No menu items!

ஷங்கரின் சக்ஸஸ் ஃபார்மூலா!

ஷங்கரின் சக்ஸஸ் ஃபார்மூலா!

கலை நுணுக்கங்களுடன் போடப்பட்ட செட்டுகளில் புராண கதைகளையும், கடைவீதிகள், காலனிகளில் கருத்துகளை முன் வைக்கும் கதைகளையும் பார்த்து பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, பாரதிராஜா சினிமா செட்களுக்கு வெளியேயும் ஒரு யதார்த்த சினிமா இருக்கிறது என்று அழைத்து வந்தார்.

அதுபோலவே, 1993-ல் இதுவரை யோசித்திராத பிரம்மாண்டமான செட்கள், ஆச்சர்யப்பட வைக்கும் தொழில்நுட்பம், மிரட்டும் சண்டைக்காட்சிகள், தமிழ் சினிமா இதுவரையில்லாத அதிக பட்ஜெட் என ஒரு புதிய அலையை உருவாக்கியவர் இயக்குநர் ஷங்கர்.

பிரம்மாண்டமான இயக்குநர் என்றால் அது ஷங்கர்தான் என்ற அடையாளத்தை உருவாக்கியவர்.

தமிழ் சினிமாவின் சமகால அடையாள முகங்களில் ஒருவராக இருக்கும் ஷங்கரின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என்ன?? அவருடைய சக்ஸஸ் ஃபார்மூலா என்ன? இந்த கேள்விகளுக்கான பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

இன்றைய விறுவிறுப்பான சினிமாவில் எப்படி அப்டேட் செய்து கொள்கிறார்?

திரைக்கு வருகிற முக்கியமான அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்கே சென்று பார்த்துவிடுகிறார். இன்றைக்குள்ள சினிமா எப்படியிருக்கிறது, எதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதற்காகவே இப்படி திரையரங்குகளுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். முடிந்தவரை ப்ரிவியூ காட்சிகளுக்குச் சென்று பார்ப்பதைத் தவிர்த்துவிடுகிறார். முக்கியமான வெளிநாட்டு படங்கள் வெளியானால் அவற்றை தவறாமல் பார்த்துவிடுவார். இப்படியாக சினிமாவை பற்றிய அப்டேட் விஷயத்தில் ஷங்கர் தன்னை தயார்படுத்தி கொள்கிறார்.

கதைக்கான ஒன்லைன்னை எப்படி யோசிக்கிறார்?

ஷங்கர் தனது படத்தின் கதைக்கான ஒன்லைனை தனியாகதான் யோசிப்பார். ஒன்லைன் செட்டானதும் அது பற்றி தனது சினிமா சாராத நண்பர்கள், சினிமாவிலிருக்கும் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். அவர்கள் சொல்லும் கமெண்ட்டுகளை மனதில் வைத்துக்கொண்டு திரைக்கதையை உருவாக்குவதுதான் ஷங்கரின் ஸ்டைல். இப்படி பல கட்டங்களில் ஒவ்வொருவருடைய கமெண்ட்டுகளையும் கேட்டு முடித்தபிறகே முழு திரைக்கதையை முடிப்பார்.

கதையை எப்படி தேர்ந்தேடுக்கிறார்?

தன்னுடைய படங்கள் என்று வரும் போது அவர் இயக்கவிருக்கிற கதை இன்றைய ட்ரெண்ட்டுக்கு சரியாக அமையுமா என்பதை நன்றாக யோசித்த பிறகே அதற்கான முயற்சியில் இறங்குவதை இதுவரை கடைப்பிடித்து வருகிறார். ’அந்தக் கதையில் இறங்கிவிட்டால் பிறகு அதுவே நம்மிடம் வேலை வாங்கிவிடும். ஒவ்வொரு கதைக்கும் அதற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறேன். இதுவும் என்னுடைய பலம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ’எந்திரன்’ படத்திற்காக ரோபோக்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிகம் படித்திருக்கிறேன். என் கதைக்கு, காட்சிகளுக்கு என்னென்ன தேவையோ அது சம்பந்தமான முழுவதையும் படித்துவிடுவேன். எந்திரனில் இடம்பெற்ற குழந்தைக்கு பிரசவம் பார்க்கிற காட்சிக்காக தொப்புள் கொடி சுற்றினால் என்னவாகும் என்பதைபற்றியும் படித்த பிறகே அந்த காட்சியை ஷூட் செய்தேன்.. இப்படி ஒரு பக்கம் படத்திற்கான ரிசர்ச் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இயக்குவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.” என்கிறார் ஷங்கர்

ஷங்கர் பட பாடல்கள், சண்டைக்காட்சிகள் ஹிட்டாவது எப்படி?

ஷங்கர் படத்தின் பாடல்கள் எல்லாமே ஹிட்டாக காரணம் அவரது இசை மீதான காதல். தனது படத்தின் பாடல்களுக்கு ட்யூன் போட்ட பிறகு அதை குறைந்த பட்சம் இருநூறு முறையாவது வெவ்வேறு நேரங்களில் கேட்டுப் பார்ப்பார். அதற்கு பிறகே அந்த ட்யூனை ஓ.கே செய்வதா இல்லை வேறு ட்யூனை கேட்பதா என்பதை முடிவு செய்வார்.

தனது படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அதிக அக்கறை காட்டுவது ஷங்கரின் பழக்கம். ஒரு சண்டைக் காட்சியை ஒரு மாதம் வரை கூட ஷ¨ட் செய்வார். பாடல் காட்சியை இருபது நாட்கள் வரை ஷூட் செய்வார். அந்தளாவுக்கு பெர்ஃபெக்ஷன் பார்ப்பார். அதேநேரம் மற்ற காட்சிகளை மளமளவென முடித்துவிடுவார்.

சூப்பர் ஹீரோக்கள் கதையாக இருப்பது ஏன்?

ஷங்கருடைய படங்களில் ஹீரோ கதாபாத்திரங்கள் காமிக்ஸில் வரும் சூப்பர் ஹீரோக்களை போலதான் வடிவமைக்கப்பட்டு இருப்பதை அவருடைய படங்களில் பார்க்க முடியும்.. கமர்ஷியல் சினிமாக்களில் காட்டுவதுபோல் பில்டப் இல்லாமலே, ஷங்கரின் ஹீரோக்கள் அசத்துவார்கள். ஏன் இந்த பார்மூலா என்றால், ஷங்கர் சொல்லும் ஹீரோயிஸம் வேறுமாதிரியாக இருக்கிறது.

”மற்ற படங்கள் பற்றி எனக்கு தெரியாது. என் படங்களைப் பொறுத்தவரை ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஹீரோ மிகப் பெரிய கொள்ளையை நடத்திவிட்டு வருவார். பொதுவாகவே இந்தமாதிரியான காட்சிக்கு அடுத்த காட்சியில் ஒரு பிரம்மாண்டமான செட், அதில் நூறு பேர் இருப்பார்கள். வரிசையாக டிரம்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அதன் வழியே போனால் அங்கே ஒரு முக்கியமான நபர் உட்கார்ந்திருப்பார். இப்படிதான் வழக்கமாகக் காட்டுவோம். இதற்கு அப்படியே நேரெதிராக ஜென்டில்மேனில் ஹீரோ ஒரு அக்ரஹாரத்தில் அப்பளம் போட்டுக் கொண்டிருப்பார். இதைதான் நான் ஹீரோயிஸமாக நினைக்கிறேன். இப்படி எனக்கென ஒரு ஹீரோயிஸத்தை நான் மனதில் வைத்திருக்கிறேன். ஒரு கதை, அந்த கதையில் கதாபாத்திரத்தின் தன்மை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தமாதிரி இருக்க வேண்டுமென நினைப்பேன்.”

மனதிற்குள் வெற்றிடம், ரைட்டர்ஸ் ப்ளாக் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்?

என்னதான் வெற்றிகளை ருசித்தாலும் என்றாவது ஒரு முறை உங்களுக்குள் ஒருவிதமான வெற்றிடம் இருப்பது போன்று உணர்ந்திருக்கிறீர்களா? என்று கேட்டால், இல்லை என்கிறார்.

”அப்படியொரு வெற்றிடம் மனதிற்குள் ஏற்பட்டால் நம் கதை முடிந்துவிடும். எப்போதாவது ஒரு வெறுமை சிறிய அளவில் வரும். ஆனாலும் அதிலிருந்து உடனே வெளிவந்துவிடுவேன். ஓர் இரவுக்கு மேல் அந்த வெறுமையை எனக்குள் வைத்துக் கொள்ள மாட்டேன். காலையில் உடம்பிற்கு குளிக்கும் போதே மனதிற்கும் ஒரு குளியல் போட்டுவிட்டு அதிலிருந்து வெளிவந்துவிடுவேன். மனதை அலைப்பாய விட்டால்தான் எதை எதையோ யோசிக்கத் தோன்றும். ஐந்து நிமிடங்கள் முன்பு வரை சந்தோஷமாக இருந்தோம். இப்போது ஏன் இந்த திடீர் வெறுமை என்று யோசித்தாலே போதும். அதிலிருந்து நம்மால் சுலபமாக வெளி வந்துவிட முடியும். இப்படிதான் எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறேன்” என உற்சாகமாகிறார்.

ஷங்கருடைய சக்ஸஸ் ஃபார்மூலா என்ன?

“நேர்மைதான் வெற்றியின் ரகசியம். முன்பு வரை இதுதான் என் எண்ணமாக இருந்தது. எதையும் யோசித்துக் கொண்டே காலம் தள்ளுவதைவிட செயலில் இறங்கிப் பார். எதுவும் சுலபம்தான் என்ற எண்ணம் இப்போது வந்திருக்கிறது. மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அண்ணாந்துப் பார்த்தால் உயரமாக தெரியும். அதை நினைத்து பயப்படாமல், அதில் ஏறுவதற்கான சரியான முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினால் போதுமானது. இறுதியில் சிகரத்தை எட்டிவிட முடியும். இதுதான் இன்று என்னுடைய வெற்றியின் மந்திரம்.” என்பது ஷங்கரின் அனுபவ வார்த்தைகளாக இருக்கின்றன.

ஒரு படத்தின் ஷ¨ட்டிங் முடிந்து ரிலீஸானதுமே அடுத்தப் படத்திற்கான டிஸ்கஷனில் உட்கார்ந்துவிடுவார். ரிலாக்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு டிஸ்கஷனை ஆரம்பித்துவிடுவார். இரவு ஒன்பது மணி வரை இது தொடரும். தினமும் இப்படிதான். அந்தளவிற்கு வேலைப் பார்ப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.

விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கிறார்?

“விமர்சனங்களை ஒரு சிலர் முன்வைக்கின்றனர். மீதியிருக்கிற பெரும்பான்மையானவர்கள் ஆடியன்ஸ். அவர்கள் காட்டும் ஆதரவும், கொடுக்கும் உற்சாகமும் என்னை முன்னோக்கி செயல்பட உந்துதலாக இருக்கிறது. விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்படுகிற விஷயங்களை அடுத்தப் படத்தில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்கிறேன். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டால் அது நமக்குதான் பலம். இதையெல்லாம் மீறி குறை இல்லாத மனிதன் இல்லை. குறை இல்லாத படைப்புகள் இல்லை. அந்த குறைகளை சரிபண்ணுகிற பக்குவம் நம்மிடம்தானே இருக்கிறது. விமர்சனங்களில் உண்மை இருக்கிறது என்றால் அதை எடுத்துக் கொள்வேன். சிலவற்றில் வேண்டுமென்றே சொல்கிறார்கள் என்றால் அதை எடுத்துகொள்வதில்லை. நம்மை காக்கிறதா இல்லை சீண்டிப் பார்க்க உதவுகிறதா இல்லை நமக்கு தெரியாத விஷயத்தைச் சொல்கிறதா என்று அதன் தன்மையைப் பொறுத்து, நாம் எடுத்துக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.” என தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கூர்ந்து நோக்குவதை இன்றும் தொடர்கிறார் ஷங்கர்.

ஷங்கருக்கு எதிரே இருக்கும் சவால் என்ன?

“நம்முடைய கற்பனைகளுக்கு எல்லையே இல்லை. உலகிலிருக்கும் மற்ற எந்த படைப்பாளிகளையும் விட அபாரமாக யோசிக்கக்கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது. ஆனால் அதை எடுப்பதற்கான பட்ஜெட்டும், நாம் நினைப்பதை கொடுப்பதற்கான தொழில்நுட்பங்களும் நம்மிடம் இல்லாததுதான் நமக்கு எதிரேயுள்ள சவால்கள்’’ என்கிறார் ஷங்கர்

இதை அவர் சொல்வதற்கு முக்கிய காரணம், ஹாலிவுட்டில் ஒவ்வொரு துறைக்கும் என தனித்தனி எக்ஸ்பர்ட்கள் இருக்கிறார்கள். இங்கே இயக்குநர்கள்தான் அனைத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஹாலிவுட்டை போல் இங்கேயும் எக்ஸ்பர்ட்கள் உருவாகவேண்டும். அவர்களை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் நாமும் கூட சுலபமாக மிகப்பெரிய உயரத்தைத் தொடமுடியும் என்பது ஷங்கரின் கருத்து.

பெரும் அங்கீகாரமாக நினைப்பது?

“இதுவரை நான் இயக்கிய படங்களிலிலேயே எந்திரனுக்குதான் அதிக பாராட்டுக்கள், முதல் முறையாக இயக்குநர் சிகரம் பாலசந்தர் சார் முதன் முறையாக என்னைப் பாராட்டி கடிதம் அனுப்பியிருக்கிறார். நான் சினிமாவுக்குள் நுழையும் போது நினைத்தது இதுதான். பாலசந்தர் சார் இருபத்தைந்து வருடங்கள் இதே சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். குறைந்தபட்சம் பதினைந்து வருடங்களாவது நாம் சினிமாவில் நிலைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு நுழைந்தேன். நான் யாரை அளவுக்கோலாக வைத்துக் கொண்டு வந்தேனோ அவரே என்னைப் பாராட்டி அனுப்பிய கடிதம் ஆஸ்காரை விட பெரியது. வடக்கிலும் எந்திரனைக் கொண்டாடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. நிறைவாக இருக்கிறது மனது.”

ஹாலிவுட் படங்கள் இயக்கும் எண்ணமிருக்கிறதா

’எந்திரன்’, ‘2.0’, ‘இப்போது ‘இந்தியன்-2’ தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ என பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து இயக்குவதால், ’ஹாலிவுட் படங்கள் இயக்கும் எண்ணமிருக்கிறதா?’ என்ற கேள்வியை முன்வைத்தால், “’ஜீன்ஸ்’ படத்தை எடுக்கும்போதே உங்களிடம் ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். அப்போது இருந்த வேலைகளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதற்கு பிறகு இங்கேயே படவேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். இனி புதிய வாய்ப்புகள் வரலாம். நான் எதற்கும் ஓபனாகதான் இருக்கிறேன். இப்போது செய்ததைவிட அதிகம் தமிழிலிலேயே செய்ய முடியுமென்றால் ரொம்ப சந்தோஷம். பார்க்கலாம்.” என்று புன்னகைக்கிறார் ஷங்கர்.

ஷங்கருக்குப் பிடித்த தாரக மந்திரம் ’வாட் நெக்ஸ்ட்’

”நாலைந்து படங்கள் பண்ணி முடித்ததும், இனிமேல் என்ன பண்ண போகிறார் என்று எல்லோருமே கேட்டார்கள். ’முதல்வன்’ படத்தில் தொடங்கியது போய் இன்று வரை வந்திருக்கிறேன். வாட் நெக்ஸ்ட்.. வாட் நெக்ஸ்ட்.. என்று கேட்கும் போதெல்லாம் ஒவ்வொன்றையும் தாண்டி வந்திருக்கிறேன். கற்பனை பெரிய சமுத்திரம் மாதிரி. அதிலிருந்து நமக்கு தேவையான மீனைப் பிடித்துவிடலாம்.” என்றபடியே புன்னகைக்கிறார்.

ஷங்கர் பற்றிய ஒரு கொசுறு தகவல்:

ஷங்கரின் ராசியான எண் எட்டு. கார் எண், மொபைல் போன் எண், படத்தின் ரிலீஸ் தேதி என எல்லாமே எட்டு வருகிற மாதிரி பார்த்துக் கொள்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...