‘ரஷ்யாவின் கடற்படைத் தளம் மீதான உக்ரைனின் முக்கிய தாக்குதலை நான் தான் தடுத்து நிறுத்தினேன்’ என்று சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க். ‘இதன்மூலம் தனி ஒருவனாக மூன்றாம் உலகப் போரையே எலான் மஸ்க் தடுத்து நிறுத்தியுள்ளார்’ என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன!
என்ன நடந்தது? அப்படி எலான் மஸ்க் என்னதான் செய்தார்?
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இருப்பது, கருங்கடல்.
உக்ரைன், ருமேனியா, பல்கேரியா, துருக்கி, ரஷ்யா என நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல்தான் கருங்கடல். இந்த கடலில் உள்ள துறைமுகங்கள் மூலம்தான் ரஷ்யாவின் மொத்த வணிகத்தில் 25 சதவிகிதம் நடைபெறுகிறது. ரஷ்யாவின் மிக முக்கியமான கடற்படை தளமும் கருங்கடலில் தான் உள்ளது.
2022… ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக 300க்கும் மேற்பட்ட ரஷ்ய கப்பல்கள் உக்ரெய்னிய துறைமுகமான செவஸ்டபோல் நகரின் அருகே கிரிமியா பகுதியில் நங்கூரமிட்டிருந்தன. ரஷ்யாவின் கருங்கடல் பகுதி கப்பற்படையை தகர்க்க திட்டமிட்ட உக்ரைன், அமெரிக்கா உதவியுடன், இந்த 300 கப்பல்களையும் அழிக்க ஒரு ரகசிய திட்டத்தை உருவாக்கியது. ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களில் வெடிகுண்டுகளை பொருத்தி ஒவ்வொரு ரஷ்ய கப்பலுக்கும் ஒரு நீர்மூழ்கி வீதம் அனுப்புகிறார்கள். ஒவ்வொன்றும் அமெரிக்க உதவியுடன் தயாரிக்கப்பட்ட ட்ரோன் வகை நீர்மூழ்கிகள். ரேடார், சோனாரால் கண்டுபிடிக்க முடியாதவை.
நீர்மூழ்கி கப்பல்கள் ஒவ்வொன்றும் தங்கள் இலக்கு ரஷ்ய கப்பல்களை நோக்கி திட்டமிட்டபடி விரைகின்றன. கிட்டதட்ட ரஷ்யாவின் 300 கப்பல்களும் காலிதான் என்று காத்திருக்கிறார்கள் உக்ரைனும் அமெரிக்காவும்.
இந்நிலையில் ஒரு ட்விஸ்ட்…
செவஸ்டபோல் பகுதியை நீர்மூழ்கி கப்பல்கள் நெருங்கிய நிலையில் மேற்கொண்டு நகர இணையத் தொடர்பு இல்லை. அந்தப் பகுதியில் இணையத்தொடர்பை அளிக்கக்கூடிய வல்லமை உலகிலேயே ஒரே ஒருவரிடம் தான் உள்ளது. அவர் எலான் மஸ்க். ஒட்டுமொத்த உக்ரைனுக்கும் அவரது ஸ்டெர்லிங் நிறுவனம் தான் இணையத்தொடர்பு அளிக்கிறது.
எலான் மஸ்க்கை தொடர்புகொள்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். ரஷ்ய கப்பல்களை தாக்கும் ரகசிய திட்டத்தை சொல்லாமல், “செவாஸ்டபோல் வரை இணையத் தொடர்பை உக்ரெய்னிய கடற்படைக்கு அதிகரியுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், எதற்காக இந்த திடீர் கோரிக்கை என்பதை எலான் மஸ்க் யூகித்து விட்டார்,. அங்கே ரஷ்ய கருங்கடல் கப்பற்படை இருப்பதை அறிந்த அவர் விஷயத்தை சரியாக கணித்து இணையத்தொடர்பை அளிக்க மறுத்துவிட்டார். அமெரிக்க நியோகான் போர் ஆதரவாளர்களுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் எலான் மஸ்க் மேல் பயங்கர கடுப்பு.
அமெரிக்கா, ஐரோப்பா, நாட்டோ, உக்ரைன் என பல பக்கம் இருந்தும் எலான் மஸ்குக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதற்கெல்லாம் எலான் மஸ்க் அசரவில்லை. யார் பேச்சையும் கேட்காமல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டார். தமது ஸ்டெர்லிங்க் சேவையை போருக்கு பயன்படுத்துவதில் தமக்கு உடன்பாடில்லை என கூறிவிட்டார்.
மேலும், “உக்ரைனின் தாக்குதல் கண்டிப்பாக ரஷ்யா பக்கம் இருந்து தீவிர பதிலடியை வரவழைக்கும். அது அணுசக்தி தாக்குதலாகவும் இருக்கலாம்” எனவும் தன்னை தொடர்புகொண்டவர்களிடம் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம், கிரிமியன் கடற்கரையிலிருந்து 100 கிலோமீட்டருக்குள் ஸ்டெர்லிங்க் சேவையை முடக்குமாறும் தனது பொறியாளர்களுக்கு எலான் மஸ்க் ரகசியமாக உத்தரவிட்டுள்ளார்.
இணையத்தொடர்பு இல்லாததால் உக்ரைனின் ட்ரோன் நீர்மூழ்கிகள், ரஷ்ய கப்பல்களை குறிவைக்க முடியாமல் கரையில் ஒதுங்குகின்றன. ரஷ்யாவின் ஒட்டுமொத்த கப்பற்படையும் தப்புகிறது.
ஒருவேளை எலான் மஸ்க் இணையத் தொடர்பை கொடுத்திருந்தால், சந்தேகமே இல்லாமல் ரஷ்யாவின் 300 கப்பல்களும் அழிக்கப்பட்டிருக்கும். பல்லாயிரம் ரஷ்ய வீரர்கள் மரணம் அடைந்திருப்பார்கள்.
இப்படி நடந்தால் புடின் சும்மா இருப்பாரா?
எலான் மஸ்க் கவலைப்பட்டது போல், உடனே அணுகுண்டு தாக்குதலை உக்ரெய்ன் மேல் புடின் நிகழ்த்தியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள்.
ஜப்பான் மேல் அமெரிக்கா அணுகுண்டு வீச காரணமான பேல் ஹார்பர் தாக்குதலில் அமெரிக்காவின் 19 கப்பல்கள் மட்டுமே அழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
‘தன் நாட்டின் மேல் அணுகுண்டு தாக்குதலை ரஷ்யா நடத்தும் என தெரிந்தும் ஏன் உக்ரைன் அப்படி ஒரு முடிவை எடுத்தது? அமெரிக்கா ஏன் அதற்கு துணைபோனது?’ என்ற கேள்வி இப்போது பலராலும் எழுப்பப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு வீசியிருந்தால் நிச்சயம் ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போர் ஆகியிருக்கும். அதில் யார் வெற்றி பெற்றாலும், முடிவில் எவ்வளவு பெரிய அழிவு நிகழ்ந்திருக்கும். அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படாத நிலையில், எலான் மஸ்க் கவலைப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்… தனி ஒருவனாக மூன்றாம் உலகப்போரை தடுத்துள்ளார் எலான் மஸ்க்.