No menu items!

பாய்ந்த 10 கோடி சாமியார் பதுங்கும் திமுக – மிஸ் ரகசியா

பாய்ந்த 10 கோடி சாமியார் பதுங்கும் திமுக – மிஸ் ரகசியா

கிருஷ்ண ஜெயந்திக்காக வீட்டில் செய்த தட்டை, சீடை, தேன்குழல் போன்ற பலகாரங்களுடன் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. கொண்டுவந்த கவரை அப்படியே டேபிளில் வைத்தாள். “நாட்டில் ஆன்மிகம் தழைத்து ஓங்குகிறது போல…” என்றவாறு சீடையை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டோம்.

“இது ஒண்ணும் தேர்தலுக்காக வர்ற பக்தி இல்லை. காலம் காலமா இருக்கிறது” என்று முறைத்தாள் ரகசியா.

“சனாதனத்தைப் போல காலம், காலமா இருக்கற விஷயமா?” என்றதும் ரகசியாவின் முறைப்பின் உக்கிரம் கூடியது.

“சனாதன விவகாரம் பற்றி நியூஸ் வேணும்னா நேரடியா கேட்க வேண்டியதுதானே… இப்படி என்னை வம்புக்கு இழுக்கணுமா?”

“உதயநிதியோட பேச்சுக்கு முதல்வர் விளக்கம் கொடுத்திருக்கிறாரே?’

“ஆரம்பத்துல இதுக்கு விளக்கம் கொடுக்க வேணாம்னுதான் முதல்வர் நினைச்சிருந்தார். ஆனா கூட்டணி கட்சிகள்கிட்ட இருந்து வந்த பிரஷரால இந்த விளக்கத்தை கொடுத்திருக்கார்.?”

“கூட்டணியில யார் பிரஷர் கொடுத்தா?”

“வட இந்தியாவைச் சேர்ந்த பல கட்சிகள் முதல்வருக்கு பிரஷர் கொடுத்திருக்கு. தமிழ்நாட்டைவிட வட மாநிலங்கள்ல மதமும் ஜாதியும் தேர்தல்ல முக்கிய பங்கு வகிக்குது. அதனால உதயநிதியோட கருத்தை இந்தியா கூட்டணிக்கு எதிரான அஸ்திரமா பாஜக பயன்படுத்த திட்டமிட்டிருக்கு. மத்திய அமைச்சரவை கூட்டத்துலகூட இதைப்பத்தி பிரதமர் விவாதிச்சு இருக்கிறதா சொல்றாங்க. இது இந்தியா கூட்டணியோட வட மாநில தலைவர்களுக்கு தலைவலியைக் கொடுத்திருக்கு. மம்தாவும், அரவிந்த் கேஜ்ரிவாலும் உதயநிதி பேச்சுக்கு எதிரா முதல்லயே கருத்து சொல்லிட்டாங்க. ராகுல் காந்தியும் உதயநிதி பேச்சைப் பற்றி வருத்தம் தெரிவிச்சாராம்?”

“அவர் முதல்வர்கிட்ட பேசினாரா?”

“முதல்வர்கிட்ட அவர் நேரடியா பேசல. ஆனா கனிமொழி கிட்டயும், டி.ஆர்.பாலுகிட்டயும் பேசி இருக்கார். இதுபத்தி கனிமொழிகிட்ட போன்ல பேசின ராகுல் காந்தி, ‘முதல்வர் ஸ்டாலினோட தீவிர பாரதிய ஜனதா எதிர்ப்பைப் பார்த்து நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனா இப்ப உதயநிதி ஸ்டாலினோட சனாதனம் தொடர்பான பேச்சு அரசியல் ரீதியா பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழலையும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு பாதகமான சூழலையும் ஏற்படுத்தி இருக்கு. இதை ஸ்டாலின்கிட்ட சொல்லுங்க’ன்னு சொல்லி இருக்கார். இதே கருத்தை டி.ஆர்.பாலுகிட்டயும் அவர் சொல்லி இருக்கார். ராகுல்காந்தி தன்கிட்ட பேசினதைப் பத்தி ஸ்டாலின்கிட்ட கனிமொழி ஏதும் சொல்லலை. ஆனா டி.ஆர்.பாலு அதுபத்தி ஸ்டாலின்கிட்ட சொல்லி இருக்கார். இதே கருத்தை பல வட இந்திய தலைவர்களும் ஸ்டாலின்கிட்ட சொல்லி இருக்காங்க. அதனாலதான் உதயநிதியோட பேச்சுக்கு முதல்வர் விளக்கம் கொடுத்திருக்கார். அதோட கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு நேர்லயும் விளக்கம் கொடுக்க திட்டமிட்டிருக்கார்.”

“கூட்டணிக் கட்சிகள் கருத்துக்கு திமுக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குதா?”

“கூட்டணிக் கட்சிகள் மட்டுமில்லை, பிரதமரும் இதைப் பத்தி பேசியிருக்கிறார்னதும் முதல்வர் விளக்கம் கொடுக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். அது மட்டுமில்லாம திமுகவுக்கு ஆலோசனை சொல்றவங்க சிலரும் இதை பெரிசாக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்க”

“ஏன்?”

”ஏற்கனவே இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுகன்ற பிம்பத்தை பாஜக கட்டமைக்குது. அதுக்கு இது மாதிரி பேச்செல்லாம் அவங்களுக்கு உதவும். அதனால மெதுவா இதுலருந்து வெளில வந்துரணும்னு சில மூத்த பத்திரிகையாளர்கள் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஆலோசனை சொல்லியிருக்காங்க. அதனாலதான் உதயநிதி தலைக்கு 10 கோடி கேட்ட சாமியார் மேல ஆக்‌ஷன் எதுவும் எடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. இங்கருந்து போலீஸ் போய் சாமியாரை அரெஸ்ட் பண்ணாலாம்னு சில அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. ஆனா, இந்த பத்திரிகையாளர்கள்தாம் அதெல்லாம் வேண்டாம். தேசிய அளவுல பாதிப்பு இருக்கும். அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லியிருக்காங்க. அதனாலதான் சாமியார் மேல நடவடிக்கை எதுவும் தொடங்கல”

“கூட்டணி கட்சித் தலைவர்கள் கிட்ட நேர்ல எப்ப விளக்கம் கொடுக்கறாராம் திமுக தலைவர்?”

“ஜி20 மாநாட்டுல கலந்துக்கற தலைவர்களுக்கு ஜனாதிபதி கொடுக்கப்போற விருந்துல முதல்வர் கலந்துக்கறாரு. அந்த விருந்துக்காக டெல்லிக்கு போகும்போது எதிர்க்கட்சி தலைவர்கள்கிட்ட இதைப் பத்தி பேசலாம்னு முதல்வர் திட்டமிட்டிருக்காரு. வட இந்தியாவுலதான் இப்படி எதிர்ப்பு இருக்கு. தமிழ்நாட்டுல சனாதனத்தை எதிர்த்து பேசுன உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவு கூடியிருக்குன்றதையும் அவங்ககிட்ட சொல்லப் போகிறார்”

“உதயநிதி ஸ்டாலின் மேல வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநர்கிட்ட தமிழக பாஜக மனு தந்திருக்கே?”

“நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்துல ஆளுநர் பத்தி ஏகவசனத்துல பேசினாரு உதயநிதி. ஆளுநர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு தேர்தல்ல நிக்க தயாரான்னும் சவால் விட்டார். அந்த கோபம் ஆளுநர் மனசுல இன்னும் இருக்கு. அதுக்கு பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இப்ப உதயநிதி மேல வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநர்கிட்ட பாஜக மனு கொடுத்திருக்கு. சுப்பிரமணியசாமியும் வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கார். ஆளுநரும் இதுக்கு அனுமதி கொடுக்கற மூட்ல இருக்காராம். உள்துறை அமைச்சர்கிட்ட இதுபத்தி பேச, அவரும் ஓகே சொல்லிட்டாராம். இப்ப அதை சட்டப்படி எப்படி செய்யறதுன்னு சட்ட நிபுணர்களோட ஆலோசனை நடத்திட்டு வர்றாராம் ஆளுநர்.”

“இதுக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?”

“கைது பண்ணா நல்லதுதான்னு நினைக்கிறாங்க. ஆளுநர் தமிழ்நாட்டு அரசுக்கு எதிரா செயல்படுறது தேர்தல்ல ஓட்டு வாங்கித் தரும்னு கணக்குப் போடுறாங்க. ஆளுநரின் நடவடிக்கைகளை மக்கள் ரசிக்கலன்ற ரிப்போர்ட் அவங்களுக்கு வந்திருக்கு”

“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரும் விஷயத்தில் முதல்வரே முடிவு எடுக்கலாம்னு நீதிமன்றம் சொல்லி இருக்கே?”

“அப்படி தீர்ப்பு சொன்னாலும், அவர் அமைச்சரா தொடர்றது தப்புன்னு சுட்டிக் காட்டி இருக்கு. அதனால செந்தில் பாலாஜி தானா முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யணும்னு முதல்வரே அவருக்கு வேண்டியங்க மூலமா தகவல் சொல்லி அனுப்பி இருக்காராம். செந்தில்பாலாஜி என்ன செய்யப்போறார்ங்கிறது இப்போதைக்கு சஸ்பென்ஸா இருக்கு.”

“விஜயலட்சுமி விவகாரத்துல சீமானை கைது செய்வாங்களா… மாட்டாங்களா?”

“முழுமையான ஆதாரங்கள் கிடைக்காம சீமானை கைது செஞ்சா, அது தேர்தல்ல அவருக்கு சாதகமான அம்சமா ஆகிடும்னு திமுக தலைமை நினைக்குது. அதனால முழுமையான ஆதாரங்களை திரட்டின பிறகு கைது செய்யலாம்னு இருக்காங்க. அதுக்கான நடவடிக்கைகளை போலீஸார் எடுத்துட்டு இருக்காங்க. ஆதாரங்கள் கிடைக்கறதை வச்சு கைது நடவடிக்கை இருக்கும். அதுல இன்னொரு மேட்டரும் இருக்கு”

“சமீபத்துல சீமான் திமுகவுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருக்கிறார் என்பதையும் திமுக கவனிச்சுக்கிட்டு இருக்கு. மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு, சனாதனம் பத்தி உதயநிதி பேசுனதுக்கு ஆதரவுனு பேசுறதுல திமுகவுக்கு கொஞ்சம் சந்தோஷம்”

“திமுகவையும் கடுமையா விமர்சனம் பண்ணிட்டுதானே இருக்கிறார்”

“ஆமாம். அதை எப்படி திடீர்னு விட முடியும். ஆனா பாஜகவையும் அண்ணாமலையையும் கடுமையா விமர்சிக்கிறார் அதைப் பாருங்க. விஜயலட்சுமி மேட்டர்ல பாஜகதான் பின்னணில இருக்குனு சீமான் சந்தேகப்படுறார். அதனாலதான் பாஜக மேல இத்தனை ஆக்ரோஷமா விமர்சனம் வைக்கிறார்”

“ஆமைக் கறி சாப்பிட்டு பிரபாகரன் கூட சேர்ந்து சிங்களப் படைகளை ஓட ஓட விரட்டுனவர் விஜயலட்சுமியை விரட்டிட மாட்டாரா?”

“ஒரு பச்சைத் தமிழனைப் பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...