்ணாமலை சொல்றதை மேலிடம் காது கொடுத்து கேக்குதா?”

“கேக்குறாங்க. மத்த பாஜக தலைவர்களைவிட அண்ணாமலை பாஜகவை பரபரப்பா வச்சிருக்கிறார்னு ஒரு நல்ல சர்டிஃபிகேட் அவருக்கு இருக்கு. 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல அதிமுகவோட கூட்டணில நின்னாலும் ஜெயிக்கிறது கஷ்டம். ஆனா தனியா நமக்காக ஒரு கூட்டணி அமைச்சு நின்னா அதிமுகவை இந்தத் தேர்தலோடு மூட்டைக் கட்டிடலாம். அடுத்த தேர்தல்ல நாமதான் பிரதான எதிர்க் கட்சியா இருப்போம்னு யோசனை சொன்னாராம். கட்சி மேலிடம் இப்ப இந்த ரிஸ்க் வேண்டாம்னு யோசனை தள்ளி வச்சிருச்சாம்”

”இத்தனை சண்டை நடந்தப் பிறகு கூட்டணி சுமூகமா தொடர முடியுமா?”

“இதே கேள்வியைதான் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கேட்டிருக்காங்க. தேர்தல் நேரத்தில எல்லாத்தையும் வைட்டமின் ப பார்த்துக் கொள்ளும்னு எடப்பாடி சிரித்துக் கொண்டே சொன்னாராம்”

”பாஜக உதயநிதியை டாட்கெட் பண்ணுதுனு ஒரு நியூஸ் வருதே..அப்படியா?”

“ஆமாம். சமீபத்தில் டெல்லிக்கு போன ஆளுநர் ரவி, உதயநிதி ஸ்டாலின் சம்பந்தமான சில விவரங்களை மத்திய உள்துறை அமைச்சரகத்துல கொடுத்திருக்கறதா இங்க இருக்கற பாஜக தலைவர்கள் சொல்றாங்க. உள்துறை அமைச்சரகத்துல இருந்தும் ஆளுநர்கிட்ட உதயநிதியைப் பத்தின சில விஷயங்கள் ஷேர் செய்யப்பட்டிருக்கு. அதைப்பத்தியெல்லாம் தீவிரமா விசாரிக்கச் சொல்லி இருக்காங்க. அதனால உதயநிதி மேல வருமானவரித் துறை இல்லைன்னா அமலாக்கத் துறை நடவடிக்கை இருக்கும்னும், தேவைப்பட்டா இரண்டு துறைகளும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்குன்னும் பாஜக வட்டாரத்துல சொல்றாங்க.”

“இதுக்கு திமுக தரப்புல என்ன செய்யப் போறாங்க?”

“வழக்கறிஞர்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமில்லாம உதய்நிதியோ பழைய ஆவணங்கள் எல்லாத்தையும் ஒரு ஆடிட்டர் குழு சரி பார்த்துக்கிட்டு இருக்காங்க. எங்கேயாவது ஓட்டை இருக்கா, அதை அடைக்கிறது எப்படினு. அப்புறம், உதயநிதி மேல நடவடிக்கை இருந்தா அது அரசியல் ரீதியா திமுகவுக்கு பலம் தரும்னும் பார்க்கிறாங்க. பழிவாங்கல் நடவடிக்கைனு பரப்புரை செய்ய வசதியா இருக்கும்னும் நினைக்கிறாங்க”

“நாடாளுமன்ற கட்டிட்த்துல நடந்த கூட்டத்துல வலிமையான தலைவர்னு ஜெயலலிதாவுக்கு கனிமொழி பாராட்டுப் பத்திரம் வாசிச்சிருக்காங்களே?”

“இதை திமுகல சிலர் ரசிக்கல.ஸ்டாலின்கிட்ட பஞ்சாயத்தை கொண்டு போயிருக்காங்க. ஆனா அதை பொருட்படுத்தல. முரசொலியில் ஜெயலலிதாவைப் பாராட்டி கனிமொழி பேசின பேச்சை முழுசா அப்படியே உள்ளது உள்ளபடி பிரசுரிச்சிருக்காங்க. இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கு. திமுக தலைவரோட எண்ணத்தையும் புரிய வச்சிருக்கு”

“ஆளுநருக்கு எதிரா 50 லட்சம் கையெழுத்துகளோட ஜனாதிபதியை வைகோ சந்திச்சிருக்காரே?”

“ஆமாம். 57 எம்பிக்கள் உட்பட 50 லட்சம் பேர்கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கார். இதன்மூலம் ஒரு ஆளுநருக்கு எதிரா இத்தனை கையெழுத்துகளை வாங்கினது இதுதான் முதல் முறைன்னு உலக சாதனையே படைச்சிருக்கார். இந்த கையெழுத்து படிவங்களை எல்லாம் பத்திரமாக தனது கட்சி நிர்வாகிகளை ரயிலில் எடுத்து வரச் செய்து அதை அப்படியே குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைச்சிருக்கார் வைகோ. இதுக்கு குடியரசுத் தலைவர்கிட்ட இருந்து சரியான பதில் வரலைன்னா அடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கறது பத்தியும் அவர் ஆலோசனை நடத்திட்டு வர்றாராம்”

“பாவம் அவருக்கும் ஏதாவது வேலை வேணும்ல”

“திராவிட இயக்கத்தின் போர் வாளை நீங்க கிண்டல் செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...