No menu items!

இந்தியா To பாரதம் – பேரும் சோறும்!

இந்தியா To பாரதம் – பேரும் சோறும்!

இந்தியா என்கிற பெயர் பாரதிய ஜனதாவுக்கு ஏற்கெனவே வேப்பங்காய், பாகற்காய். இந்த அழகில் இருபத்தாறு கட்சிகள் ஒன்று கூடி, இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணி அமைத்தாலும் அமைத்தன, அதன்மூலம் அழகாக ஆரம்பித்து விட்டது ‘இந்தியாவின் பெயர் இனிமேல் பாரதம்’ என்கின்ற புதிய சர்ச்சை.

பெயர் மாற்றங்கள் எல்லாம் மத்திய, மாநில பாரதிய ஜனதா அரசுகளுக்கு ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே டெல்லி மொகல் தோட்டத்தை அம்ரித் உத்யானாகவும், அலகாபாத்தை பிரயாக்ராஜ்ஜாகவும், ஔரங்காபாத்தை சத்ரபதி சாம்பாஜி நகராகவும் மாற்றியவர்கள்தான் அவர்கள்.

அந்த வரிசையில் பூத்திருக்கும் ஒரு புதிய மெகா சர்ச்சைதான் பாரதம் என்ற பெயர் மாற்றப் பிரச்சினை. என்ன ஒன்று? இந்தமுறை பிரச்சினை கொஞ்சம் பெரிய பிரச்சினை.

ஜி20 உச்சிமாநாட்டு விருந்துக்கான அழைப்பிதழில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடாமல் பாரத குடியரசுத் தலைவர் எனப் போட்டதன் மூலம், இனிதே ஆரம்பித்திருக்கிறது இந்த சர்ச்சை.

‘இனிமேல் இந்தியா என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சொல்ல, பாரதிய ஜனதா எம்.பி. ஒருவர், ‘இந்தியாவை இந்தியா என்று பைத்தியங்கள்தான் அழைக்கும்’ என்று சொல்ல, இந்தப் பிரச்சினை ஏகத்துக்கும் சூடு பிடித்திருக்கிறது.

‘கிழக்கு இந்திய கம்பெனி, இந்திய முஜாகிதின் என எல்லாவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அவ்வளவு ஏன்? இந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயர்கூட ஒரு வெளிநாட்டவர் வைத்த பெயர்தான். ஆக, இந்தியா என்பது வெளிநாட்டவர்கள் வைத்த பெயர். அந்தப் பெயர் நமக்கு எதற்கு? பாரதம் என்பதே நம் நாட்டுக்கான சரியான பெயர்‘ என்பது பா.ஜ.க மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் கருத்து.
‘இதில் என்னங்க பிரச்சினை? இந்திய அரசியல் சட்டத்திலேயே இந்தியா அதுதான் பாரதம் என்றுதானே இருக்கிறது? இந்தியா என்ற பெயர் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்பட்டாலும், அவ்வப்போது பாரதம் என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டு தானே வருகிறது? நேரு அவரது டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில் இந்தியா, பாரதம், இந்துஸ்தான் என்ற மூன்று சொற்களையும் பயன்படுத்துகிறாரே? இந்தியா என்ற பெயர்தானே வெளிநாட்டவர்களுக்குத் தெரியும்? பன்முகத் தன்மைதானே இந்தியாவுக்கு அழகு?’ என்று ‘இந்திய’ ஆதரவாளர்கள் கூறினாலும், அதை ‘பாரத’ ஆதரவாளர்கள் ஏற்பதாக இல்லை.

‘இந்தியா என்ற பெயர் காலனித்துவ அடிமைத்தனத்தின் இறுதி அடையாளம். பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள பாரதம் என்ற சொல்லே நம் நாட்டுக்கான சரியான பெயர்’ என்கிறார்கள் பாரத ஆதரவாளர்கள்.

‘பாரதம் என்பதும் இந்தியாவின் அதிகாரபூர்வமான இரண்டு பெயர்களில் ஒரு பெயர்தான். உலக அளவில் அங்கீகாரம் பெற்ற பெயர் இந்தியாதான். அந்தப் பெயர் மதிப்பிட முடியாத ஒரு பிராண்ட்நேம். பல நூற்றாண்டுகால மதிப்புள்ள பெயர். அந்தப் பெயரை மாற்றி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?’ என்பது ‘இந்திய’ ஆதரவாளர்களின் கேள்வி.

சரி. இந்த பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது? ‘ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரத கண்டே’ என்கிறது ஒரு பழைய மந்திரம்.

உலகில் இருந்த ஏழு த்வீபங்களில் ஒன்று ஜம்புத்வீபம். தமிழில் நாவலந்தீவு என்பது இதற்கு அர்த்தம். நாவல்மரங்கள் செழித்து வளர்ந்திருந்த பகுதி இது. இந்த நாவலந்தீவில் 9 பகுதிகள் இருந்தன. இந்தியா, ரஷியா, சீனா, மங்கோலியா, மங்சூரியா, திபேத், அரேபியா, துருக்கி எல்லாம் இந்த நாவலந்தீவில் உள்ளடக்கம்.

அதன்படி இந்தியா அமைந்திருந்த பகுதிதான் பாரதவர்ஷே. இந்த பாரதவர்ஷத்தின் எல்லைகளைப் பார்த்தால் அதில் ஓர் எல்லை, இந்தோனேசியாவில் போய் முட்டும். காரணம் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கூட பாரதவர்ஷத்தில் அடக்கம்.

இந்த பாரதவர்ஷே என்ற பெயரில் இருந்து வந்ததுதான் பாரதம் என்ற பெயர். துஷ்யந்தன்-சகுந்தலையின் மகன் பரதன் ஆண்டதால் இந்த நிலப்பரப்புக்கு பாரதம் என்ற பெயர் வந்ததாகச் சொல்வார்கள். தெற்குக் கடலில் இருந்து வடக்குப் பனிவரையுள்ள இடம் பாரதம் என்ற கருத்தும் உண்டு. அதாவது, ‘கடலுக்கு வடக்கே, இமயத்துக்கு தெற்கே பாரதியர்கள் வாழும் பகுதி பாரத வர்ஷம்’ என்கிறது விஷ்ணு புராணம்.

வேதம், உபநிஷத்துகள், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இந்தியா பாரதம் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆகவே பாரதம் என்ற பெயரே இந்தியாவுக்கான சரியான பெயர்’ என்கிறார்கள் பாரத ஆதரவாளர்கள்.

சரி. இப்போது இந்தியா என்ற பெயருக்கு வருவோம். அரேபியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள் எல்லாம் சிந்து நதியை, இந்து நதி என்பார்கள். இந்த, இந்து நதிக்கு தென்கிழக்கே இருந்த பகுதி இந்தியா. இப்படித்தான் இந்தியாவுக்கு இந்தியா என்ற பெயர் வந்திருக்கிறது.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் எஸ்தர் ஆகமம், ‘இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரை’ எனத் தொடங்குகிறது. கிரேக்க நாட்டின் தூதுவராக இந்தியாவில் இருந்தவர் மெகஸ்தனிஸ். இவர் எழுதிய நூல் இண்டிகா. இந்த இண்டிகா என்ற பெயர் இந்தியாவைக் குறிக்கிறது.

வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹெரோடடாஸ், அல் பிரூனி உள்பட பலர், இந்தியாவை, இந்தியா என்றுதான் பதிவு செய்திருக்கிறார்கள். ஆங்கில நாடகமேதை ஷேக்ஸ்பியர் அவரது நாடகம் ஒன்றில் ‘இந்திய உலோகம்’ என்று தங்கத்தைக் குறிப்பிடுகிறார். சீன மொழியில் யின்-டு (இந்தியா) என்பதுதான் இந்தியாவின் பெயர்.

‘பாரதம் என்பது பழமையான பெயர்தான். ஆனால் அது புவியியல் ரீதியான சரியான பெயர் அல்ல. அது ஒரு சமூக பண்பாட்டு அடையாளம். ஆகவே, இந்தியா என்பதுதான் சரியான பெயர். பாரதம், இந்தியா ஆகிய பெயர்கள் ஒன்றையொன்று நிராகரிக்கவில்லையே? இந்த இரண்டு பெயர்களும் வரலாற்றைத் தொடர்ச்சியாக பிரதிபலித்து வருகின்றன’ என்கிறார்கள் இந்திய ஆதரவாளர்கள்.

‘நாம் பாரத் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தியா என்றால்தான் வெளிநாட்டவர்களுக்குத் தெரியும்?’ என்று அண்மையில் கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஆனால் இது எதுவும் பாரத ஆதரவாளர்களின் காதில் நுழைந்ததாகத் தெரியவில்லை. ‘இந்தியா என்பது பாரசீகச் சொல். இந்துஸ்தான் என்பது உருதுச் சொல். பாரதம் என்பது சமஸ்கிருதச் சொல். ஆகவே பாரதம் என்பதே வேண்டும். இந்தியா வேண்டாம்’ என்பது அவர்களது கருத்து.

அண்மை காலத்தில் பலநாடுகள் பெயர்களை மாற்றியிருக்கின்றன. துருக்கி, துருக்கியேவாக மாறியிருக்கிறது. செக் குடியரசு, செக்கியாவாக உருமாறி இருக்கிறது. ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்து, எஸ்வட்டினி எனப் பெயரை மாற்றியிருக்கிறது. ஹாலந்து நாடு நெதர்லாந்தாக பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. இந்த வரிசையில்தான் இந்தியாவை இப்போது பாரதமாக மாற்ற முயற்சி நடக்கிறது.

ஒரு நாட்டின் பெயரை புதிதாக மாற்றும்போது அந்த பெயர் சூட்டு பெருவிழா, ஏதோ காகிதத்தில் மட்டும் முடிந்து விடுகிற கதை அல்ல. ஒரு நாட்டின் பெயரை மாற்றினால் அதற்கு ஏகப்பட்ட செலவாகும்.

இந்தியா ஒருவேளை பாரதமானால், சொத்து ஆவணங்கள், அஞ்சல் முத்திரைத் தாள்களில் நாட்டின் பெயரை மாற்றியாக வேண்டும். பாஸ்போர்ட் என்ற கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமங்களில் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்.

பணத்தாள்களில் பெயர் மாற்ற வேண்டும். செயில், கெயில், கோல் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்கள், இந்தியன் வங்கி போன்ற வங்கிகளின் பெயர்கள், ஐ.ஐ.டி போன்ற கல்விநிறுவனங்களின் பெயர்களை மாற்றியாக வேண்டும்.

ஆக மொத்தம், ‘இந்தியா பாரதமாக மாற, 14 ஆயிரத்து 034 கோடி செலவாகும்’ என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயத்தில் மேற்கு வங்க மாநில எம்.பி.யான மஹூவா மொய்த்ரா தெரிவித்த கருத்து அலாதியானது.

‘அலகாபாத்தின் பெயர் மாற்ற 300 கோடி செலவு. ஔரங்காபாத்தின் பெயர் மாற்ற 500 கோடி செலவு. அப்படியிருக்க இந்தியாவுக்குப் பெயர் மாற்ற எத்தனைக் கோடி செலவாகுமோ?’ என்று அவர் கேட்டிருக்கிறார். ‘எதிர்க்கட்சிகள் இந்தியா என்று கூட்டணிக்குப் பெயர் வைத்தது ஒரு குற்றமா? இந்த பெயர் மாற்ற முயற்சி, ஒரு பைத்தியக்கார முயற்சி’ என்றும் மொய்த்ரா குறிப்பிட்டு இருக்கிறார்.

2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த பெயர் மாற்ற சர்ச்சை பெரிதாக வெடித்திருக்கிறது. ‘பெயர் மாற்றப் போவதாக சொல்வது வெறும் வதந்திதான்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறினாலும், இந்தமாதம் 18-ம் தேதி ஆரம்பமாக இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இப்போதே பரபரப்பைக் கிளற ஆரம்பித்து விட்டது. அதில் இந்த பெயர் மாற்றப் பிரச்சினை பெரிதாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர், அவரது ரோமியோ ஜூலியட் நாடகத்தில் எழுதிய புகழ்பெற்ற வசனம் ஒன்று இருக்கிறது. ‘பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது ரோஜாதானே?’ என எழுதியிருப்பார் ஷேக்ஸ்பியர்.

ஆனால், இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் பெயரில்தான் எல்லாமே இருக்கிறது.

நாட்டின் பெயரை மாற்றுவதால் பெரிதாக எந்த பயனும் வந்து வாய்க்கப் போவதில்லை. ஒரு நாட்டின் பெயர் மாறுவதை விட அந்த நாட்டில் வாழும் ஏழைகளின் நிலை மாறுவதுதான் சரியானது.

அப்படி இல்லாவிட்டால், ‘பேரு வச்சியே, சோறு வச்சியா?’ என வெளிநாடுகள் ஏளனம் செய்யும் நிலைதான் வந்து சேரும். இப்படி சொல்லி நாம் முடித்துக் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...